கடந்த 71 வருடங்களில் எதை அடைவதில் ஸ்ரீலங்கா தோல்வி அடைந்துள்ளது?

வித்யா அபேகுணவர்தன —

சுதந்திரமடைந்ததின் பின்னர் ஸ்ரீலங்கா தனது 71வது பிறந்த தினத்தை பெப்ரவரி 4, 2019ல் -கொண்டாடுவதற்குத் தயாராகி வருகிறது. இதேவருடம் மூன்று தசாப்தங்களாக நாட்டை பிடித்தாட்டிய நீண்ட உள்நாட்டு யுத்தத்தை 2009ல் முடிவுக்கு கொண்டுவந்த 10வது ஆண்டு நிறைவையும் அது கொண்டாடப் போகிறது.. 1948ல் அடைந்த சுதந்திரம் முதல் மற்றும் ஸ்ரீலங்காவில் மூன்று தசாப்தங்கள் நீண்ட உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னரும் நாடு அதன் குடிமக்களின் மனிதப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் என்பனவற்றில் உண்மையில் தொடர்ச்சியான முன்னேற்றம் அடைந்துள்ளதா என்பது பற்றி ஆராயவேண்டிய தேவை உள்ளது?

சுதந்திரத்துக்குப் பின்னும் மற்றும் யுத்தத்தின் பின்னும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுடன் இணைந்த தமது சொந்த அரசியல் அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டிருந்தன.அத்தகைய ஒட்டுமொத்த திட்டங்களும் அடிப்படை மனித பாதுகாப்புத்துறையின் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்பதில் தோல்வியையே கண்டன. கடந்த காலத்தில் அவர்கள் செய்தவை மற்றும் விசேடமாக அவை தொடர்ச்சியான அடிப்படையில் தீவிரமான சமூக பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை என்பனவற்றுக்கு முகம் கொடுக்கும் சமயங்களில் தோல்வியைச் சந்தித்திருக்கும்போது, கொண்டாட்டங்கள் எப்போதும் தேசத்துக்கு செழிப்பைக் கொண்டு வராது.

கடந்த 71 வருடங்களாக, ஸ்ரீலங்கா வன்முறையான நீண்ட மோதல்கள், இயற்கை அனர்த்தங்கள், தொற்று நோய்கள், நிலையான வறுமை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் மனித பாதுகாப்பு மற்றும் தேசத்தின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான அதிக செலவை ஏற்படுத்தும் ஒரு பலவீனமான சமாதானம் என்பனவற்றையே அனுபவித்து வருகின்றது. இந்தக் காலத்தின்போது பதவிக்கு வந்த பெரும்பான்மையான அரசாங்கங்கள், நாட்டில் உள்ள வறிய வரியிறுப்பாளர்களைப் பாதிக்கும் பாரிய ஊழல் குற்றங்களையே விட்டுச் சென்றுள்ளன. கடந்த 71 வருடங்களாக பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடித்த எந்த ஒரு அரசியல்வாதியையும் தண்டிப்பதற்கு ஸ்ரீலங்கா தவறிவிட்டது. 2018ம் ஆண்டின் ஊழல் புலனுணர்வு சுட்டெண் (சி.பி.ஐ) தரப்படுத்தலில் ஸ்ரீலங்காவுக்கு 89வது இடம் கிடைத்துள்ளதுடன் நாடு முன்னேற்றத்தைக் காண்பிக்கவும் தவறிவிட்டது.

மனித பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் என்றால் என்ன?

ஐநா பொதுச்சபை தீர்மானம் 66ஃ290 ன்படி”மனித பாதுகாப்பு என்பது தனது அங்கத்துவ நாடுகளுக்கு அதன் மக்களின் உயிர்வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் கண்ணியம் என்பனவற்றின் பரவலான மற்றும் குறுக்கு வெட்டு சவால்களை அடையாளம் கண்டு தீர்த்து வைப்பதற்கு உதவுதல்”. அது மக்கள் மையப்படுத்தப்பட்ட விரிவான, அனைவரினதும் பாதுகாப்பையும் அதிகாரத்தையும் வலுப்படுத்த உதவும் தனித்துவமான தடுப்பு சார்பான பதில்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

சமீபத்தைய அறிக்கைகள் வெளிப்படுத்துவது, உலகின் வாழ்க்கைத்தரத்தில் நான்வது வருடமும் தொடர்ந்து கனடா முதலிடம் வகிக்கிறது என்று. நாடுகளின் தரவரிசையை தீர்மானிப்பதற்கு ஒன்பது அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன: இயலக்கூடிய விலை, ஒரு நல்ல வேலைவாய்ப்புச் சந்தை, நிலையான பொருளாதாரம், குடும்ப நட்புறவு, வருமான சமத்துவம்,அரசியல் ரீதியாக ஸ்திரம்,பாதுகாப்பு, நன்கு முன்னேற்றமடைந்த பொதுக் கல்வி முறை மற்றும் நன்கு அபிவிருத்தியடைந்த சுகாதார முறை என்பனவே அவை.

தோல்வியடைந்த அரசியல் திட்டங்கள் பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்தவை

சுதந்திரம் மற்றும் போருக்குப் பிந்தைய ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மனித பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத்தரம் என்பனவற்றை அரிதாகவே முன்னேற்றின. குறிப்பாக 2009ல் முடிவடைந்த மூன்று தசாப்தங்கள் நீண்ட யுத்தத்துக்குப் பின்னான ஸ்ரீலங்கா மனித பாதுகாப்புத் துறை சீரமைப்புக்கான சீரமைப்பு நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கவில்லை. சுகாதாரம், கல்வி,வேலைச் சந்தை, பொதுப் போக்குவரத்து, விசேட தேவைக்குரியோருக்கான உதவி, வீட்டு வசதி, சமூக பாதுகாப்பு போன்றவற்றையே அவை பிரதானமாக உள்ளடக்கியிருந்தன. கடந்த 71 வருடங்களாக இந்தத் துறைகளின் அபிவிருத்திக்காக ஸ்ரீலங்கா பில்லியன் கணக்கான ரூபாய்களைச் செலவிட்டிருக்கலாம் மற்றும் கேள்வி என்னவென்றால் இந்த துறைகளில் ஏதாவது ஒன்றாவது இன்றைய சர்வதேச தரத்துக்கு இணையாக உள்ளதா? 2009ல் யுத்தம் முடிவடைந்த பின்னர் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் பற்றிய விவாதம் முக்கிய பிரச்சினையாக இல்லை, ஆனால் பிரச்சினையாக இருப்பது “மனித பாதுகாப்புத்தான்”.

சுகதாரம் மற்றும் கல்வி ஆகிய இரண்டும் சுதந்திரத்துக்கு முன்பே ஸ்ரீலங்காவில் பொதுச் சொத்தாக இருந்தன. சேவை வழங்கல் அடிப்படையில் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரண்டும் உலகின் அநேக நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தரத்துக்கு இருக்கவில்லை. இலவசமாகக் கிடைக்கின்ற போதிலும் நாட்டில் பலவீனமான துறைகளுக்கு சிறந்தகல்வி மற்றும் சுகாதாரம் என்பன கிடைக்கக் கூடியதாக இல்லை. சில குறிப்பிட்ட சில சுகாதார வசதிகள் நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு இன்னமும் கிடைக்கவில்லை, கிடைக்கக் கூடியதாக இருக்கும் மருத்துவமனைகளிலோ சில குறிப்பிட்ட அறுவைச் சிகிச்சைகளைப் பெறுவதற்கு வாரங்கள் மற்றும் மாதங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும். அரச பல்கலைக்கழகங்களில் உற்பத்தி செய்யப்படும் பட்டதாரிகளில் பெரும்பாலானாவர்கள் வேலைத் தேவைக்கு ஏற்ற அறிவுக் குறைவு மற்றும்; பொருத்தமின்மை காரணமாக தற்போதைய வேலைவாய்ப்புச் சந்தைக்கு உள்வாங்கப்பட முடியாதவர்களாக உள்ளனர்.

1948 முதல் எந்த ஒரு அரசியல் கட்சியும் பொதுப் போக்குவரத்து சேவையையும் சீர்தீரத்தம் செய்யவோ அல்லது நவீனமயப்படுத்தவோ பிரச்சாரம் மேற்கொண்டதில்லை. ஸ்ரீலங்காவின் பொதுப் போக்குவரத்துச் சேவைகளான தொடரூந்து மற்றும் பேரூந்து ஆகிய இரண்டும் இன்னும் ஆரம்பகால நிலையிலேயே உள்ளன. நாட்டிலுள்ள விசேட தேவைக்குரிய சமூகத்தினர் அவர்களுக்கு உள்ள வசதிக் குறைவுகள் மற்றும் அவர்களின் உரிமைகள் இன்னமும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படாமை காரணமாக இன்னமும் சமுதாயத்துடன் ஒருங்கிணைய முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுவது துரதிருஷ்டவசமானது. இன்று சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தி அவன் அல்லது அவள் தனது வீட்டிலிருந்து வீதிக்குச் செல்லவோ, நடைபாதை மூலமாக பேரூந்து நிறுத்தத்துக்கோ அல்லது தொடரூந்து நிலையத்துக்கு சென்று தங்கள் பயணத்தை தொடருவதற்கு ஏற்ற வசதிகள் இல்லாததால் அத்தகைய சக்கரநாற்கலிகளைப் பயன்படுத்துபவர்கள் நாட்டில் இல்லை. அவர்கள் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறார்கள் மற்றும் ஸ்ரீலங்கா சனத்தொகையில் 15 விகிதமானவர்கள் உடல் ஊனமுற்றவர்கள் என நம்பப்படுகிறது, மற்றும் இவர்கள் நாட்டின் உற்பத்திக்கான தொழிலாளர் சக்தியுடன் இன்னமும் ஒருங்கிணைக்கப் படவில்லை. 2016ல் நடைபெற்ற ஐநாவின் விசேட தேவையுள்ளவர்கள் மாநாட்டில் ஸ்ரீலங்கா உறுதியளித்தபடி மாநாட்டின் சட்டதிட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு ஏற்றவாறு உள்ளுர் ஒழுங்கு முறைகளைக் கையாளுவதற்குப் போராடி வருகிறது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களில் பல வசிப்பதற்குச் சொந்தமாக ஒரு வீடில்லாமல் தவிக்கின்றன. இது தொடர்பாக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் அநேக மக்கள் இன்னமும் வீடில்லாமல் இருக்கிறார்கள் மற்றும் கடந்த 10 வருடங்களாக முன்னைய மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் இந்த மக்களின் அடிப்படை வீடமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்துள்ளன. 50,000 வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பான விவாதம் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் துரதிருஷ்டவசமாக எதுவுமே நிஜமாகவில்லை.
யுத்தத்தின் பின்னான ஸ்ரீலங்காவில் துப்பாக்கி வன்முறை

2009 முதல் துப்பாக்கி தொடர்பான வன்முறை அதிகரிப்பு,சட்டவிரோத சிறு மற்றும் இலகு ஆயுதங்களின் பெருக்கம் என்பன தேசத்தை அச்சுறுத்துகின்றன. துப்பாக்கி தொடர்பான வன்முறைகளை முறியடிப்பதற்கு பல வகையான அணுகுமுறைகள் தேவை மற்றும் சட்டங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். 2005ம் ஆண்டு ஸ்ரீலங்கா அமைத்த சட்டவிரோத சிறு ஆயுதங்களின் அதிகரிப்பு தொடர்பான ஆணைக்குழு 2008ம் ஆண்டு வரை செயலாற்றியது. இந்த ஆணைக்குழுதான் ஆசியப் பிராந்தியத்திலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட ஒன்றாகும் மற்றும் இது ஸ்ரீலங்காவில் சட்டவிரோத சிறு ஆயுதங்கள் பற்றிய பிரமாண்டமான பொதுமக்களின் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உட்பட (மோதல் பிரதேசங்களான வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களைத் தவிர)பல்வேறு முக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது, மற்றும் சட்டவிரோத சிறுஆயுதங்களைக் கைப்பற்றி அவற்றை பகிரங்கமாக அழித்தது

2005ம் ஆண்டு முதல் ஐநாவின் மோதல் மற்றும் சட்டவிரோத சிறிய மற்றும் இலகு ஆயுதங்களின் வர்த்தகம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் தடை செய்தல் (பி.ஓ.ஏ) நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஸ்ரீலங்கா தலைமை தாங்கியது. பி.ஓ.ஏ உடனான இந்தத் தொடர்பு மற்றும் சட்டவிரோத சிறிய ஆயுதங்களின் பெருக்கத்துக்கு எதிரான போராட்டம் என்பனவற்றால் ஸ்ரீலங்கா பல நன்மைகளைப் பெற்றது. மேலும்; நியுயார்க்கில் நடைபெற்ற அதன் முதலாவது ஆய்வு மாநாட்டுக்கு ஸ்ரீலங்கா தலைமை தாங்கியது. இதில் குறிப்பிடுவதற்கு துயரமானது என்னவென்றால் 2008ம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா பி.ஓ.ஏயின் எந்தவொரு கூட்டம் அல்லது செயற்பாடுகள் எதிலுமே பங்குபற்றவில்லை மற்றும் இதன் கடைசி ஆய்வு மாநாடு நியுயார்க்கில் நடைபெற்றது மற்றும் பிரான்ஸ் அதற்குத் தலைமை தாங்கியது.

வெகு சமீபத்தில் ஆயுத விற்பனை தொடர்பான விரிவான புதிய உடன்படிக்கை (ஏரிரி) 2014 டிசம்பரில் நடைமுறைக்கு வந்தது. இந்த உடன்படிக்கையின் பேச்சு வார்த்தைகளில் -லங்காவின் மூத்த இராஜதந்திரி தலைமையிலான ஒரு குழுவை ஐநா செயலாளர் நாயகம் கோபி அன்னான் 2012ல் நியமித்தார், இந்தக் குழு நியமிக்கப்பட்டது மரபுவழி ஆயுதங்களின் பொறுப்புள்ள வர்த்தகம் தொடர்பாக சர்வதேச விதிமுறைகள் தொடர்பான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கான நிபுணத்துவ யோசனைகளைப் பெறுவதற்காகவே. மூத்த ஸ்ரீலங்கா இராஜதந்திரி தலைமையிலான அந்தக் குழுதான் தற்போது உலகில் நிலவும் கட்டுப்பாடற்ற ஆயுத வர்த்தகத்தின் கீழ் அத்தகைய ஒரு உடன்படிக்கையின் முக்கியத்துவம் பற்றி பரிந்துரை செய்தது. ஏரிரி அமலுக்கு வந்தது முதல் ஏரிரி அரசாங்கக் கட்சிகள் கலந்துகொண்ட எந்தவொரு கருத்தரங்கிலும் ஸ்ரீலங்கா கலந்து கொள்ளவில்லை. கடந்த வருடம் ஐநா பொதுச்சபையின் 73வது அமர்வில் ஸ்ரீலங்காவில் ஆயுதக்களைவு நடத்துவது தொடர்பான முதலாவது குழுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட “பெண்கள், ஆயுதக்களைவு, இராணுவப் பெருக்கம் மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு” பற்றிய ஒரு பிரேரணையின் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத முக்கியமான நாடு ஸ்ரீலங்கா ஆகும், இங்கு பெரும்பான்மையான தெற்காசிய நாடுகள் இந்த முக்கியமான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

கடந்த 22 வருடங்களாக ஸ்ரீலங்கா அதன் 1966ம் ஆண்டு 22ம் இலக்க சுடுகலன்கள் சட்த்தில் திருத்தங்களை மேற்கொள்ளவில்லை. முக்கியமான இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமை,சட்டவிரோத சிறிய மற்றும் இலகு ஆயுதங்களை ஒழிப்பதை நோக்கிய நாட்டின் அர்ப்பணிப்பு, போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் உட்பட குற்றச்செயல்களுக்கு எதிராகப் போரிடுவது, கொள்ளைச் சம்பவங்கள், சட்டவிரோத வனவிலங்கு வியாபாரம், கொலைகள் மற்றும் இதர பாரிய குற்றங்கள் மாற்றமடையாது பெருகிவருதைக் காட்டுகிறது. இதுவரை தற்போதைய அரசாங்கம் ஐநாவின் பி.ஓ.ஏ யுடன் மீண்டும் ஈடுபாட்டை ஏற்படுத்துவது, ஏ.ரி.ரி யுடன் இணைவது மற்றும் சட்டவிரோத சிறு ஆயுதங்களின் அதிகரிப்பிற்கான தேசிய ஆணைக்குழுவை மீண்டும் ஸ்தாபித்தல் மற்றும் சுடுகலன்கள் சட்டத்தை திருத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை.

பலவீனமான அரசியல் ஆட்சிகள்

பொதுமக்கள் நாட்டில் உள்ள அரசியல் அமைப்பின்மீது நம்பிக்கை வைக்க முடியாது. வெகு சமீபத்திய நடவடிக்கை கடந்த செப்ரெம்பரில் நடைபெற்றது, அரசியல் நெருக்கடி மற்றும் இரவோடு இரவாக திடீரென அரசாங்கத்தை மாற்றியது நாட்டின் பொருளாதாரத்துக்கு பில்லியன் டொலர்கள் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. விவேவகமான அரசியல் முடிவுகளை எடுக்காமல் இத்தகைய முன்னேற்றங்களை மேற்கொள்வது நாட்டின் ஒட்டுமொத்த சமூக – பொருளாதார மற்றும் அரசியல் நிலமைகளை மோசமாக்கும். அரசியல் மற்றும் அரசாங்க நிருவாக முறைகளிலும் 2020 க்கு அப்பால் ஸ்ரீலங்காவுக்கு ஒருதொகை புதிய ஆட்கள் தேவையாக உள்ளது. தற்போதைய அரசியல் முறை மற்றும் நிருவாக முறையை மாற்றுவது ஒரு கடினமான பணியாகும் ஆனால் வாழ்க்கைத் தரம் மற்றும் மனித பாதுகாப்புத் துறை என்பனவற்றின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பனவற்றை அடைவதற்கு இதைத்தவிர வேறு வழியில்லை.

சர்வதேச ரீதியில் நாட்டின் தோற்றத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள்

தற்பொழுது ஸ்ரீலங்காவின் கடவுச்சீட்டு தனிப்பட்ட தரவரிசைப்படி, 199 நாடுகளில் 183வது இடத்தைப் பெற்றுள்ளது, உலகளாவிய கடவுச்சீட்டு அதிகாரத் தரத்தின் கடவுச்சீட்டு சுட்டெண்ணின்படி வேறு நாடுகளுக்குப் பயணிக்கும்போது 152 நாடுகளுக்கு விசா தேவைப்படுகிறது, வந்து இறங்கியதும் விசா பெறும் முறை 32 நாடுகளில் நடைமுறையில் உள்ளது, 16 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணிக்க முடியும்.

ஸ்ரீலங்கா உலகளாவிய தலைமைத்துவத்தை பெறுவதைப்பற்றியும் மற்றும் மற்ற நாடுகளின் மனங்களையும் இதயங்களையும் வெல்வதைப் பற்றியும் கவனிக்க வேண்டும். இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்தரும். நாங்கள் இதுவரை கண்டதில், தற்போதைய சூழ்நிலைகளின் கீழ் ஆயுதக்களைவு துறையில் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை ஸ்ரீலங்காவால் பெற முடியும் எனத் தெரிகிறது. இது இந்தப் பிராந்தியத்தில் ஸ்ரீலங்கா ஒரு சமாதானத்தூதுவராக வருவதற்கு உதவும்.பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் ஜூன் மாதம் ஜெனிவாவில் நடக்கவுள்ள படைக்கல கொத்துக் குண்டுகள் மாநாட்டின் (சி.சி.எம்) அரசாங்கக் கட்சிகளின் 8வது கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.

சர்வதேச மாநாடுகளை ஸ்ரீலங்காவில் நடத்துவதன் மூலம் பல வழிகளில் நாடு ஆதாயம் பெறமுடியும். சுதந்திரமடைந்ததின் பின்னர் இதுவரை ஸ்ரீலங்கா இரண்டு பிரதான சர்வதேச நிகழ்வுகளை மட்டுமே நடத்தியுள்ளது, 1976ல் நடத்தப்பட்ட 5வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு மற்றும் 2013ல் நடத்தப்பட்ட கமான்வெல்த் நாட்டுத் தலைவர்களின் கூட்டம் ஆகிய இரண்டுமே அவை. இந்த வருடம் மே – ஜூன் மாதங்களில் காட்டு விலங்குகள் மற்றும் ஆபத்தான தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் பற்றிய மாநாட்டுக்கான (ஊஐவுநுளு) ‘கட்சிகளின் மாநாடு 18’ (கோப் 18) இனை ஸ்ரீலங்கா நடத்துகிறது, மற்றும் 180 நாடுகளைச் சேர்ந்த 3500 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றுவார்கள். சுதந்திரத்துக்குப் பின்னான ஸ்ரீலங்காவில் நடக்கவுள்ள மிகப்பெரிய சர்வதேச ஒன்றுகூடல் இதுவாகத்தான் இருக்கும். எதிர்காலத்தில் இத்தகைய சர்வதேச மாநாடுகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்காவுக்கு தகுதி உள்ளது என்று உலகத்துக்கு காண்பிப்பதற்கு ஸ்ரீலங்காவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

இத்தகைய சூழ்நிலையில் சுதந்திரத்துக்குப் பின்னான மற்றும் யுத்தத்துக்குப் பின்னான கொண்டாட்டங்கள் மற்றும் பிற திட்டங்களின் திறப்பு விழா நிகழ்வுகள் மற்றும் அரசாங்கத்தின் கொண்டாட்டங்கள் ஆகியனவற்றை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம் அத்துடன் அவற்றுக்கான செலவுகளும் குறைக்கப்பட வேண்டும். அத்தகைய அரசாங்க நிதிகள் தேசத்தின் மனித பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டின் தோற்றத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு : எஸ்.குமார்

Share:

Author: theneeweb