அமெரிக்கா புகுந்த நாடு…

 

By சு. வெங்கடேஸ்வரன்

 

ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்று நம்மூரில் ஒரு சொல் வழக்கு உண்டு. அது உண்மையோ… இல்லையோ. அமெரிக்கா புகுந்த நாடு உருப்படாது என்பது மட்டும் பலமுறை  நிரூபணமாகியுள்ள உண்மை. இதற்கு இராக், ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்டவை சமீபத்திய எடுத்துக்காட்டுகள்.

இப்போது, உள்நாட்டுக் குழப்பம் உச்சத்தில் உள்ள வெனிசூலாவில் தனது ராணுவத்தை களமிறக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. தேவை ஏற்பட்டால் வெனிசூலாவுக்கு அமெரிக்க ராணுவம் அனுப்பி வைக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து புதிய போருக்குக் கட்டியம் கூறியுள்ளார்.

இராக், ஆப்கானிஸ்தான், சிரியாவில் அமெரிக்க ராணுவம் புகுந்ததைக்கூட அணு ஆயுதத் தயாரிப்பு (அப்படி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை), பயங்கரவாதம் என ஏதாவது ஒன்றைக் கூறி நியாயப்படுத்த முடியும். ஆனால் வெனிசூலாவில், அமெரிக்க ராணுவம் கால் வைத்தால், அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உள்நாட்டுக் குழப்பத்தைப் பயன்படுத்தி, அந்நாட்டில் தங்களுக்கு சாதகமான அரசை அமைக்கும் நோக்கம் தவிர வேறு எதுவும் இருக்காது.

தனது முதலாளித்துவக் கொள்கைக்கும், நலன்களுக்கும் எதிராக இருக்கும் நாடுகளை முறியடிக்க சரியான வாய்ப்புக்குக் காத்திருக்கும் அமெரிக்காவிடம், இப்போது சிக்கியுள்ளது சோஷலிச கொள்கை கொண்ட வெனிசூலா. இதற்கு முன்பு வெனிசூலா அதிபராக இருந்து சாவேஸ், கடந்த 2013-ஆம் ஆண்டு புற்று நோயால் இறுதி மூச்சை இழக்கும்வரை, அமெரிக்காவின் முதலாளித்துவ ஆதிக்க கொள்கைகளுக்கு எதிராகவே இருந்தார்.

இதனால், 2011-ஆம் ஆண்டு வெனிசூலாவின் அரசு எண்ணெய்-எரிவாயு நிறுவனமான பெட்ரோலியோஸ் டி வெனிசூலா’ மீது அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பொருளாதாரத் தடை விதித்தார். உலகின் 5-ஆவது பெரிய பெட்ரோலிய ஏற்றுமதி நிறுவனமான பெட்ரோலியோஸ் டி வெனிசூலா மீது விதிக்கப்பட்ட தடையால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அந்த நிறுவனத்தின் இறக்குமதியை முற்றிலுமாகக் குறைத்தன. பெருமளவில் பெட்ரோலிய வளத்தைக் கொண்ட நாடு வெனிசூலா.

எனவே, பெட்ரோலிய வளத்தை நம்பியே அந்நாட்டின் பொருளாதாரம் இருந்தது. இந்தத் தடையால் அந்நாட்டு பொருளாதாரம் முதல் சறுக்கலைச் சந்தித்தது. சாவேஸ் மறைவுக்குப் பிறகு 2013-ஆம் ஆண்டு, வெனிசூலா அதிபரான நிக்கோலஸ் மடூரோவுக்கு தொடக்கத்திலேயே பிரச்னை ஏற்பட்டது.  பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய நாடு என்ற குற்றச்சாட்டில் 2015-ஆண்டு வெனிசூலா மீது மீண்டும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் பாய்ந்தன. 2015-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தது, வெனிசூலாவின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்தது.

இதன் பிறகு 2017-ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் அதிபரான உடன், தனது பங்குக்கு வெனிசூலா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்தார். தங்கள் முதலாளித்துவ கொள்கையுடன் கைகோக்காமல், சோஷலிச கொள்கைகளைத் தூக்கிப் பிடித்ததும், கியூபா, ரஷியா உள்ளிட்ட தங்களுக்கு வேண்டாத நாடுகளுடன் வெனிசூலா அதிகம் நெருக்கம் காட்டியதும்தான் அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து விதிக்க முக்கியக் காரணம்.

எண்ணெய் ஏற்றுமதியை பெருமளவில் நம்பியிருந்த வெனிசூலாவின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாகச் சீர்குலைந்தது. இது வெனிசூலா மக்களை நேரடியாக பாதிக்கத் தொடங்கியது. . உணவு, மருந்து பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதும், வேலையின்மை அதிகரித்ததும் அரசின் மீதும், அதிபர் மீதும் மக்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

வெனிசூலாவில் இப்போது நிலவும் சூழ்நிலையில் யார் அதிபரானாலும் உடனடியாக நிலைமையை மாற்றிவிட முடியாது என்பது நிச்சயம். எனினும், தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்டவை அங்கீகாரமும், ஆதரவும் தெரிவித்துள்ளன. மடூரோவுக்கு ஆதரவாக ரஷியா, சீனா, கியூபா, ஈரான், பொலிவியா, துருக்கி, வடகொரியா ஆகிய நாடுகள் உள்ளன. வெனிசூலா ராணுவத்தில் மடூரோவுக்கு செல்வாக்கு உள்ளது. . உணவும், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவையே நிறைவு செய்யப்படவில்லை என்பதே தெருவில் இறங்கிப் போராடும் மக்களின் முக்கிய கோஷமாக உள்ளது.

அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேட்டியளித்துள்ள மடூரோ, வியட்நாம் போரில் என்ன கொடுமைகள் நிகழ்ந்ததோ, அதையே வெனிசூலாவிலும் நிகழ்த்திப் பார்க்க அமெரிக்கா முயற்சி செய்வது போல தெரிகிறது.

வெனிசூலா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை டொனால்ட் டிரம்ப் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் டிரம்ப் ஆட்சியிலும் வெள்ளை மாளிகை மீண்டும் பிற நாட்டு மக்களின் ரத்தப் பழியை ஏற்கும் இடமாகவே இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு விஷயத்தில் மடூரோவின் செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு உள்ளானதாக இருந்தாலும், அமெரிக்கா குறித்த அவரது இந்தக் கருத்தை எளிதில் புறம்தள்ளிவிட முடியாது. ஏனெனில், அமெரிக்க ராணுவம் கால் வைத்த நாடுகளின் நிலை என்ன? என்பது வரலாற்றின் பக்கங்களின் ரத்தத்தால் மட்டுமே எழுதப்பட்டுள்ளன.

  • Dinamani c–
Share:

Author: theneeweb