எதை நோக்கி நகர்வது?

–    கருணாகரன்—

“இலங்கையின் பொருளாதாரம் பற்றிச் சொல்லுங்கள்?” என்ற “மகுடி” கேள்வி – பதில் ஒன்றில் “சிரித்திரன் சுந்தர்” பதிலளிக்கும்போது “கடலால் சூழப்பட்ட நாடு ரின் மீனை இறக்குமதி செய்கிறது” என்றார்.

இலங்கை தன்னைச் சுற்றிலும் வளமான கடலை வைத்துக்கொண்டு ரின் மீனை மட்டும் இறக்குமதி செய்யவில்லை. விவசாயத்துக்கு வேண்டியளவு தண்ணீரை வைத்துக் கொண்டே அரிசியையும் பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சிலியிருந்து இறக்குமதி செய்யப்பட்ட (ரின்) மீனில் கறியும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் சோறும் ஆக்கிச் சாப்பிட்டோம். அப்பொழுது எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த இரத்தினசிங்கம் சொன்னார், “உள்ளுரிலிருந்தாலும் வெளிநாட்டுச் சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறோம்” என்று.

அவர் இதைப் பகிடியாகச் சொன்னாலும் இதற்குப் பின்னால் ஒரு பொருளாதாரத் துயரமும் அவலமும் உண்டு.

இலங்கை போன்ற நாடுகளின் நிலை இதுதான்.

தங்கள் நாட்டில் போதிய வளமிருக்கும். ஆனால் அதைப் பயன்படுத்தும் தொழில்நுட்ப அறிவு, பொருளாதாரத் திட்டங்கள், சுதேச எண்ணம் எதுவும் கிடையாது. அதை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமோ அக்கறையோ அரசாங்கத்துக்கும் இல்லை. அரசாளும் தலைவர்களுக்குமில்லை. பதவிக்காக ஆசைப்படும் அளவுக்கு தங்கள் நாட்டை மேலுயர்த்த வேண்டும் என்று எந்தத் தலைவரும் சிந்திப்பதில்லை. இந்தத் தலைவர்களை அரசியலதிகாரக் கட்டிலில் ஏற்றி பெருமிதமாக அழகு பார்க்கின்ற மக்களுக்கும் இல்லை. இதனால்தான் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கழிந்த பிறகும் பொருளாதார அடிமையாகத்தான் இன்னும் சுதந்திரச் ஸ்ரீலங்கா உள்ளது.

இந்தச் சிறப்பினாலேயே “சுதந்திரத்துக்கு முதல் (1948 க்கு முன்பு) பிறத்தியார் வெளியிலிருந்து (ஐரோப்பாவிலிருந்து) இலங்கைக்குள் வந்தார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டு மக்கள் நாட்டை விட்டு  வெளியேறிப்போகிறார்கள்” என்று சின்னமணி சொல்கிறார். சின்னமணி ஒன்றும் பெரிய அரசியல், பொருளாதார, சமூகவியல் விண்ணரோ நிபுணரோவல்ல. ஆனால், பொது அறிவுள்ள சாதாரண மனிதர். நான் சின்னமணியின் அரசியல் பொருளாதார சமூகவியல் கருத்துகளை மறுப்பதில்லை. அவ்வளவும் யதார்த்தமானவை. உண்மையானவை. ஏனென்றால், அவரிடம் செழுமையான பொது அறிவுள்ளதல்லவா!

ஆனால், இதையெல்லாம் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். எப்பிடித்தான் தாங்கள் கெட்டுச் சீரழிந்தாலும் தங்களுடைய மாறாக்கொள்கைகளை அவர்கள் விட மாட்டார்கள்.

சிங்களவர்களுக்கு ஐ.தே.கவையும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியையும் தவிர வேறு தெரிவுகள் இல்லை. சாகிறேன், பந்தயம் பிடி என்பதைப்போல தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த இரண்டையும்தான் மாறி மாறித் தெரிவு செய்வார்கள். மூன்றாவது சக்தி ஒன்றை அவர்கள் நம்புவதில்லை.

அதைப்போலத்தான் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மலையக மக்களுக்கும். வேறு தெரிவுகள், புதிய முகங்களில் நம்பிக்கையில்லை. என்னதான் கெட்டு நொந்தாலும் கூடத் தங்களுக்கு உதவாதவர்களைத் தலைவர்களாகத் தலையில் வைத்துச் சுமப்பார்கள்.

இந்த நோய் முற்றியதால்தான் இலங்கை இப்பொழுது வெங்காயத்தையும் வெளியிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டத்துக்கு வந்திருக்கிறது.

1970, 80 களில் ஓரளவுக்கு உள்ளுர் உற்பத்திகள் மேம்பட்டிருந்தன. வடக்குக் கிழக்கில் கூட ஏராளம் கைத்தொழில் முயற்சிகள் நடந்தன. வாழைச்சேனையில் காகிதத் தொழிற்சாலை. பரந்தனில் இரசாயனப் பொருட்கள் தொழிற்சாலை. காங்கேசன்துறையில் சீமெந்துத் தொழிற்சாலை. ஒட்டுசுட்டானிலும் கண்டாவளையிலும் ஓட்டுத் தொழிற்சாலை. நீர்வேலியில் கண்ணாடித் தொழிற்சாலை. மாவிட்டபுரத்தில் ஆணி உற்பத்தி நிலையம். ஆனையிறவிலும் குறிஞ்சாத்தீவிலும் பென்னாம் பெரிய உப்பளங்கள். மண்டைதீவிலும் ஆனைப்பந்தியிலும் இன்னும் பிற இடங்களிலும் அலுமினியப் பக்ரறிகள். இணுவில் அண்ணா கோப்பி. நாச்சிமார்கோயிலடியில் மில்க்கை வைற் சவுக்காரம். வல்வெட்டியில் சுப்பிரமணியம் சோடா. பண்டத்தரிப்பு, வல்லை, இருபாலை, கல்வியன்காடு, மருதமுனை, காத்தான்குடி போன்ற இடங்களிலெல்லாம் கைத்தறிகள். நெசவும் மரவேலையும் பாடசாலையில்கூடக் கற்பிக்கப்பட்டது. அந்த நாட்களில் “பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்” என்றொரு சிறுகதையை நெல்லை க. பேரன் எழுதியிருந்தார்.

ஆண்டுக்கொரு தடவை நடக்கிற கச்சதீவு அந்தோனியார் கோயில் பெருநாளுக்கு இந்தியாவிலிருந்து வருகிற சனங்கள் தேடுவது அந்தோனியாரையும் விட இலங்கை உற்பத்திகளையே. அந்தளவுக்கு ஒரு மவிசும் விருப்பமும் இலங்கைப் பொருட்களின் மீது தமிழக மக்களுக்கிருந்தது.

1980 களில் இந்தியாவுக்குப் பயிற்சிக்குப் போராளிகளைக் கொண்டு போகும் இயக்கப் படகுகளில் ஒரு தொகுதி இலங்கைப் பொருட்களிருக்கும். பிறகு வெவ்வேறு தேவைகளுக்காக தமிழ் நாட்டுக்கும் ஈழக்கரைக்குமாக ஓடிக் கொண்டிருந்த படகுகள் இலங்கை உற்பத்திகளைக் கொண்டோடின. அப்படிக் கொண்டு போய் அங்கே – தமிழ் நாட்டில் விற்ற பணத்தில்தான் இயக்கப்போராளிகளின் அடிப்படைத் தேவைகள் பலவும் கவனிக்கப்பட்டன.

அந்தளவுக்கு உற்பத்தியும் தொழிலுமாக இலங்கைத்தீவிருந்தது.

அப்போதும் இந்த இரண்டு கட்சிகள்தான் ஆட்சி அதிகாரத்தில் மாறி மாறியிருந்தாலும் ஓரளவுக்கு உள்ளுர் உற்பத்திகளிருந்தன. சனங்களுக்குத் தொழில்வாய்ப்புகளும் கிடைத்தது.

இப்பொழுது நெற்றியில் ஒட்டுகின்ற முப்பது சதம் பெறுமதியான பொட்டிலிருந்து உடுக்கிற புடவைகள், சமயலறையை நிறைக்கின்ற பாத்திரங்கள், தெருவிலே ஓடுகின்ற வாகனங்கள், நாளாதந்தம் பாவிக்கின்ற அத்தனை பொருட்களும் இந்தியா உள்பட உலகத்தின் அத்தனை நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றவையே.

எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்குகின்ற மக்களாகி விட்டனர் இலங்கையர்கள். எல்லாவற்றையும் இறக்குமதி செய்கின்ற நாடாகி விட்டது இலங்கை. இந்தச் சீரில்தான் இலங்கை அரசின் வரவு செலவுத்திட்டம் ஆண்டுதோறும் நிறைவேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு அதுவும் நடக்கவில்லை. மைத்திரியின் அதிரடி அரசியல் புயல் வரவு செலவுத்திட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டது.

சனங்களுக்கு தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஏதோ நடக்கிறது என்றுதான் பலரும் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் எப்படியோ இரவும் பகலும் தவறாமல் வருகிறது. மழையோ மப்போ வெயிலோ தவறாமல் மாரியும் கோடையும் வருகின்றன. இது போதும்.

நாட்டில் என்ன நடந்தாலும் அதற்குத் தாம் பொறுப்பாளிகள் இல்லை என்று எட்டத்தில் நின்று விடுகிறார்கள். அங்கங்கே சின்னஞ்சிறிய அளவிலான அணிகள் மட்டும் இந்த நிலையைக் குறித்துச் சின்னச் சின்னக் கூட்டங்களைப் போட்டுப் பேசும். இருந்தாற்போல அங்கொன்று இங்கொன்று என சிறிய போராட்டங்கள் நடக்கும். எதுவும் எந்தப் பெரிய அலைகளையும் உருவாக்குவதில்லை.

யாழ்ப்பாணத்தின் மூன்றில் இரண்டு பகுதிகளில் தண்ணீர்ப்பிரச்சினை தலைமுறைப்பிரச்சினையாக நீடிக்கிறது. நான்கு பக்கமும் தண்ணீரால் சூழப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தின் பெருந்துயரம் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை என்பதே.

தீவுப்பகுதிகளில் சனங்கள் வரவரக்குறைந்து கொண்டிருக்கிறார்கள். வட்டுக்கோட்டை, காரைநகர், அராலி, வடமராட்சியின் பல இடங்களில் எல்லாம் தண்ணீர்ப்பிரச்சினை, தலைப்பிரச்சினை. இதற்குத் தீர்வு காண்பதற்கு இன்னும் எந்தக் கொம்பராலும் முடியவில்லை. இந்தப் பிரச்சினையைப் பற்றி முக்கியமான அரசியல் தலைவர்களிடம் பேச முற்பட்டால் “பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கள்” என்று சொல்லிக் கொண்டு. “கழுவுகிற நீரில் நழுவுகிற மீனாக தப்பிவிடுகிறார்கள்.

தமிழ் மக்கள் இன்று உலகமெல்லாம் பரந்து சிறந்து வாழ்கிறார்கள். இதில் பலர் தாங்கள்  வாழும் நாடுகளில் இந்த மாதிரிப் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு கண்டிருக்கிறார்கள் என்பதை அறியக் கூடிய நிலையிலிருப்பவர்கள். ஆனால், நிலைமையில் முன்னேற்றமில்லை. வேண்டுமென்றால் 1950, 60, 70 களில் கிளிநொச்சி, வட்டக்கச்சி, உருத்திரபுரம், தருமபுரம், வவுனிக்குளம், மல்லாவி, நெடுங்கேணி, முத்து ஐயன் கட்டு, விசுவமடு, உடையார்கட்டு, பிரமந்தனாறு போன்ற இடங்களுக்கு யாழ்ப்பாணச் சனங்களைக் கொண்டு போய் குடியேற்றியதைப்போல வன்னியில் எங்காவது குடியேற்றலாம் என்று இவர்கள் யோசிக்கக் கூடும். அல்லது ஒருமாதிரிச் சமாளித்து வெளிநாடுகளுக்குக் கப்பலேற வேண்டியதுதான் என.

ஆனால், 2004 இல் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தப் பிரச்சினைக்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி 230 மில்லியன் ரூபாய் செலவில் கிளிநொச்சியில் உள்ள இரணைமடுக்குளத்தை அபிவிருத்தி செய்து, அதில் கூடுதலாகத் தண்ணீரைச் சேமிப்பது என்பதே இந்தத் திட்டம். ஒவ்வொரு மாரியிலும் பெருமளவு தண்ணீர் கடலுக்கு வீணாகச் சென்று சேர்வதைத் தவிர்த்து, அந்தத் தண்ணீரைச் சேமித்தால் அதை யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப்பயன்பாட்டுக்கு எடுக்கலாம் என்பதே ADB யின் திட்டம்.

இதன்படி ஏற்கனவே உள்ள குளத்தின் அணைக்கட்டு மேலும் இரண்டு அடி உயர்த்தப்பட்டு 36 அடியில் நீர் சேமிக்கப்படும். அப்படிச் சேமிக்கப்படும் மேலதிக நீர் (கிளிநொச்சியின் விவசாயத் தேவைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில்) யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படும் என்ற அடிப்படையில் வேலைகள் நடந்தன. இந்தச் சமயத்தில்தான் சிவபூசைக்குள் கரடி புகுந்த கதையாக கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொண்டு போக முடியாது என்றார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். இதைக் கேட்ட ADB திகைத்துப்போனது. திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அரசாங்கம் குழம்பியது. தீவக மக்களும் யாழ்ப்பாணத்தில் தண்ணீருக்காக அல்லாடிக் கொண்டிருந்த சனங்களும் நெஞ்சிலே கையை வைத்தனர். இப்படி வைக்கப்பட்ட கை இன்னும் கீழே எடுக்கப்படவேயில்லை.

இந்த மாரியிலும் (2018) பெருமளவு தண்ணீர் இரணைமடுவிலிருந்தும் பக்கத்தில் உள்ள கனகாம்பிகைக்குளத்திலிருந்தும் கல்மடுக்குளத்திலிருந்தும் அக்கராயனிலிருந்தும் கடலுக்குப் போய்ச் சேர்ந்தது.

எவ்வளவோ தண்ணீர் கடலுக்கு வீணாகப் போய்ச் சேர்கிறது என்ற கவலை யாருக்குமே இல்லை. தண்ணீர்ப் பற்றாக்குறையால் லட்சக்கணக்கான சனங்கள் ஊர்கள் தோறும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கவலையும் யாருக்குமில்லை.

இந்த மாதிரி ஏராளம் பிரச்சினைகள் இலங்கையர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளன. ஒன்றுக்கும் தீர்வில்லை. உள்நாட்டில்  உள்ளவர்களாலும் தீர்வு காண முடியவில்லை. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றவர்களாலும் தீர்வைக் கொண்டு வர முடியவில்லை.

ஆமாம், சிறிலங்கன்கள் உலகிலே செயலற்றுப்போய்க் கொண்டிருக்கிறார்கள். இதற்குள்தான் ஆயிரத்தெட்டுப் போட்டிகளும் ஆயிரம் வேறுபாடுகளும் பேதங்களும். இந்த முட்டாள் பிச்சைக்காரர்களின் சண்டையைப் பார்த்துச் சிரிக்கிறது உலகம்.

Share:

Author: theneeweb