கஷோகி மீது துப்பாக்கி குண்டை பயன்படுத்துவேன்: சவூதி இளவரசர் சல்மான் கூறியதாக தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தகவல்

செய்தியாளர் கஷோகி மீது துப்பாக்கி குண்டை பயன்படுத்துவேன் என்று சவூதி பட்டத்து இளவரசர் தனது உதவியாளரிடம் தொலைபேசியில் கூறியதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவுத் துறையை மேற்கோள் காட்டி அந்த நாளிதழ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நட்பு நாடுகள் உள்பட பல்வேறு சர்வதேச நாடுகளின் தலைவர்களது தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்பது அமெரிக்க உளவுத் துறையான தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்எஸ்ஏ) வழக்கமான நடவடிக்கையாகும்.

salmanஅதன்படி, சவூதி பட்டத்து இளவரசரும், அந்த நாட்டின் அறிவிக்கப்படாத ஆட்சியாளருமான முகமது பின் சல்மான் தனது உதவியாளரான துருக்கி அல்டாகில் என்பவருடன் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொலைபேசியில் நடத்திய உரையாடலையும் என்எஸ்ஏ இடைமறித்து பதிவு செய்துள்ளது.
துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் செய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்படுவதற்கு சுமார் 13 மாதங்களுக்கு முன்னர் அந்த உரையாடல் நடைபெற்றது.

அதில், ஜமால் கஷோகி சவூதி அரேபியா திரும்பி வர மறுப்பு தெரிவித்தால் அவரை வலுக்கட்டாயமாக நாடு கடத்த வேண்டும்; அதுவும் முடியாவிட்டால் அவர் மீது துப்பாக்கி குண்டை பயன்படுத்துவேன் என்று இளவரசர் சல்மான் கூறியிருந்தார்.
இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்ட பல மாதங்கள் ஆன நிலையில், கஷோகி படுகொலையில் இளவரசர் சல்மானுக்குத் தொடர்பு இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த உரையாடல் தற்போதுதான் எழுத்துவடிவமாக்கப்பட்டிருக்கிறது என்று தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசையும், அந்த நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்தச் சூழலில், சில ஆவணங்களைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை. தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆள்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டதை  ஒப்புக் கொண்டது.

சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பரவலாக சந்தேகிக்கப்படுகிறது.

 

Share:

Author: theneeweb