வடக்கில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், 86 ஆயிரத்து 695 பேர் பாதிப்பு

வடக்கில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், 86 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையில் தெரிவித்துள்ளது.

அத்துடன், 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அந்த நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலேயே குறித்த இரு மரணங்களும் சம்பவித்துள்ளன.

இதனிடையே, 89 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 308 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

8 ஆயிரத்து 693 பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இதுவரையில் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்பில், கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் வைத்து, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகளவில் வயல் காணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சில பாடசாலைகளை வழமை நிலைக்கு கொண்டு வந்து இயங்கச் செய்வதற்கு, சில வாரங்கள் ஏற்படும் என்ற காரணத்தினால், முகாம்களை அமைத்து பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சில வாரங்களில் தீர்ப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள் புனரமைப்பு தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இதன்போது, மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து மீள மக்களை குடியேற்றுதல், கிணறுகளை சுத்தப்படுத்தல், வீதிகள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்கள், வடிகான்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களின் பாதிப்புக்கள் தொடர்பில் திணைகள தலைவர்கள் ஊடாக அறிந்து அதனை சீர்செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியவசிய உணவுப் பொருட்களை தடையின்றி வழங்கும் வகையில் சதொச நிறுவனத்தின் மூலம் அவற்றை விநியோகிக்கும் வகையில் ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.


Share:

Author: theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *