வட மாகாண கல்வித்துறையில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விசாரணை செய்வதற்கு குறைகேள் விசாரணைக் குழு

வட மாகாண கல்வித்துறையில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை விசாரணை செய்வதற்கு குறைகேள் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, வடமாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும், பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும், ஆளுநரின் கவனத்திற்கு அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்காகவே, குறைகேள் விசாரணைக் குழுவொன்றினை அமைக்க ஆளுநர் தீர்மானித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேரடங்கிய இந்த விசாரணைக் குழுவில் இரு பெண்கள் உள்ளடங்குவதுடன், அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களினால் முன்மொழியப்பட்டவராகவும் இருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை வட மாகாணத்தின் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில், வட மாகாண கல்வியமைச்சுக்கு தமது ஆலோசனைகளையும் சரியான வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்க 15 பேரடங்கிய சிரேஸ்ட கல்விமான் சபையொன்றினை அமைக்கவும் ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

அதற்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஆளுநர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb