போலித் தேசியவாதத்திற்குள் அமிழ்ந்துசெல்லும் மக்கள் அவலங்கள்

வி.சிவலிங்கம் —–

 

அன்பார்ந்த வாசகர்களே!

சமீபத்தில் நமது தாயகத்தில் சற்று நீண்டநாட்கள் தங்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இதன் காரணமாக முக்கியமான அரசியல் முக்கியஸ்தர்களுடன் உரையாடும் வாய்ப்பும், வடபகுதி மக்களின் வாழ்வு நிலவரங்களையும் சற்றுஆழமாக வேநோக்கும் சந்தர்ப்பமும் கிட்டியது. என்னைப் போல் பல ஆயிரக் கணக்கானோர் தாயகத்திற்குவந்து போயிருக்கலாம். அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தாயகமக்களின் விடிவிற்காக வெளிநாடுகளிலிருந்து செயற்படுபவன் என்றவகையில் எனது மனதைத் தாக்கிய அல்லது உருக்கும் உணர்வுகளை பதிவிடவேண்டும் என்ற எனது நண்பர்களின் வேண்டுகோளிற்கிணங்க தொடர்ந்து சில கட்டுரைகளைத் தரஎண்ணுகிறேன்.

நீங்கள் தற்போது படித்துக்கொண்டிருக்கும் இந்த இணையத் தளத்தில் பல அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றில் பல அரசியல் தீர்வுகுறித்த கட்டுரைகளாகும். ஆனால் இங்கு அவதானித்தபோது எனதுமனதில் மிகஆழமான போராட்டமே வடிவெடுத்துள்ளது. போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளதாக நாம் கூறிவருகின்றபோதிலும் அது ஆயுதப் போராட்டம் மட்டுமே முடிவடைந்துள்ளது. ஆதைவிட மோசமான போராட்டம் இன்று நடந்து வருகிறது. ஆயுதப் போராட்டம் மீண்டும் பிறிதொரு பின்னணியில் உருப் பெறுவதற்கான விளைநிலமாக இன்னமும் காணப்படுவதே வேதனை தருவதாக உள்ளது.அதற்குக் காரணம் மக்கள் வாழ்வுடன் இல்லாத அளவிற்கு போராட்டத்தை நடத்தும் நிலை காணப்படுகிறது. பலகுடும்பங்களின் உறவுகள் வெளிநாடுகளில் வாழ்வதால் ஏன் கஷ்டத்தில் வாழும் நிலைஉள்ளது? எனவினவலாம். வறுமை ,போராட்டம், குடும்பங்களின் சிதைவு, அகதிவாழ்வு, பாரம்பரிய கிராமங்களிலிருந்து விலைமதிக்கமுடியாத நிலங்களைவிட்டு வெளியேறி அடையாளங்கள் அதாவது மாமன், மாமி, மச்சான் எனச் சங்கிலித் தொடராக நீண்டுசென்ற உறவுகள் உடைந்துள்ளன. கூடவே நாட்டில் நிலவும் நவதாராளவாத பொருளாதாரக் கட்டமைப்பு மனிதர்களைக் கூறுகளாக்கி உறவுகளைச் சீர் குலைத்து தனிதமனித அவாவுகளுக்கு வடிகால் அமைத்துள்ளது.
எனது பிறந்த இடம் பலாலி விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதியாகும். அது காங்கேசன்தறைத் தொகுதியின் உயிர்ப்புமிக்க பிரதேசமாகும். இத் தொகுதி எனக்கு மிகவும் பரிச்சயமானது. புலாலி முதல் பண்டத்தரிப்பு வரைபல தடவைகள் சுற்றித் திரிந்துள்ளேன். விவசாயிகளும், வர்த்தகர்களும், கல்விமான்களும், பெருமைமிக்கபாடசாலைகளும் செழிப்புற வாழ்ந்த பிரதேசமாகும். ஆனால் இன்று hர்க்கும் போது ஒருபுறத்தில் வேதனையும், மறு புறத்தில் மனக் கொதிப்பும் ஏற்படுகிறது.

கிராமங்கள் சிதைக்கப்பட்டு, காலம் காலமாக வாழ்ந்து கலாச்சாரங்களையும், பண்புகளையும் வளர்த்து வரலாறாக வாழ்ந்த மக்கள் இன்று இல்லை. கிராமங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்புமிக் கபண்புகளைக் கொண்டிருந்தன. கிராமங்கள் அழிந்ததால் சனசமூகநிலையங்கள், கலாச்சாரநிறுவனங்கள், சிறுவர்த்தகம் செழித்தோங்கும் தெருச் சந்திகள், பெருமைமிக்க கிராமியசந்தைகள் இன்று உயிர்ப்புடன் இல்லை.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற வேளையில் பலலட்சம் மக்கள் ஐரோப்பாவில் இடம்பெயர்ந்தார்கள். ஊள் நாட்டிலும்,அந்நியநாடுகளிலும் தஞ்சம் புகுந்தார்கள். கிராமங்கள் வெறிச்சோடின. நாட்டின் உயிர்நாடியான கிராமியப் பொருளாதாரமும், கலாச்சார பாரம்பரியங்களும் அழிந்தன. ஆனால் போர் முடிவுற்றதும் அகதிகளாகிய மக்கள் அவரவர் கிராமங்களில் குடியேற்றப்பட்டால் மட்டுமே ஜேர்மன் கலாச்சார பாரம்பரியத்தையும், துடிப்புள்ள சமூகத்தையும் காப்பாற்றமுடியும், ஜேர்மானிய தேசத்தை மீளவும் நிர்மாணிக்கமுடியும் என நம்பிய ஜேர்மன் சமூகவியலாளர்கள், அரசியலாளர்கள் முதலில் அகதிகள் தத்தமது கிராமங்களுக்குச் செல்லவும், அதற்கு வேண்டிய சகல உட் கட்டுமானங்களை உருவாக்கவும் ஜேர்மன் அரசு தீர்மானித்தது. தாம் பாரம்பரியமாக வாழ்ந்த நிலங்களில் மீண்டும் சென்று வாழ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதால் பழையஉறவுகள் மேலும் உறுதியுடன் வளர்ந்தன. கிராமங்கள் புதியபொலிவு பெற்றன. போர் அனுபவங்கள் புதியசிந்தனைகளைத் தோற்றுவித்தன. பாசிசத்தின் கோரமுகங்களை, தம் மக்கள் மத்தியிலே மறைந்து காணப்பட்ட மனித விரோத குணாம்சங்களை பகிரங்கமாக விமர்ச்சித்தார்கள். அவ்வாறான நிலமைகள் என்றும் எழக்கூடாதுஎ ன்பதற்காக மனிதநேய அமைப்புகளைத் தோற்றுவித்தார்கள். பாசிசஅனுபவங்களை நூல் வடிவில் பகிர்ந்தார்கள்.

ஜேர்மன் தேசியவாதத்திற்குள் புதையுண்டு கிடந்த பாசிசம் எவ்வாறு தமது மனிதநேய பண்புகளைக் காவுகொண்டதுஎனப் பகிரங்கமாகவே சுயவிமர்சனங்களை மேற்கொண்டு இன்றுவரை தமது அனுபவங்களை ஏனைய உலகசமூகங்களோடு பகிர்ந்து பாசிசம் தளைப்பதைத் தடுக்க உதவிகள் புரிகின்றனர். இவ்வாறான சமூகமாற்றத்திற்கு ஜேர்மனியின் கல்வியாளர்கள், புத்திஜிவிகள், சமூகசெயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், சமயநிறுவனங்கள் எனபல தரப்பினரும் இணைந்து செயற்பட்டார்கள்.

இவ் விழிப்புணர்வு காரணமாகவே மிகவும் குறுகியகாலத்தில் ஜேர்மனி பொருளாதார வளர்ச்சியிலும், சமூக வளர்ச்சியிலும் பிரமாண்டமான உயரத்தைஎட்ட முடிந்தது. இவ் வரலாற்றின் பின்னணியிலிருந்து எமது அரசியலையும், அரசியல்வாதிகளையும் சமூகநிலமைகளையும் அவதானிக்கும்போது வெட்கமடைய வேண்டியுள்ளது. தம்மைக் கல்விச் சமூகமாக அடையாளப்படுத்திப் பெருமைகொள்ளும் தமிழ்ச் சமூகம் ஏன் அம் மாற்றங்களை நோக்கிச் செல்லவில்லை? கிராமங்களைப் பழையநிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்தநிலங்களில் குடியமர்த்தப்படவேண்டும் என்பதை எமது அரசியல்வாதிகள் அதன் முக்கியத்தவத்தை உணர்ந்துஏன் செயற்படவில்லை? ஏன் தலைமை தாங்கவில்லை? பாராளுமன்றத்தில் விவாதிக்கவில்லை? அவற்றை முதன்மைப்படுத்த ஏன் செயற்திட்டங்கள் வகுக்கவில்லை?

கிராமங்களின் நிலங்கள் விற்கப்படுகின்றன. அக் கிராமங்களுக்கு முற்றிலும் சம்பந்தமில்லாதவர்கள் அதிகபணம் கொடுத்து நிலங்களை வாங்குகின்றனர். வேறுகிராமங்களில் வாழ்ந்தமக்கள் சம்பந்தமில்லாத புதியகிராமங்களில் குடியேறி உறவுகளை மேற்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். அவர்கள் தமது கிராமம் எனக் கூறும் அளவிற்கு இணைப்புஏற்படவில்லை. அந்நியர்களாகவே தம்மைக் கருதி ஒதுங்கிவாழ்கின்றனர். இந்த நிலைநீடிக்குமெனில் கிராமப்புறம் என்பது சிதைந்து நகர்ப்புறவாழ்வுபோல் அயலாரை அறியாத கலாச்சாரத்திற்குள் வாழ்வார்கள் .வசதியுடையவர்கள் அழகான மாளிகைகளை குடிசைகளுக்கு அண்மையில் அல்லது பாரம்பரியமாகஅக் கிராமங்களின் உணர்வுகளை மதிக்காமல் அமைக்கின்றனர். ராணுவமுகாம்களுக்கு அண்மையில் பல மாடிகளைக் கொண்டவீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. எவ்வாறு ராணுவத்துடன் இணைந்து இந்தமக்கள் வாழ எண்ணுகிறார்கள்? எனவினவியபோது தமதுபாதுகாப்பிற்கு அதுநல்லது எனப் பதில் கிடைக்கிறது. யாரிடமிருந்து பாதுகாப்பு? யார் எதிரிகள்? புரியவில்லை.

அரசியல்வாதிகளையே க்கள் தலைவர்கள் என்கிறோம். தலைவர்கள் எங்கே?
ராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெளியேறுங்கள் எனஅரசியல்வாதிகள் போடும் கூப்பாடு வாக்குவங்கி அரசியலாக அல்லது மக்களுக்காக தாம் பாடுபடுவது போன்ற ஓர் தோற்றப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது. ராணுவத்தினர் கையகப்படுத்திய நிலங்களிலிருந்து வெளியேறும்போது மனிதர்கள் குடியிருப்பதற்கான எவ்விதமான கட்டுமானங்களும் இல்லாதிருப்பதை உறுதிசெய்தே வெளியேறுகின்றனர். சிலகாணிகளிலிருந்து ராணுவம் வெளியேறுவதாக செய்திகள் வருகின்றன. தமது காணிகளைப் பார்க்க மக்கள் பலதடைகளுக்கு மத்தியில் இரகசிமாகச் சென்று பார்வையிடுகின்றனர். அப்போது அவர்கள் விட்டுச் சென்ற வீடுகள், கதவுகள், யன்னல், கிணறுகள் போன்றன அப்படியே இருப்பதாக ஆறுதலைடைந்து திரும்புகின்றனர். ஆனால் ராணுவம் உத்தியோகபூர்வமாகவெளியேறியபோது வெறும் தரையே அடையாளம் தெரியாமல் மிஞ்சிக் கிடக்கிறது. பாம்புகளும் ,விஷ ஜந்துக்களுமே விரவிஉள்ளன. மக்கள் எவ்வாறு அங்கு குடியேறமுடியும்? அரசாங்கம் உட் கட்டுமானங்களை நிர்மாணித்தபின் மக்களைக் குடியேறும்படி கோரலாம். ஆனால் மக்கள் பழிவாங்கப்பட்டுள்ளதே உண்மை நிலவரம். அரசியல்வாதிகள் பத்திரிகைச் செய்திகளுடன் சேவை முடிந்ததாக எண்ணி மௌனமாகின்றனர். தேர்தலின் போது வாக்குக் கேட்டுமக்களை நேராகச் சந்தித்த அரசியல்வாதிகளைத் தேர்தலின் பின்னர் முகவர்களின் துணையில்லாமல் சந்திக்க முடிவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் வாழ்க்கை முறை மக்கள் மத்தியில் பலகேள்விகளை எழுப்பத் தவறவில்லை. ஆனால் ஊழல் என்பது ஏற்றுக்கொண்ட நடைமுறையாக மாறியுள்ளதால் யாரும் கேள்விக்குட்படுத்துவதாக இல்லை. தற்போதைய பலஅரசியல்வாதிகளின் ஆரம்பவாழ்க்கையை மக்கள் நன்கு அறிவார்கள். இன்றைய ஆடம்பரவாழ்வினை அவதானிக்கும்போது பாராளுமன்றச் சம்பளத்தால் மட்டும் இப்படி வாழமுடியுமா? நான் வட்டுக்கோட்டையில் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் வாழ்ந்த இல்லத்தைப் பார்த்தேன். இன்றைய தலைவரின் இல்லத்தையும் பார்த்துள்ளேன். வியப்பாக இருந்தது. அன்றைய நல்ல பலதலைவர்களுக்கு இன்று கிடைக்கும் அவதூறுகளையும் காண்கிறோம்.

ஆகதிகளாக பலகாலம் முகாம்களிலும், தனியார் காணிகளிலும், சிறியகுடிசைகளிலும் தமது நிலங்களை இழந்து வாழ்ந்தமக்கள் ராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மேலும் 10 ஆண்டுகள் சென்றாலும் குடியேறமுடியாது. ஏனெனில் அந் நிலங்கள் மனித குடியேற்றத்திற்கு ஏற்றவாறான உட் கட்டுமானங்களைக் கொண்டிருக்கவில்லை. அரசஉதவியும் இல்லை. மக்களிடம் பணமும் இல்லை. போரிற்கு முன்னர் சிறியநிலங்களில் விவசாயம் செய்த மக்கள் தற்போது கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர். ராணுவவாகனங்களில் பலாலியிலிருந்து தக்காளிப் பழங்கள் ஏற்றிச் செல்வதை அவதானித்தபோது மனம் மிகவும் பதைபதைத்தது. புலாலி மக்கள் தக்காளிப் பயிர்ச் செய்கையால் அதுவும் சிறந்தரகங்களை வழங்கினார்கள். இன்று ராணுவம் அதனை அறுவடைசெய்கிறது. அந்தவிவசாயிகள் அவர்களின் சொந்தநிலங்களில் கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களால் ராணுவம் கையகப்படுத்தியுள்ள நிலங்களை விடுவிக்குமாறு கோரமுடியவில்லை. ஏனெனில் அவர்கள் தமது கூலிவருமானத்தை இழக்கமுடியவில்லை. ஒருசாரார் காணிகளை விடுவிக்கும்படி கோர, இன்னொருசாரார் அதனை எதிர்க்கும் நிலைக்கு திட்டமிட்டே மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் சார்பில் யார் பேசுவது? இவர்கள் அவலங்களை யார் எடுத்துக் கூறுவது? தொலைக்காட்சி ஊடகங்களும், பத்திரிகைகளும் பிரச்சனைகளை ஜனரஞ்சகப்படுத்தி அவற்றைப் பரபரப்புச் செய்திகளாக மாற்ற வியாபாரமாக மாற்றுகின்றன.

விவசாயிகள் கூலிகளாகித் தற்போதுஒப்பந்தக் கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர். எந்தத் தொழிலிலும் குறைந்தபட்ச பயிற்சி அற்ற நிலையில் கூலி என்ற காரணத்தால் சம்பளங்களால் சுரண்டப்படுகின்றனர்.

எதிலுமே நம்பிக்கை அற்று வாழும் மக்கள் மத்தியில் வெளிநாட்டவர்களின் உதவியால் திரும்புமிடமெல்லாம் ஆலயங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. மக்கள் ஆலயங்களிலும்,அரசாங்கத்திடமும்,அரசுசாராநிறுவனங்களிடமிருந்தும், வெளிநாட்டுப் பணக்காரர்களிடமும் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேற்குநாடுகளில் வாழும் தமிழர்களில் பலர் தமது நிலங்களை மதில்களாலும், முட் கம்பிவேலிகளாலும் அடைத்து வைத்திருப்பது மட்டுமல்ல, பக்கத்துக் காணிகளையும் விலைபேசுகின்றனர். வறுமையால் வாடும் மக்களிடம் பெரும் பணங்களைக் காட்டிநிலங்களை அபகரிக்கின்றனர். ஆனால் இலங்கை நாணயப் பெறுமதி தினமும் குறைந்து செல்கிறது .பணவீக்கம் அதிகரித்துச் செல்வதால் வெளிநாட்டுப் பணங்களுக்கு அதிக இலங்கைப் பணம் கிடைக்கிறது. தமது பழைய கிராமங்களை நோக்கித் திரும்பும் வெளிநாட்டுத் தமிழர்கள் மலிவான விலைகளில் முக்கிய சந்தி வளைவுகளில் காணிகளை வாங்கிப் பிரமாண்டமான வீடுகளைக் கட்டி பாழடையவிட்டு சிலநாட்கள் தங்கிய பின் செல்கின்றனர். தமது சொத்துக்களைப் பாதுகாக்க உள்ளுர் சண்டியர்களை அமர்த்துகின்றனர்.

வெளிநாட்டவர்களின் வருகை ,பாரியபுதிய வீடுகளின் தோற்றம், அவ் வீடுகளில் வாழும் முதியோர் என்ற நிலைகாரணமாக பலர் மத்தியில் தத்தமது பாதுகாப்புக் குறித்தப் பலத்த அச்சத்தில் வாழ்கின்றனர். இதனால் பொலீசார்பாடுமகா கொண்டாட்டம். தொலைபேசி அழைப்பைக் கொடுத்தால் போதுமானது. சொன்னகாரியம் நிறைவேறிவிடும். அவர்கள் பணக்காரர்களுக்குத் தேவையானதை நிறைவேற்றித் தமது பங்கையும் கேட்டுப் பெற்றுக் கொள்வார்கள். பொலீசார் சிங்களவர் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பிரச்சனை. மக்கள் ராணுவத்துடனும், பொலீசாருடனும் சகவாழ்வு நடத்தக் கற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் அடிப்படைகள் இல்லாத இச் சகவாழ்வு தரப் போகும் ஆபத்துகளை அரசியல்வாதிகளோ அல்லது புத்திஜீவிகளோ எச்சரிப்பதாக இல்லை. ஏனெனில் அவர்களும் இதில் பெரும் சலுகைகளை அனுவிக்கின்றனர்.

முpகஅதிக அளவிலான விவசாயக் காணிகளைக் கொண்டவட பிரதேசத்தில் விவசாயத்தைவிடநுகர்வே அதிகரித்துள்ளது. சிலர் இதனை வர்த்தகம் என வர்ணித்தாலும், உற்பத்தியில்லாத நாட்டில், இறக்குமதியை நம்பும் நாட்டில் வர்த்தகம் என்பது நுகர்ச்சிக் கலாச்சாரம் என்பதைவிட எவ்வாறாக அமையமுடியும்? இந் நுகர்ச்சிப் பொருளாதாரம் முற்றிலும் வெளிநாட்டுப் பணத்தில் தங்கியிருப்பதால் காலப் போக்கில் பெரும் ஆபத்தை நோக்கியே செல்கிறது. மேற்குநாடுகளில் உள்ள ஒருசந்ததியினர் பணங்களை அனுப்பலாம். ஆனால் அடுத்த சந்ததியினர் தொடர்வார்கள் என்பது நிச்சயமில்லை. கிடைத்த பணத்தினை உற்பத்தியில் முதலீடு செய்யாமல் நுகர்வுக்குப் பயன்படுத்தினால் வரும் பணம் குறையும் போது வாழ்க்கைச் செலவைச் சரிக்கட்டமுடியாமல் மக்கள் அவதிப்படுவார்கள்.

இங்கு காணப்படும் வங்கிகளின் தொகையும்,அவ் வங்கிகளின் விளம்பரங்களும் மேலும் அச்சத்தைத் தருகின்றன. இதனை பிரித்தானியாவில் நன்கு அவதானித்துள்ளேன். கடன் அட்டை வசதிகள், வங்கிக் கடன்கள் போன்றன வழங்குகின்றன. தரகர்களின் மயக்குமொழிகளால் கவரப்பட்ட மக்கள் தமதுவருமானம், தமது தொழில்களின் நிரந்தரத் தன்மைஎன்பவற்றைக் கவனத்தில் கொள்ளாது கடன்களை நகைகள். நிலங்களை அடமானம் வைத்து
பெறுகின்றனர். பவுணுக்கு 52000 ருபாய் கடன் எனத் தெருச் சுவரொட்டிகள் பல இடங்களில் காணப்படுகின்றன. குறிப்பிட்ட தவணையில் கடன்களைத் திருப்பிச் செலுத்தாவிடில் அதிகவட்டி செலுத்த வேண்டிஏற்படும் என்பதுபற்றி ஆரம்பத்தில் வங்கிகள் எச்சரிப்பதில்லை. அதனால் சிறிது காலத்திற்குள்ளாகவே ஏற்படும் கடன் பளுக்களால் கடனைச் செலுத்தமுடியாது கடன்களால் வாங்கிய பொருட்களையும், செலுத்திய பணத்தையும் இழந்து, தண்டமும், குற்றப்பத்திரிகைப் பதிவும், எதிர் காலத்தில் கடன் பெறமுடியாத நிலமையும் ஏற்படுகிறது. இங்குகடன்களை வசூலிக்க வங்கித் தரகர்களும்,தனியார் நிறுவனங்களும் அணுகும் முறை பயங்கரவாதம் என வரையறுக்கமுடியும்.

உள்ளுராட்சிசபைகள் பலதற்போது அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இச் சபைகளின் முக்கியஸ்தர்களின் பின்னணிகளை ஆராய்ந்தபோது அவர்களில் பலர் தரகர்கள், கொந்தராத்துக்காரர்கள்,கட்டிட ஒப்பந்தகாரர்கள்,சந்தைக் குத்தகையாளர்கள் எனப் பலபிரிவினராக உள்ளனர். இவர்களே அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களாகவும், கட்சிகளின் நிதிவழங்குனர்களாகவும், உள்ளுர் வியாபாரங்களைக் கட்டுப்படுத்துபவர்களாகவும் உள்ளனர்.

எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர் பிரதேசசபைஉறுப்பினராகும். அவர் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துகொண்டார். அவரது பிரதேசசபைப் பிராந்தியத்திற்குள் சந்தை ஒன்று உள்ளது. இச் சந்தையில் கொள்வனவு செய்ய சிங்களவர்த்தகர்களும் வருவர். இப் பிரதேசசபையில் மீன்பிடிச் சமூகமும் வாழ்கிறது. அவர்களது மீன்கள் அச் சந்தையில் விற்கப்படுகின்றன. ஆனால் வேறுமீனவர்கள் அங்குவிற்கமுடியாது எனஅச் சபை கூறுகிறது. இதற்குக் காரணம் அந்தமீனவர்களின் வருமானத்தைக் காப்பாற்றுது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இதனைப் பார்க்கும்போது அவ் வாதம் சரியானது எனத் தோற்றலாம். ஆனால் இதுகுறித்துச் சிலகேள்விகளை எழுப்புவோம்.

– குறிப்பிட்டமீனவர்களே விற்கலாம் எனில் விலையை யார் தீர்மானிக்கிறார்கள்?

– விற்பனையில் போட்டியிருந்தால்தான் விலைச் சரிவு ஏற்படும். வாடிக்கையாளர் குறைந்தவிலையில் பொருளைப் பெறுவர்.ஆனால் வெளியார் தடுக்கப்படுவதாலும், உள்ளுர் வர்த்தகர்களிடையே விலை தொடர்பாக பொது இணக்கம் இருப்பதாலும ;பாதிக்கப்படுவது நுகர்வோர் மட்டுமல்ல,வெளிவியாபாரியும் பாதிக்கப்படுகிறான். இக் கட்டுப்பாடுயாருக்குஅனுகூலமாகஉள்ளது?

– குறிப்பிட்ட மீன் வியாபாரிகளுக்கா? அல்லது பெருமளவு நுகர்வோருக்கா?
– இங்குபிரதேசசபை யாரின் நலனைப் பிரதிபலிக்கிறது?

– பிரதேசசபை ஜனநாயகத்தைவளர்க்கிறதா? அல்லது ஜனநாயகம் சுயநலத்திற்காகவளைக்கப்படுகிறதா?


– இங்குசந்தை என்பது உற்பத்தியாளனையும், நுகர்வோனையும் சுரண்டும் பொறிமுறையாகவே உள்ளது. இங்குஅரசியல்வாதி யார் பக்கம்?

வாசகர்களே!

இங்குள்ள பலரிடம் சற்று ஆழமாகப் பேசும்போது காணப்படும் அச்சங்கள் இவை. இன்னமும் கடந்த 30 வருடகால அச்சுறுத்தல்களிலிருந்து மக்கள் விடுபடவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் தேசியம், சுயாட்சி, இறைமை, ஒருமித்தநாடு எனப் பேசும்போது இவர்கள் யாருக்காக பேசுகிறார்கள்? யுhரை நொந்து கொள்வது? என்ற கேள்வியே எழுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்ட பிரச்சனைகளை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.தம்முள் பேசுகிறார்கள் .ஆனால் அரசியல்வாதிகள் வேறுஉலகத்தில் சஞ்சரிப்பதையும் காண்கிறார்கள். அவ்வாறானால் மக்கள் ஏன் மாற்றுத் தெரிவை நோக்கிச் செல்லவில்லை? மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இல்லை என மக்கள் எண்ணுகின்றனரா? ஏனெனில் அவர்கள் தமிழ்த் தேசியம் பற்றியே பேசுகிறார்கள். அதுமட்டுமே அவர்களின் பணிஎனக் கருதுகிறார்களா? இவர்கள் நாட்டின் சட்டங்களை இயற்றுபவர்கள். சட்டவிரோதசெயல்களை நிறுத்த புதியசட்டங்களை இயற்றுபவர்கள். வங்கிகள் வழங்கும் நுண் கடன்களில் நுகர்வோர் பாதுகாப்பிற்கு வழங்கியுள்ள உத்தரவாதம் என்ன? வருமானப் பற்றாக் குறை உள்ள ஒருவருக்கு வங்கிகள் கடன் கொடுத்தால் அதற்கு யார் பொறுப்பு? கடன் வழங்கும்போது திரும்பச் செலுத்தும் சக்தி அவருக்கு உண்டா? என்பதை வங்கியே முடிவுசெய்து கடன் வழங்கவேண்டும். ஆதை விடுத்து கடன் பெறுபவரை குற்றப் பதிவில் கொண்டுசேர்ப்பதும், அதன் காரணமாக பிற்காலத்தில் கடன் பெறமுடியாதவாறு பொதுமகன் தடுக்கப்படுவதும் வங்கியின் தவறாகும்.

இவ்வாறாக நுகர்வோரைப் பாதுகாக்கும் அம்சங்கள் குறித்து இந்த அரசியல்வாதிகள் கவனம் செலுத்தவில்லை என வினவும் போது சில உண்மைகள் தானாகப் புலப்படும். அதாவது இவர்களின் மௌனம் என்பது சமூகத்தின் சிலபிரிவினரைப் பாதுகாக்கும் நோக்கமுள்ளதை அறியலாம். அவர்களே அரசியல்வாதிகளின் தரகர்கள். ஏனெனில் அரசியல்வாதிகள் தற்போது மக்களுடன் இல்லை. மாடமாளிகைகள், அல்லது வசதிபடைத்தN ஹாட்டல்களே அவர்களின் தங்குமிடங்கள். சாமான்ய மனிதன் பயணிக்கும் வண்டிகளில் அவர்கள் செல்வதில்லை. குளிருட்டப்பட்ட, யன்னல்கள் மறைக்கப்பட்ட சொகுசுவாகனங்கள். அவர்கள் மக்களுக்கு அப்பால் வாழ்கிறார்கள். பேசுகிறார்கள். இதனால் மக்களின் பிரச்சனைகள் இறைமை, சுயாதீனம்,சுயாட்சி, ஒருமித்தநாடு என்பவைகளால் மிக இலகுவாகவே மறைக்கப்பட்டு மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

(தொடரும் )

Share:

Author: theneeweb