தமிழ்தேசியவாதமும் தாயகக்கோரிக்கையும் -2

ஒரு திறந்த விவாதத்தை நோக்கி

-சமுத்திரன்—-

 

இலங்கையின் தேசியஇனப்பிரச்சனையின் இன்றைய வடிவமும் உள்ளார்ந்த தன்மைகளும் என்ன? வடக்குக்கிழக்கு மக்களின் சுயநிர்ணயஉரிமையை ஒரு கோரிக்கையாக முன்வைத்த காலத்தின் நிலைமைகளுடன் ஒப்பிடும் போது இன்றைய நிலைமைகளை எப்படி விளங்கிக் கொள்ளலாம்? இலங்கையில் தேசியஇனப்பிரச்சனை வடக்குக்கிழக்குத் தமிழ்மக்களின், முஸ்லீம்மக்களின் உரிமைகளைப் பற்றிய பிரச்சனை மட்டுமின்றி அதற்கும் அப்பால் மலையகத் தமிழ்மக்களினதும், தெற்கிலே பரந்து வாழும் தமிழ்பேசும் மக்களினதும், உரிமைகளையும் பற்றியது என்பதை மறந்து வடக்குக்கிழக்கில் வாழும் மக்களின் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசமுடியுமா? இனரீதியில் இனத்துவ மேலாதிக்க அரசினால் இரண்டாம்தர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சமூகங்களின் கோரிக்கைகளை இணைத்து அரசியல்ரீதியில் சிந்திப்பது இன்றைய தேவை இல்லையா? இலங்கையில் தேசியஇனப்பிரச்சனை என ஒன்றில்லை இருந்தது பயங்கரவாதப்பிரச்சனையே, அது தீர்க்கப்பட்டு விட்டது எனும் கருத்தும், உணர்வும் ஆழப்பதிந்திருக்கும் சிங்களமக்களுக்கு வடக்கு கிழக்கின் உண்மையான நிலவரங்களையும், இனரீதியில் தமிழ்பேசும் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும் எடுத்து விளக்குவது அவசியமில்லையா? இது ஒரு பெரும் சவால் மிக்கது. அதேவேளை அவசியமானது என்பதே எனது கருத்து.

வடக்குக்கிழக்கில் இதுவரை ஏற்பட்டுள்ள பல மாற்றங்கள் குறிப்பாக இனப்புவியியல் ரீதியான மாற்றங்களைப் பார்க்கும் போது முன்னைய நிலமைகளுக்கு ஒருபோதும் திரும்பிப் போக முடியாது எனும் உண்மை தெளிவாகிறது. இன்றைய உடனடித் தேவைகளில் ஒன்று தொடர்ந்தும் இனத்துவ மேலாதிக்க நோக்கில் அரச உதவியுடனான குடியேற்றத்திட்டங்களும் அரசநிலத்தின் உபயோகம், உரிமை பற்றிய ஒருதலைபட்சமான பிரகடனங்களும், மக்களின் சம்மதமின்றி நில வளங்களைப் பெருமூலதனத்திடம் கையளிக்கப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். இதை ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மற்றைய தமிழ்பேசும் இனங்களின் சிங்களமக்கள் மத்தியிலுள்ள முற்போக்கு அரசியல் சக்திகளின் ஆதரவைப் பெறும் வகையில் முன்வைப்பது உடனடித் தேவையாகும். இராணுவமயமாக்கல் அத்துடன் உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும் என்பதும் இத்தகைய ஒரு ஜனநாயக உரிமைக் கோரிக்கையே.

இன்றைய இலங்கைஅரசு ஒரு ஒற்றைஆட்சிஅரசு மட்டுமல்ல அது ஒரு இனத்துவ மேலாதிக்க மயப்படுத்தப்பட்ட, இராணுவமயப்படுத்தப்பட்ட, சகல மக்களின் ஜனநாயக உரிமைகளையும் நசுக்கும் அரசாக மாற்றம் கண்டுள்ளது. ஜனநாயகத் தோற்றங்களை வெளிஉலகிற்கு காட்டிக் கொண்டு அதிகாரவாத அரசாக மாறியுள்ளது. இன்றைய ஆட்சியில் நீதித்துறை, நிர்வாகத்துறை, உயர்கல்வித்துறை நிறுவனங்களின் முகாமை அனைத்துமே மோசமாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.அரசாங்கத்தின் பொருளாதாரக்கொள்கை பெருமூலதனத்திற்கும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கும் நாட்டின் வளங்களை அபகரிக்கும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கும் அதேவேளை உழைக்கும் வர்க்கங்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பெரும் சுமைகளைப் போட்டுள்ளது.

இனமேலாதிக்க மயப்படுத்தப்பட்ட ஒற்றைஆட்சி அரசின் மீள்அமைப்பின்றி தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காணமுடியாது. இது ஜனநாயகத்தை அர்த்தமுள்ள வகையில் நிலைநாட்டுவதற்கும் இனங்களிடையே சமத்துவத்தின் அடிப்படையில் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் அமைதியைக் கட்டி எழுப்பவும் இன்றி அமையாததாகும்.அதேவேளை மேற்குறிப்பிட்ட நிலைமைகளின் விளைவுகள் இன,மத எல்லைகளையும் தாண்டி சகல இன மக்களையும் பாதித்துள்ளன. இவையெல்லாம் இன்று ஒரு பரந்த ஜனநாயக அணியை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தைத் தந்துள்ளன. இத்தகைய ஒரு அணியின் உருவாக்கத்துடனேயே தேசியஇனப்பிரச்சனையின் அரசியல் தீர்வுக்கான போராட்டமும் இணைய வேண்டும்.இத்தகைய ஒரு அணுகுமுறை சாத்தியமில்லை எனச் சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால் அதை எப்படிச் சாத்தியமாக்குவது என்பதே ஆக்கபூர்வமான கேள்வியாகும்.

மரபுரீதியான எதிர்க்கட்சிகளால் மாற்றத்திற்கான போராட்டங்களை எடுத்துச் செல்ல முடியாது என்பது தெளிவான உண்மை. இன்று ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் மாற்று அமைப்புகளுக்கூடாக வளர்க்ககூடிய சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன. இப்போது நடைபெறும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களின் வேலைநிறுத்தமும் மாணவர்களின் போராட்டமும் பரந்துபட்ட முறையில் பொதுமக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுள்ளன. நீண்ட காலத்திற்குப் பின் இது ஒரு நல்ல அறிகுறி. நிலஅபகரிப்புக்கெதிரான போராட்டங்கள், காணாமல்போனோர் பற்றிய தகவல்களைத் தேடும் இயக்கங்கள், வெள்ளைவான் கடத்தல்களை எதிர்க்கும் போக்குகள் போன்றவை பல்லினங்களையும் சார்ந்தவை. இந்தச் சூழ்நிலை தமிழ்பேசும்மக்களின் உரிமைகள் பற்றி நியாயமான அரசியல்தீர்வு பற்றிய கருத்துப்பரிமாறல்களுக்குச் சாதகமானதெனும் நம்பிக்கை பிறக்கிறது. இதற்கான அறிகுறிகள் இருக்கவே செய்கின்றன. ஒரு அரசியல் திட்டத்தை முன்வைப்பது எனது நோக்கமல்ல. அது எனது ஆற்றலுக்கு அப்பாற்பட்டதென்பதை நான் அறிவேன். கடந்த காலத்தையும், இன்றைய நிலமைகளையும் விமர்சன ரீதியில் – சுய விமர்சன ரீதியில் – ஆராய்ந்து அரசியல் ரீதியில் முன்னே செல்லும் வழிகளுக்கான தேடலைப் பற்றிய ஒரு திறந்த விவாதத்தின் தேவையை எடுத்துக் கூறுவதே எனது நோக்கம்.

நட்புடன்
சமுத்திரன்
shan@samuthran.net

Share:

Author: theneeweb