வெனிசூலா அரசியல் பதற்றத்துக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு: சீனா

வெனிசூலாவில் நிலவி வரும் அரசியல் பதற்றத்துக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங் கூறியதாவது: வெனிசூலாவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு அரசியல் சாசனம் மற்றும் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு அந்த நாட்டு மக்கள்தான் தீர்வு காணவேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வு காண்பதால் மட்டுமே அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும்.

வெனிசூலாவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக சர்வதேச நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளை வரவேற்கிறோம். வெனிசூலா பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதில் நாங்கள் தொடர்ந்து ஆக்கப்பூர்வ பங்காற்றுவோம் என்றார் அவர்.

வெனிசூலாவின் இடைக்கால அதிபராக எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ தம்மை அறிவித்துக் கொண்டதைத் தொடர்ந்து அந்த நாட்டில் நிலவி வரும் அரசியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து, உருகுவே அதிபர் தபாரே வாஸ்குவெஸ் தலைமையில் ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்வீடன் உள்ளிட்ட 14 நாடுகள் உருகுவே தலைநகர் மான்டேவிடேயோ நகரில் வியாழக்கிழமை கூடி விவாதித்தன.
அதுகுறித்து ஹுவா சன்யிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார்.

வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவுடன் நெருக்கமான நல்லுறவைப் பேணி வரும் சீனா, வெனிசூலா அரசியல் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்று இதற்கு முன்னர் கூறியருந்த நிலையில், அந்த நாட்டுப் பிரச்னைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான சர்வதேச முயற்சிகளை வரவேற்பதாக தற்போது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

chinaவெனிசூலாவில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிக்கோலஸ் மடூரோ தலைமையிலான ஆட்சியில் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக, 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. அதையடுத்து

நாடாளுமன்றத்துக்கு ஆட்சி அதிகாரத்தைத் தர மறுத்த மடூரோ, அதை விட அதிக அதிகாரம் படைத்த அரசியல் சாசனப் பேரவையை 2017-ஆம் ஆண்டு அமைத்தார்.
இந்த நிலையில், வெனிசூலாவின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான சர்ச்சைக்குரிய தேர்தல் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதில் மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், வெனிசூலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் பலர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், வெனிசூலா நாடாளுமன்றத் தலைவராக பொறுப்பு வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ, நாட்டின் இடைக்கால அதிபராக தம்மை கடந்த மாதம் அறிவித்துக் கொண்டார். அவர் அவ்வாறு அறிவித்த சில நிமிடங்களிலேயே, அவரை வெனிசூலாவின் இடைக்கால அதிபராக அமெரிக்கா அங்கீகரித்தது. மேலும், பிரேஸில், கொலம்பியா, சிலி, பெரு, ஆர்ஜெண்டீனா உள்ளிட்ட பிராந்திய நாடுகளும் ஜுவான் குவாய்டோவை அங்கீகரித்தன.
எனினும், இதற்கு ரஷியா, சீனா, துருக்கி, கியூபா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Share:

Author: theneeweb