இயற்கையே உன்னையழித்து செயற்கையில் ஐக்கியமாகும் புதிய கலாச்சாரம்

–          கருணாகரன்—–

“ஆறில்லா ஊரின் அழகு பாழ்” என்று சொன்னவர் வாயில் ஆயுளுக்கும் பாலூற்ற வேணும். அறிந்து, அனுபவித்தே இந்த வார்த்தைகளை – இந்த உண்மையை – மனிதர் சொல்லியிருக்கிறார்.

ஆறிருந்தால் நீரிருக்கும். நீரிந்தால் மீனிருக்கும். மீனிருந்தால் கொக்கும் குருவிகளுமிருக்கும் என்று உங்கள் மனதிலே ஒரு சித்திரம் உருவாகும். உண்மைதான். ஆனால், ஆறிருந்தால் அதோடும் அதைச்சுற்றியும் மரங்களும் காடும் வயலும் நிலமும் செழித்திருக்கும். இப்படிச் சூழலே செழித்தால் வாழ்வும் மனமும் செழிக்கும். இதுவும் ஆறுகளைப் பற்றிய இன்னொரு சித்திரமே.

இதனால்தான் “ஆறில்லா ஊரின் அழகு பாழ்” என்றார்கள். இங்கே சொல்லப்படும் அழகு வெறுமனே கண்ணுக்குத் தெரியும் அழகு மட்டுமல்ல, அகத்தின் உள்ளே சுடரும் அழகுமாகும். நிலமும் மனமும் பெறுகின்ற வளத்தின் அழகு.

வன்னியின் வளமும் அழகும் செழிப்பும் அங்குள்ள ஆறுகளின் மூலத்தினால் உருவாகியவையே.

எனவே வன்னியின் வாழ்க்கையும் அதனுடைய பண்பாடும் ஆறுகளின் கொடை எனலாம்.

கனகராயன் ஆறு இரணைமடுக்குளமாக பரந்து கிடக்கிறது. இதிலிருந்துதான். கிளிநொச்சி, வட்டக்கச்சி, முரசுமோட்டை, இராமநாதபுரம், பரந்தன், உருத்திரபுரம் எல்லாம் உருவாகியவை. கிளிநொச்சி என்பதே இரணைமடுவின் குழந்தைதான். ஒரு பெரிய நகரத்தை உருவாக்கியது ஒரு குளம் என்றால் அதை நம்புவது பலருக்கும் கடினமாக இருக்கும். இந்தக் குளத்தை உருவாக்கியது ஆறு. ஆமாம், கனகராயன் ஆறு.

சிலப்பதிகாரத்தை உருவாக்கியது காவிரிப்பூம் பட்டினம். காவிரிப்பூம்பட்டினத்தை உருவாக்கியது காவிரி.

இப்படித்தான் நெத்தலியாறு உருவாக்கியது கல்மடுக்குளத்தை. கல்மடுக்குளம் உருவாக்கியதே தருமபுரம், நாகேந்திரபுரம் போன்றவற்றை. அப்படியே அது நீண்டு புளியம்பொக்கணை, கண்டாவளை எல்லாவற்றைலயும் உயிரூட்டுகிறது.

முல்லைத்தீவில் பேராறு முத்தையன்கட்டை உருவாக்கியது. மண்டக்கல்லாறு அக்கராயன் குளத்தையும் கலவரப்பாறு வன்னேரிக்குளத்தையும் குடமுருட்டியாறு பூநகரி – நல்லூரையும் உண்டாக்கின. பிரமந்தனாறு, மூங்கிலாறு, நாயாறு எல்லாம் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு குளங்களையும் உருவாக்கி, பல ஊர்களையும் பிறப்பித்தன. பாலியாற்றின் தீரத்தில் உருவானதே வவுனிக்குளம், பனங்காமம், பாண்டியன்குளம், மல்லாவி, ஒட்டங்குளம் போன்றவை. தென்னியன்குளம் இன்னொன்று. அதற்குப் பக்கத்தில் கோட்டைகட்டி, அதற்கு அண்மையாக அம்பலப்பெருமாள், அதற்கு மேற்கே பல்லவராயன்கட்டு. இதற்கு தென் கிழக்கில் தென்னியன்குளம். இதற்குத் தெற்கே அனிஞ்சியன்குளம்.

மன்னாரில் பறங்கியாறு, நாயாறு, அருவியாறு… ஒரு காலம் மாந்தை என்ற வரலாற்றுச் சிறப்புடைய பெரும் வணிகப்பட்டினத்தை உருவாக்கியவை இந்த ஆறுகளே. பிறகு கட்டுக்கரைக்குளமாகி முருங்கன், அடம்பன், திருக்கேதீஸ்வரம், வட்டக்கண்டல் என்று ஒரு தொகை ஊர்கள் பெருகியுள்ளன.

வவுனியாவில் குளங்கள்தான் ஊர்களின் முகங்கள். கொந்தக்காரன்குளம், செட்டிகுளம், பூவரசங்குளம், பன்றிக்கெய்தகுளம், ஒட்டறுத்த குளம், கோயில்குளம், தவசிகுளம், கிடாய்க்குளம், பிடாரிகுளம், பண்டாரிகுளம், சின்னப்புதுக்குளம், புதுக்குளம், பெரியகுளம், கொக்குச்சுட்டகுளம், புளியங்குளம், கனகராயன்குளம், விளக்குவைத்தகுளம், காக்கையன்குளம், கற்குளம், நெளுக்குளம், மாறா இலுப்பைக்குளம், பனிக்கங்குளம், மருதங்குளம், கிடாச்சூரிக்குளம், கறுப்பிகுளம்…. இப்படி நூற்றுக்கணக்கான குளங்கள். குளங்களை மையமாக வைத்தே ஊர்கள். ஊர்கள் வாழ வயல்கள்.

இதெல்லாம் நீரோடுள்ள உறவே. நிலமும் நீரும் சேரும்போது உண்டாகும் உயிர்ப்பே அழகின் உச்சம். அதனால்தான்தான் “நீரின்றி அமையாது உலகு” என்கிறார்கள் எல்லோரும்.

இது நீரின் உலகம். வேறு கிரகங்களில் மனிதர்கள் தேடுவது முதலில் நீரைத்தான். நீர் இருந்தால் உயிரினங்கள் பெருகும், வாழும். பிரபஞ்சத்திலே பூமிக்கிருக்கும் சிறப்பே அதில் உள்ள நீர்தான். நீர் எங்கே இருக்கிறதே அங்கே நிலம் செழித்திருக்கும்.

வன்னியும் அப்படித்தான் நீரும் நிலமும் அமையப்பெற்ற பெருந்தலம்.

இதனால்தான் வன்னியில் மீது இலங்கை, இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பெரும் பொருளாதாரத் தடைகளையும் பெரும்போரையும் மக்கள் எதிர்கொள்ளக் கூடியதாக இருந்தது. எந்தச் சூழ்நிலையிலும் இயற்கை வளங்களிலிருந்தே தமக்கான அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நிலை வன்னியில் உண்டு. புலிகள் இயக்கம் கூட தமக்கான நெருக்கடிக் காலங்கள் அத்தனையையும் வன்னியில் நின்றே எதிர்கொண்டது.

வேட்டையும் விவசாயமும் தேனெடுப்பும், பழம்பிடுங்குதலும் சேனைக் காவலும் விலங்கு வளர்ப்பும் மீன்பிடியுமானது வன்னிப் பண்பாடு. நிலத்துக்கும் நீருக்கும் தோதான வாழ்க்கை. இயற்கை வளத்துக்குப் பொருத்தமான தொழில்கள்.

வன்னியின் வளங்களில் நீரும் நிலமும் முக்கியமாக இருப்பதைப்போல காடும் கடலும் வயலும் விரிந்த நிலமும் முக்கியமானவையே.

கிழக்கே முல்லைத்தீவு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, சாலை, பொக்கணை, மாத்தளன், சுண்டிக்குளம் என்றால் மேற்கே மன்னார், தலைமன்னார், இலுப்பைக்கடவை, நாச்சிக்குடா, வலைப்பாடு, பள்ளிக்குடா, பூநகரி, ஆனையிறவு என்று மூன்று பக்கமும் கடல்தான். இதைப்போலப் பெருங்காடுகள் இன்னொரு அரிய வளம். மரங்களும் விலங்குகளும் என்று அது இன்னொரு உலகம்.

இந்த ஆறுகளின் வரலாற்றை நாங்கள் இரண்டாக வகுத்துக் கொள்ள வேணும். ஒன்று பெருங்குளங்களுக்கு முற்பட்ட காலம். இன்னொன்று பெருங்குளங்கள் நிர்மாணிக்கப்பட்ட பிறகான காலம்.

கனகராயன் ஆறு முன்பு போய்க் கண்டாவளையை அண்மித்த கடலில் விழுந்தது. குறிப்பாக கொம்படி, கரவெட்டித்திடல், கோரக்கன்கட்டு, ஊரியான், புளியம்பொக்கணையின் கடலோரம் போன்ற பகுதிகளில்.

அப்படிக் கனகராயன் ஆறு வீழ்ந்த கழிமுகத்தில்தான் விவசாயம் செய்யப்பட்டது. எப்போதும் ஆறுகளின் கழிமுகத்தில் வண்டல் மண் சேரும். வண்டல் மண் விவசாயத்துக்கு அருமையான பெரும் வளம். வன்னியில் உள்ள ஆதிக்குடிகள், பழைய நகரங்களை  ஆராய்ந்து பார்த்தால் இது தெளிவாகத் தெரியும்.

பறங்கியாறு, அருவியாறு, நாயாறு எல்லாம் சேர்ந்து உருவாக்கியதே மாந்தைக்குடியிருப்பும் மாந்தைப் பட்டினமும்.

கனகராயன்ஆற்றை மறித்து இரணைமடுவைக் கட்டியபோது கண்டாவளைக்கான நீர் மட்டுப்படலாயிற்று. பிறகு அங்கே கோடையில் தண்ணீர் தேடி அலைகின்ற வாழ்க்கை வந்து சேர்ந்தது.

இப்படித்தான் ஒவ்வொரு ஆறுகளையும் மறித்துக் குளங்களைக் கட்டியதால் அவை முன்னர் போய் விழுந்த கழிமுகங்கள் வரளத் தொடங்கின. பூநகரி இதற்கு நல்லதொரு உதாரணம். அக்கராயன், வன்னேரி, கரியாலை, நாகபடுவான் போன்ற குளங்கள் எழுந்ததோடு பூநகரி காய்ந்துபோனது. இப்பொழுது அது வஞ்சிக்கப்பட்ட பூமியாகி விட்டது.

மாந்தைக்கு நேர்ந்த கதியும் இதுதான். வடக்கிலே மிகுந்த எழுச்சியோடிருந்த மாந்தைப்பட்டினத்தை கட்டுக்கரைக்குளம் எழுந்து விழுங்கியது. பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரம் அப்படியே காய்ந்து போனது. மாந்தை என்ற துறைமுக நகரம் பிறகு ஒரு சிறிய ஊர் என்றானது.

இப்படி வரலாற்றையே புரட்டிப்போட்ட ஆறுகளின் அடி தேடினால் ஒவ்வொன்றுக்கும் பின்னால் உள்ள ஏராளம் ஊராண்ட கதைகளும் அழிவைச் சந்தித்த சோகங்களும் தெரியவரும்.

ஆனாலும் இங்கே ஒரு கவலைக்குரிய வேடிக்கையும் கவனிக்க வேண்டிய உண்மையும் உண்டு.

ஆறுகளை மறித்துப் பெருங்குளங்களைக் கட்டியபோதும் யாராலும் பெருகிவரும் காட்டாற்று வெள்ளத்தைக் கட்டுப்படுத்திட முடிவதில்லை. இப்படிப் பெருகி வரும் காட்டாற்று வெள்ளம் ஆண்டு தோறும் ஊர்களைப் புரட்டி, வீதிகளை நிரப்பி, வயல்களை அழித்து கடலில் போய் விழுகிறது.

இதற்காக அரசாங்கம் சில திட்டங்களை வைத்திருக்கிறது. கடலில் போய் விழும் தண்ணீரை எப்படியாவது சேமித்துப் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திட்டமாகும். ஆனால், இதை எப்படிச் செயற்படுத்துவது?

ஏனென்றால் எல்லாவற்றுக்குள்ளும் அரசியல் புகுந்து விளையாடுவதால் இதிலும் அரசியல் புகுந்து விளையாடுவது தவிர்க்க முடியாத விதியாகி விட்டது.

ஒரு காலம் குடிகளையும் ஊர்களையும் உருவாக்கிய ஆறுகள் பிறகு சிறு பட்டினங்களையும் அரசுகளையும் உருவாக்கின. இப்போது அரசும் அரசியலும் ஆறுகளைக் கட்டுப்படுத்துகின்றன. ஆறுகளைக்கொள்ளையடிக்கின்றன.

ஆறுகளில் மணல் கொள்ளையிடப்படுகிறது. ஆறுகளில் நீர் கொள்ளையடிக்கப்படுகிறது. அல்லது வீணாகக் கடலில் விடப்படுகிறது.

திசைமாற்றப்பட்ட ஆறுகளால் பாரம்பரிய அடையாளங்களும் தொல்குடியிருப்புகளும் அழிகின்றன. இதைச் சரியாகச்சொன்னால், ஆறுகள் திசைமாற்றப்பட்டதால் பாரம்பரியங்களும் பழைய தொல்லூர்களும் காணாமல் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆறுகளை மறித்துக் குளங்களைக் கட்டி, விவசாயம் செய்வதுதான் ஒரே வழி என்றால் நிச்சயமாக இல்லை. அப்படி நினைத்தால் அது விவசாயிகளே மேலோங்கி இருப்பதாக அர்த்தமாகும்.

ஆறுகள் கடலில் வீழும் கழிமுகத்தில் தரமான மீன்களும் இறால், நண்டு, கணவாய் போன்ற பிற கடலுணவுகளும நிறையை விளையும். நன்னீரும் கடல் நீரும் சேருமிடத்தில் விளையும் கடல்வாழ் உயிரனங்களின் ருசியும் பெறுமதியும் நிகரற்றவை. இந்தக் கழிமுகங்களில் விளைகின்ற நெல்லும் அப்படியானவையே. பெரிய கறுப்பன், மொட்டைக்கறுப்பன், பச்சைப்பெருமாள் எல்லாம் இந்தக் கழிமுகத்துக்குழந்தைகளே.

Karunakaran

ஆனால், இன்றைய சூழல் இவை எல்லாவற்றையும் பொருட்படுத்துவதாக இல்லை. அவரவர் தத்தமது தேவை, நலன் என்ற அளவில்தான் சிந்திக்கிறார்கள். ஆறு சிதைந்தால் என்ன? குளம் வற்றினால் என்ன? சனங்கள் துயரில் சிக்கினால் என்ன? என்னுடைய தேவைகள் மட்டும் நிறைவேறினால் போதும் என்ற அளவில்.

இது என்ன பண்பாடு என்று தெரியவில்லை. சேர்ந்திருந்த, சேர்ந்து பயணித்த, சேர்ந்து வேலை செய்த, சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை இழந்து தனியாக வாழ வேணும் என்ற எண்ணம் எங்கிருந்து, எந்தப் பண்பாட்டிலிருந்து, எந்த ஆற்றின் மூலத்திலிருந்து உருவாகியது?

Share:

Author: theneeweb