தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியத்தை கொண்டு நடத்திய பெட்டிகோ நிறுவனம் தொடர்பாக விமல் வீரவன்ச வெளியிட்ட தகவல்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியத்தை கொண்டு நடத்திய சுபாஸ்கரன் அலிராஜா என்பவருக்குச் சொந்தமான பெட்டிகோ எனற் நிறுவனம் ஊடாக ஈ.ஏ.பீ. நிறுவனம் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று சர்ச்சைக்குரிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவரினால் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த நாட்களில், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் பிரதமர் உட்பட அமைச்சர்களின் அனுசரனையுடன், லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஸ்கரன் அலிராஜாவின் நிறுவனத்திற்கு, ஈ.ஏ.பி. நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவன கூட்டமைப்பு குறைந்த விலையில் வழங்கப்பட்டுள்ளது.

நிதிச்சலவை சட்டத்தின்கீழ் தீவிரவாதத்துடன் தொடர்புடைய நிதியைப் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, சில வெளிநாடுகளில் வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ள இடமளிக்கப்படாத சுபாஷ்கரன் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான, புலிகளின் நிதியில் உருவாக்கப்பட்ட நிறுவனத்திற்கு இந்த நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேநேரம், முதலில் லைக்கா மொபைல் மற்றும் சுபாஸ்பரன் ஆகியோரின் தொடர்பு மத்திய வங்கிக்கு வெளிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், சுபாஸ்கரனுடன் தொடர்புடைய இருவர் லூசமிட் கெப்பிட்டல் மேனேஜ்மன்ட் என்ற சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் ஊடாக இதில் முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

2018 ஜுலை 24 ஆம் திகதி லூசமிட் கெப்பிட்டல் மேனேஜ்மன்ட் என்ற நிறுவனத்தின் பங்குகளை பெட்டிகோ என்ற நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது.

பெட்டிகோ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரனும், அவரது மனைவியுமாவர்.

இந்த நிலையில், அவர்கள் குறித்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றபோது, பெட்டிகோ என்ற நிறுவனத்தின் அடிப்படையில் முன்னிலையாகவில்லை.

அவ்வாறு முன்னலையாகியிருந்தால், சுபாஸ்கரன் அலிராஜாவின் தொடர்பில் நிரூபிக்கப்பட்டிருக்கும் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொடுக்கல் வாங்கலின் பின்னணியில் பிரதமரும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் கீழிருந்த ஆலோசகர மனோ தித்தவெலவும் இருப்பதாகவும் விமல் வீரசன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

மத்திய வங்கியில் கொள்ளை இடம்பெற்று எதிர்வரும் 27 ஆம் திகதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ளன.

இந்த நிலையில், நிதிச்சலவை சட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுபாஸ்கரனின் நிதிக்கு இலங்கையின் நிறுவனங்களை கொள்வனவு செய்ய இடமளித்த குற்றச்சாட்டிலிருந்து மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநரினால் விடுபட முடியாது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அடுத்து அமையவுள்ள அரசாங்கத்தில் இது தொடர்பில் இடம்பெறவுள்ள விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb