பிரிட்டன்: வரி இரட்டிப்புக்கு இந்திய மருத்துவர்கள் எதிர்ப்பு

பிரிட்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களிடம் வசூலிக்கப்படும் சுகாதார வரி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது நியாயமற்றது எனக் கூறி, அங்கு பணியாற்றி வரும் இந்திய மருத்துவர்களும், சுகாதாரத் துறை ஊழியர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில், வேலை, கல்வி உள்ளிட்ட நுழைவு இசைவின் (விசா) அடிப்படையில் 6 மாதங்களுக்கு மேலாக வசித்து வருவோர் மற்றும் பணியாற்றி வருவோரிடம் கடந்த 2015 ஏப்ரல் முதல் ஆண்டுதோறும் “குடியேற்ற சுகாதார வரி’ வசூலிக்கப்படுகிறது. அந்நாட்டு அரசு செயல்படுத்தும் தேசிய சுகாதார சேவை திட்டத்துக்கு கூடுதல் நிதியை சேகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அந்த வரித் தொகையை ரூ.18,435-இல் இருந்து, ரூ.36,870-ஆக பிரிட்டன் அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளி மருத்துவர்கள் சங்கம், அந்நாட்டு உள்துறை அமைச்சக செயலர் சஜித் ஜாவிதுக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பிரிட்டனில் தேசிய சுகாதாரச் சேவையை செயல்படுத்துவதற்கு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கான தேவை அதிகமாக உள்ளது. தற்போது குடியேற்ற சுகாதார வரி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது, இந்தியாவிலிருந்து கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பிரிட்டனுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் ஏற்கெனவே பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், குடியேற்ற நடைமுறைகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் பல்வேறு இடர்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வரியை இரட்டிப்பாக்கும் இந்த நடவடிக்கையால், ஐரோப்பிய யூனியனைச் சாராத நாடுகளில் இருந்து திறம்வாய்ந்த மருத்துவ நிபுணர்களை பெறும் வாய்ப்பை பிரிட்டன் இழந்து வருகிறது. ஏற்கெனவே தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தி வரும் சுகாதாரத் துறை நிபுணர்களுக்கு, இந்தக் கூடுதல் வரி மேலும் ஒரு சுமையாக உள்ளது. எனவே, அதிக வரி விதிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb