செஞ்சோலை கிணறுகளை சுத்தப்படுத்தும் செயற்பாட்டிற்கு இடையூறு – மாற்று வலுவுள்ளோர் சங்கம் கவலை

செஞ்சோலை வாளாகத்தில் உள்ள கிணறுகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் அமைப்பினர் மேற்கொண்ட போது அதற்கு சிலர் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுகிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் இருந்த செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச் சோலை காணிகள் கடந்த நவம்பர் மாதம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த காணிகள் அப்போது செஞ்சோலையில் இருந்தவர்களுக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கே எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நீர், மின்சாரம், மலசல கூடம். என எதுவும் இல்லை, அத்தோடு கூரைகள் கதவுகள் ஜன்னல் இல்லாத வெறும் கட்டடங்கள் மாத்திரமே காணப்படுகின்றன. இந்த நிலையில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கமானது கனடா உறங்கா விழிகள் அமைப்பின் உதவியுடன் குறித்த வளவுக்குள் காணப்பட்ட நான்கு கிணறுகளையும் சுத்தம் செய்து வழங்கும் பொறுப்பை ஏற்று இன்று (11) காலை பணியை ஆரம்பித்த போதுஅங்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் தமிழரசுக் கட்சியின் முன்னாள் உப தவிசாளர் அடங்கிய குழுவினர் கிணறு சுத்தம் செய்யும் பணியை இடைநிறுத்துமாறும் தங்களை தவிர வேறு எவரும் இந்த வளவுக்குள் எவ்வித வேலையினையும் மேற்கொள்ள கூடாது என தர்க்கத்தில் ஈடுப்பட்டதோடு, சங்கத்தின் தலைவருடனும் முரண்பட்டுள்ளனர்

இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் தெரிவிக்கையில்15 வருடங்களுக்கு மேலாக போராட்டத்தில் இருந்த முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியான நான் தற்போது மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் தலைவராக பணிகளை மேற்கொண்டு வருகின்றேன். நாம் இன்று செஞ்சோலை வளவுக்குள் உள்ள கிணறுகளை சுத்தம் செய்வதற்கு வந்த போது தமிழரசு கட்சியின் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் நகுலன் மற்றும் அவருடன் வந்த சிலர் என்னை துரோகி என்று திட்டியதோடு கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை நிறுத்துமாறு அச்சுறுத்தினார்கள். இருந்தும் நாம் அதனை கவனத்தில் எடுக்கவில்லை. செஞ்சோலை பிள்ளைகளுக்காக எமது பணியை தொடர்ந்து மேற்கொண்டோம் எனத் தெரிவித்த அவர் இச் செயற்பாடு கவலையளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

Share:

Author: theneeweb