தூக்கிலிடும் பணிக்கு ஆட்கள் தேவை; விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

கொழும்பு: மரண தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ஜனாதிபதிமைத்ரிபால சிறீசேனா விலக்கிக் கொண்டதை அடுத்து, தூக்கிலிடும் பணிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை அரசு கொடுத்துள்ளது.

இது குறித்து சிறைத் துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தூக்கிலிடும் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக இலங்கையில் 1976ம் ஆண்டு ஜூன் மாதம்தான் சிறைத் தண்டனைக் கைதிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான எந்த ஆவணத்திலும் ஜனாதிபதி கையெழுத்திடாததால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய அதிபர் சிறீசேனா, இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

1976ம் ஆண்டு தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஊழியர், கடந்த 2014ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb