பருவ காலங்கள் நமக்கானவை.

        கருணாகரன்—

ஒவ்வொரு நிலத்துக்கும் பருவ காலங்கள் அழகு. கூடவே அடையாளமும். அந்த நிலத்தின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் உருவாக்குவதில் பருவகாலங்களுக்கு வலிமையுண்டு. வன்னியின் பருவ காலங்கள் அழகானவை. அதே அளவுக்குக் கடினமானவை. சிலவேளை நெருக்கடிகளை உண்டாக்கி விடுவன. வன்னியில் மழை பெய்தால் அழகு. மழைக்காலத்தில்  காடுகள் எல்லாம் செழித்துப் பூக்கும். வான் தொடும் எல்லை வரை விரிந்த வயல்வெளி பச்சைமயமாகி விடும். வளவும் தோட்டமும் பச்சை. ஒற்றைக் கோடாக நீளும் கிறவல் பாதைகளை மூடத் துடிக்கும் புல்லும் பூண்டுகளும் பச்சை. வழிகளும் வரம்புகளும் பச்சை. இப்படியே எங்கும் பச்சை. எதிலும் பச்சை என்று வன்னியே பச்சையாகி விடும்.

“பார்க்குமிடமெல்லாம் உந்தன் பசிய நிறம் தோன்றுதடா நந்தலாலா” என்று பாடத் தோன்றும்.

ஆனால், அப்பொழுதுதான் வெள்ளமும் வன்னியை ஆட்டிப் படைப்பதுண்டு. வெள்ளம் கூடினால் குளங்கள் பெருக்கெடுக்கும். வெள்ளம் பெருக்கெடுத்தால்  வயல்கள் அழியும். பாதைகள் அறுத்தோடிக் கெட்டு விடும். சில இடங்களில் ஊருக்குள்ளும் வெள்ளம் பகுந்து அட்டகாசம் செய்யும். (வெள்ளம் பாய்கின்ற வழியில் வீடுகளைக் கட்டிக் குடியிருந்த கதை தனியானது) சிலவேளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போக முடியாதளவுக்கு  போக்குவரத்துகள் தடைப்படுவதும் உண்டு. அந்த நாட்களில் ஆடு மாடுகள் கூடச் செத்து மடியும். இதெல்லாம் சீராக வாரக்கணக்கெடுக்கும்.

வெள்ளம் வடிந்த இடங்களை அப்பொழுது பார்த்தீர்கள் என்றால் ஏதோ யுத்தகளத்தில் நிற்பதைப்போலத் தோன்றும். மரங்கள் முறிந்தும் சரிந்தும் கிடக்கும். ஆறுகள் நிலத்தை அரித்துடைத்துப் புரட்டிவிட்டிருக்கும். பயிரழிந்து சவக்காடாகியிருக்கும். பாதைகள் எல்லாம் கைவிடப்பட்ட ஊரின் காட்சியாகத் தெரியும். சனங்கள் பள்ளிக்கூடங்களிலும் பொதுக் கட்டிடங்களிலும் அகதிகளாகியிருப்பார்கள்.

இப்படியிருந்தாலும் வன்னியில் வெள்ளமும் அழகுதான்.

மரங்களின் கால்களைத்  தழுவியொடும் நீர் பாடுகின்ற பாட்டும் இனியது. அழகானது. அது ஓடுகின்ற ஓட்டமும் அழகு. விராலும் பனை உரஞ்சியும்  வெள்ளத்தோடு சேர்ந்து ஊர் பார்க்கப் போகும். நிலமெல்லாம் தனக்குச் சொந்தம் என்ற மாதிரி நீர் நிலமாள முற்படும். இயற்கையைப் பற்றிச் சொல்வதற்கு மொழிகளில் வழியில்லை. வயல்களின் நடுவேயும் காடுகளின் ஊடாகவும் வழிகளுக்குக் குறுக்காகவும் ஓடுகின்ற ஆறுகள்…

ன்னியின் செல்வம் நீரும் காடும் என்று சொல்லுவார் தில்லையம்பலம். தில்லையம்பலத்தின் பட்டியில் குறைந்தது முன்னூறு மாடுகளுக்கு மேலுண்டு. நாற்பது ஏக்கர் வயல் விதைத்து அறுக்கிறார். இரண்டு ஏக்கரில் உழுந்து போடுவார். அரை ஏக்கரில் கச்சான் (நிலக்கடலை). அரை ஏக்கரில் கத்தரி, கீரை, வெண்டி, மிளகாய், தக்காளி, பூசினி, கோழியவரை, கொத்தவரை, வல்லாரை, பனங்கீரை, முசுட்டை, பொன்னாங்காணி, தூதுவளை, பாலவரை, பாவல் என்று மரக்கறிப் பயிர்கள். உழவு மெசின் ஒன்று நிற்கிறது. வெட்டு மிசின் (அரிவி வெட்டும் இயந்திரம்) எடுக்க விருப்பமிருந்தாலும் அதை வைத்துக் கொண்டு தன்னால் சமாளிக்க முடியாது என்பதால் அதை விட்டு விட்டார். வளவில் நான்கு ஆடுகளும் ஒரு பத்துப் பன்னிரண்டு கோழிகளும் உண்டு. இவ்வளவுக்கும் அவருடைய பரம்பரைத் தொழிலான மீன்பிடியையும் அவர் விடவில்லை. படகு ஒன்றையும்  கரைவலைப்பாடுக்கான பங்கொன்றையும் வைத்திருக்கிறார் சீமான். (தயவு செய்து தமிழ்நாட்டின் சீமானை யாரும் நினைத்து விடாதீர்கள். அது வேறு. இது வேறு சீமான்.

“வெள்ளமும் மழையும் பார்த்துத்தான் நம்மட தொழில் நடக்கும். மழை பிழைத்தால் கதை பிழைக்கும்” என்று புகையின் நடுவே சொல்லிச் சிரிப்பார் தில்லை. புகையென்றால் வேறொன்றுமில்லை. பீடிப்புகை.

பீடி குடிப்பது ஒன்றுதான் தில்லையின் கெட்ட பழக்கம். இன்னொன்று பாரதியார் சொன்னதைப்போல “இமைப்பொழுதும் சோராதிருத்தல்”.

இரண்டு ஏக்கர் வயலில் தொடங்கிய தில்லையின் வேளாமை இப்பொழுது நாற்பது ஏக்கரைத் தாண்டுவதற்குத் துடிக்கிறது. எட்டு ஏக்கர் வயலைக் காடு வெட்டி உண்டாக்கினார். காடு வெட்டி வயலை உருவாக்கும்போது யானைக்கும் பன்றிக்கும் காட்டெருமைக்கும் பதில் சொல்ல வேணும். தொடங்கிய ஐந்து ஆறு ஆண்டுகளும் தில்லையைப் போட்டுப் பாடாய்ப்படுத்தி விட்டன யானைகளும் பன்றியும் காட்டெருமைகளும். எல்லாத்துக்கும் காவலிருக்கலாம். பன்றிக்கு வெடி வைக்கலாம். பொறி வைக்கலாம். தடம் வைக்கலாம். ஆனால் யானைக்கு? கலைப்பதற்கோ சுடுவதற்கோ துவக்கில்லை.

வயலில் காவல் கொட்டிலுக்கு முன்பாகவும் வயற் கரைகளிலும் பொருத்தமான இடம்பார்த்து நெருப்பைக் கொழுத்தி விட்டு சத்தம் போட்டுக்கொண்டு இரவிரவாக இருக்க வேண்டியதுதான். பின்சாமத்தில் கண்ணைத் தூக்கம் பின்னுக்கு இழுக்கும்போது எப்படியோ அந்த ஊட்டுக்குள்ளால் வந்து ஒரு வயலையாவது பதம் பார்த்து விடும் பன்றி. அல்லது காட்டெருமைக் கூட்டம். பன்றியில் தனியன் வந்தால் ஒரு வயலோடு சேதம் நின்று விடும்.  கிளை (கூட்டமாக) வந்தால் கதை அவ்வளவுதான். எப்பிடியும் நாலு பாத்தியையாவது ஒரு கை பார்த்து விட்டுத்தான் போகும்.

ஆனால், இதற்குள் எப்படியோ முத்தெடுத்து விடுவார் தில்லை. “கடல் பிழைத்தால் வயல். வயல் பிழைத்தால் கடல். உங்களுக்கென்ன?” என்று தில்லையைச் சீண்டுவார் தம்பாப்பிள்ளை.

நிலத்திலும் நீரிலும் தொழில் வைத்திருந்தால் ஒன்று பிழைத்தாள் ஒன்று காப்பாற்றும். தில்லையை இரண்டும் காப்பாற்றியதும் உண்டு. இரண்டும் கைவிட்டதும் உண்டு. ஒன்று பிழைத்து ஒன்று கைகொடுத்ததும் உண்டு.

தம்பாப்பிள்ளையும் நான்கு ஐந்து தொழிலைக் கையில் வைத்திருக்கிற ஆள்தான். ஒரு பட்டி மாடு. அதில் அறுபது பசுக்கள் மட்டும் நிற்குது. ஒரு சோடி உழவு மாடு. இப்பொழுது உழவு மாடுகளுக்கு வேலை இல்லை என்றாலும் பரம்பரைப் பழக்கம் என்ற மாதிரி உழவு பழக்கியபடியே இரண்டு எருத்தன்கள் வீட்டில் நிற்கின்றன. எருத்தன் நிற்பது வீட்டுக்கு அழகு என்பது அவருடைய எண்ணம். அதொரு செல்வம் என்பது தம்பாப்பிள்ளையின் நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை.

இப்படி ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் பலருடைய மனங்கள் சிதைவடையாமல் மகிழ்ச்சியாக இருக்கின்றன.

பட்டி வைச்சிருக்கிறதை விட பாலெடுத்துக் கொம்பனிக்குக் கொடுக்கிறார் தம்பாப்பிள்ளை. எப்படியும் நாளொன்றுக்கு எண்ணூறு லீற்றர் பாலை கொம்பனிக்குக் கொடுப்பார். பத்து ஏக்கர் வயல் தண்டுவானில் உண்டு. இரண்டு ஏக்கரில் கச்சான். ஓரங்களில் வருசம் தப்பால் சோளம் போடுவார். கோடையில் மரம் அரியப் போவார். காட்டுத் தடி வெட்டி ஒரு காலம் விற்றார். இயக்கம் வந்து வனவளப்பாதுகாப்புப் பிரிவைப் போட்டபோது வேறு வழியில்லாமல் அதற்குத் தடி வெட்டிக் கொடுத்தார். அது தடிக்கணக்குக்குக் கூலி.

இப்பொழுதுதான் காட்டுக்குள் இறங்க முடியாதே. ஒரு பக்கம் சட்ட ரீதியாக வனவளத்திணைக்களத்தினர் அனுமதிக்க மாட்டார்கள். மறுபக்கத்தில் காட்டுக்குள் கால் வைக்க முடியாது என சட்டத்துக்கு அப்பால் படைகள். ஆமாம், காடாளும் படைகள்.

னாலும் தப்பாப்பிள்ளை அடிக்கடி கண்ணில் மண்ணை அள்ளிப்போடுவதுண்டு. வன்னியான் திரியாத காடென்ன? ஆளாத மேடென்ன? என்று சொல்லிக்கொண்டு தனக்குத் தேவையான மரத்தையோ பலகையையோ தடியையோ காட்டில் வெட்டிக் கொள்வார். இதுவரை அவர் எந்தக் கண்ணிலும் பட்டதுமில்லை. எந்தக் கையில் பிடிபட்டுதுமில்லை. இதைவிட வீட்டிலே ஒரு தச்சுவேலைப் பட்டடை ஒன்றுண்டு. அதில் மூன்று பேர் வேலை செய்கிறார்கள்.

இது தை மாதம். அறுவடைக்காலம். வன்னி வீடுகளின் முற்றத்தில் நெல்லும் கோழியும்தான் நிறைந்து கிடக்கும். நெல்லும் உங்கடைதான். கோழியும் உங்கடைத்தான் என்று சொல்வதைப்போல வீட்டுக்கு வந்த நெல்லை முதலில் தின்று ருசி பார்ப்பது வீட்டுக்கோழிகள்தான்.

கடந்த வாரம் தமிழ் நாட்டிலிருந்து எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் வந்திருந்தார். வீட்டு முற்றத்தில் நின்ற ஊர்கோழிகளைக் கண்டு வாயூறினார். தமிழ் நாட்டில் நாட்டுக்கோழிகளைக் காண்பதே அபூர்வமாம். சில கிராமங்களைத் தவிர வேறு எங்குமே நாட்டுக்கோழிகள் இப்போதில்லை என்றார். அந்தளவுக்கு எல்லாமே செயற்கைக் கோழிகள். புறொயிலர். லக்கோன். கோழி என்றாலே குமட்டிக்கொண்டு வருகிறது என்றார் பா.செ.

ஆனால், வன்னியில் இன்னும் நாட்டுக்கோழி என்ற ஊர்க்கோழிகளை வளர்க்கிற பாரம்பரியம் கெட்டு விடவில்லை. உழவுக்குத் தேவையில்லை என்றாலும் தம்பாப்பிள்ளை, உழவு மாடுகளைப் பழக்கி வைத்திருப்பதைப்போல ஊர்க்கோழிகளைச் சனங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

www.hdnicewallpapers.com

அதைப்போல ஒரு அரை ஏக்கர் என்றாலும் அரிவி அரிவாளினால் நெல்லறுக்கும் பழக்கத்தையும் – வழக்கத்தையும் சிலர் தொடர்கிறார்கள். அரிவாளுக்குப் பல்லுப் பார்க்கிற ஆட்களும் இருக்கிறார்கள். இதெல்லாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்? என்று நீங்கள் கேட்கலாம்.

இதை அறிந்து, அனுபவித்தவர்களால் இதையெல்லாம் எளிதில் விட்டு விட முடியாது. அவர்கள் இருக்கும் வரையில் இது தொடரும். பிறகு இதுகளெல்லாம் காட்சிப் பொருளாகி விடும். இது உங்களுக்கும் தெரியும்.

வளர்ச்சி என்பதற்கும் பாரம்பரியம் என்பதற்கும் இடையில் இநத மாதிரி இழுபறிகளும் போட்டிகளும் நடந்தே தீரும். என்றபடியால்தானே இதை உணர்ந்து, “பழியன கழிதலும் புதிய புகுதலும் வழுவல” என்றால் தொல்காப்பியர்.

வன்னியின் பருவகாலங்களில் கோடையும் அழகுதான். மாரியில் சேறும் சகதியுமாக இருந்த கிறவல் வீதிகளில் கோடையில் சோளகம் பேயாய் அலையும். அது போகும் வழியெல்லாம் புழுதி பறக்கும். அன்று வன்னிச் சனங்களைப் பார்க்க வேணும். காய்ந்து வரண்டு….கறுத்து.. வத்தலாகி…

வன்னியின் இறைச்சி வத்தல் எப்படிச் சுவையாக இருக்குமோ அதைப்போல வன்னியின் வரட்சியும் வத்தல் மனிதர்களும் கூடச் சுவையாகவே இருப்பதுண்டு. அந்த வரட்சியும் வத்தலும் ஒரு உறுதியை, ஓர்மத்தை அவர்களுக்குக் கொடுக்கிறது. வன்னி நிலத்துக்கும் அதுதான் வளம்.

இல்லையென்றால் எப்படி அதை அடங்காப்பற்று என்று அழைத்தார்கள்?

அடங்காப்பற்றில் இப்பொழுது சனங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள். மாடு வளர்த்தாலும் மலிவு விலையில்தான் பாலைக் கொடுக்க வேணும். முன்பைப்போல எருவை ஏற்றுப் போவதற்கு யாழ்ப்பாணத்து லொறிகள் வாறதில்லை. எருப்போட்டு விவசாயம் செய்வதை விட இரசாயன உரத்தைப்போட்டுப் பயிர் செய்தால் லாபமும் கூட. வேலையும் சுலபம் என்று எண்ணுகிறார்கள் பலரும். முன்பைப்போல குழையைத் தாழ்ப்பதற்கோ இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதோ குறைவு. இந்தச் சீரில், எப்படி மாட்டெருவைப் பற்றிப் பேசலாம். அப்படித்தான் யாராவது வந்து எருவை ஏற்ற முற்பட்டாலும் அவர்கள் அதற்குச் சூடைக்கருவாட்டின் விலையைத்தான் கேட்பார்கள்.

இதெல்லாம் பருவ காலத்தையும் விட மோசமானவை. ஆனாலும் என்ன? பருவ காலங்களில்லாமல் நமக்கென்றொரு வாழ்க்கை இல்லை. சடங்குகளோ கொண்டாட்டங்களோ இல்லை. அப்படியென்றால் பருவ காலங்கள்? அது நம்முடையவை. நமக்கானவை.

ஒரு பருவத்தில் பாலை பழுக்கும். இன்னொன்றில் வீரை. இன்னொன்றில் பனிக்கை. இன்றில் சுரவுன்னை. இன்னொன்றில் நாவல். இன்னொன்றில் குழா. இன்னொன்றில் கரம்பை. இன்னொன்றில் துவரை. இன்னொன்றில் அணிஞ்சில். இன்னொன்றில் முரலி. இன்னொன்றில் பனிக்கை. இன்னொன்றில் விளாத்தி. இன்னொன்றில் ஈஞ்சு…

பருவ காலங்கள் உண்மையில் அழகுதான். பழங்களாலும் இனிது.

00

Share:

Author: theneeweb