இரண்டாவது முறையாகவும் கையளிக்கப்பட்ட நோயாளர் காவு வண்டிகள்

வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியாலைகளில் கடந்த மூன்று மாதங்களில் 18 நோயாளர் காவு வண்டிகள் மத்திய அரசினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது.

இந் நோயாளர் காவு வண்டிகள் கடந்த மூன்று மாதங்களாக அந்தந்த வைத்தியசாலைகளில் சேவையிலும் ஈடுப்பட்டு வந்தன.  கிளிநொச்சி முல்லைத்தீ மன்னார் மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் வவுனியா வைத்தியசாலைகளுக்கும், மற்றும்  தேவை கருதி நாட்டின் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் நோயாளர்களை இடமாற்றும் சேவைகளில் இவை ஈடுப்பட்டிருந்தன.

இதனால் குறித்த நோயாளர் காவு வண்டிகள் சுமார் பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் வரை ஒடியிருக்கிறன. ஆகவே இன்றைய(13) தினம் இரண்டாவது தடவையாக கையளிக்கப்படும் போது ஆயிரம் தொடக்கம் நான்காயிரம்  ஐயாயிரம் கிலோ மீற்றர்கள் வரை சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில் இவை காணப்பட்டுள்ளன.

பெரியளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை வளாகத்தில் வைத்து வடமாகாண ஆளுனர், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரால் இந் நோயாளர் காவு வண்டிகள் மீளவும் கையளிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே அந்தந்த வைத்தியசாலைகளில் கடந்த மூன்று மாதங்களாக சேவையில் இருந்த நோயாளர் காவு வண்டிகள் நோயாளர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கடமை நிலையங்களிலிருந்து கைதடிக்குக் கொண்டு செல்லப்பட்டு இன்றைய தினம் இரண்டாவது தடவையாக கையளிக்கப்பட்ட நிகழ்வானது  பல்வேறு மட்டங்களில் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நோயாளர் காவுவண்டிகள் கடந்த வருடம் ஐப்பசி மாதத்திலிருந்து மத்திய சுகாதார அமைச்சினால் பகுதி பகுதியாக வழங்கப்பட்ட போட் மற்றும் பென்ஸ் ரக அதிநவீன நோயாளர் காவு வண்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு வினவிய போது

மத்திய சுகாதார அமைச்சர் இவ் வண்டிகளை மாகாண மட்டத்தில் சிறு விழா ஒன்றினை நிகழ்த்திக் கையளிக்கும்படி கேட்டுக்கொண்டதாலேயே இன்றைய நிகழ்வு நடாத்தப்பட்டது எனக் குறிப்பிட்டார். எனினும் வடமாகாணம் தவிர பிற மாகாணங்களில் இவ்வாறான மீள் கையளிப்பு வைபவங்கள் நடாத்தப்பட்டதாகத் எந்த தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றுமு் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

Share:

Author: theneeweb