வெனிசூலாவை மிரட்டுவதா? அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை

வெனிசூலாவுக்கு ராணுவத்தை அனுப்புவோம் என்று அமெரிக்கா மிரட்டல் விடுப்பதும், அந்நாட்டு உள்விவகாரத்தில் தலையிடுவதும் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது. இதனை அமெரிக்கா தொடர்ந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுள்ள வெனிசூலாவில் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கும், இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோவுக்கும் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் குவாய்டோவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், ஆர்ஜெண்டீனா,  பெரு, சிலி உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் ரஷியா, சீனா, துருக்கி, கியூபா உள்ளிட்ட நாடுகள் அதிபர் மடூரோவுக்கு ஆதரவளித்து வருகின்றன.

இந்நிலையில், தேவை ஏற்பட்டால் வெனிசூலாவுக்கு அமெரிக்க ராணுவம் அனுப்பி வைக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார். இது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு ரஷியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ கூறியதாவது:
வெனிசூலாவின் உள்நாட்டுப் பிரச்னையில் வெளிநாடுகள் தலையிடுவது தவறானது. அதிலும் ராணுவத்தை அனுப்புவோம் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. அமெரிக்காவின் செயல்பாடுகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக உள்ளன. வெனிசூலா விஷயத்தில் அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஐ.நா.வின் விதிகளுக்கு உள்பட்டு வெனிசூலா விவகாரம் குறித்து பேச்சு நடத்த ரஷியா தயாராக இருக்கிறது என்றார்.

Share:

Author: theneeweb