நாங்கள் எங்கள் தீவைக் கடற்படையினரிடம் இருந்து திரும்பக் கைப்பற்றினோம்

கடந்த வருடம் 40 மீன்பிடிப் படகுகளைக் கொண்ட தொடரணி ஒன்று கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து தங்களது தீவை திரும்பக் கைப்பற்றும் முயற்சிக்காக ஸ்ரீலங்காவின் வட பகுதியில் இருந்து பயணிப்பதற்காக அமைக்கப்பட்டது. அவர்கள் இரத்தம் சிந்தாமல் இதை எப்படிச் செய்தார்கள் என்கிற அசாதாரணமான கதையை, பிபிசி யின் ஆயேஷா பெரேரா விளக்குகிறார்.

ஏப்ரல் 23ல், இரணமட நகர் எனும் கிராமத்தின் அருகே இருந்த ஸ்ரீலங்காவின் வடபகுதி பிரதான நிலப்பரப்பின் கடற்கரை அருகே நின்றிருந்த ஒரு சாதாரண பார்வையாளர் கவனத்தை ஒரு அசாரணமான காட்சி ஈர்த்தது. கத்தோலிக்க பாதிரிகள், பெண்கள், மீனவர்கள், உள்ளுர் ஊடகவியலாளர்கள் மற்றும் குடியுரிமைச் செயற்பாட்டாளர் ஆகியோர் வெள்ளைக்கொடிகள்; பறக்க விடப்பட்டிருந்த டசின் கணக்கான மோட்டார் படகுகளில் நெருக்கியடித்துக் கொண்டு இரணைதீவு எனும் தீவினை நோக்கிப் பயணம் செய்யத் தீர்மானித்திருந்ததே அந்தக் காட்சி.

அவர்களது நோக்கம்: 25 வருடங்களாக ஸ்ரீலங்கா கடற்படையினரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த பல தலைமுறைகளாக அவர்களது வீடாக இருந்த தீவை திரும்பப் பெறுவதுதான்.

அது மிகவும் மகிழ்ச்சியான ஒரு சுவர்க்கம்.

இந்திர நீல நிறமான கடல்நீர், மீன்கள் நீந்துவதை கண்களால் காணுமளவுக்கு மிகவும் தெளிவாக இருந்தது, தென்னை மர ஓலைகள் அசைந்தாடும் பாழ்படுத்தப்படாத தங்கக் கடற்கரையில் நட்சத்திர மீன்கள் வரிசையிட்டிருந்தன, ஒரு அரை கிலோமீற்றர் தூரம் கடலுக்குள் நடந்து சென்றாலும் கடல்நீர் உங்கள் முழங்கால் வரையே இருக்கும் அளவிற்கு ஆழமற்றதாகவும் அமைதியாகவும் காணப்பட்டது… அந்த அழகு கிட்டத்தட்ட யதார்த்தமற்ற ஒன்றாகவே தோன்றியது.

இரணைதீவு மக்கள் சொல்வது, அவர்கள் 1992ல் கடற்படையினரால் இடப்பெயர்வுக்கு ஆளானதாக, அரசாங்கப் படைகளுக்கும் மற்றும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்(எல்.ரீ.ரீ.ஈ) இடையேயான உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் கடற்படையினர் அங்கு ஒரு தளத்தைக் கட்டியெழுப்பினார்கள். இந்த மக்கள் மட்டுமல்ல வடக்கு ஸ்ரீலங்காவில் இருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் யுத்தத்தின் போது இராணுவம் தங்கள் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

தமிழர்களான இந்தக் கிராமத்தவர்கள் சொல்வது, தாங்கள் வலுக்கட்டாயமாக பிரதான நிலப்பரப்பில், யாழ்ப்பாண நகருக்கும் மன்னாருக்கும் இடையில் உள்ள இரணமட்ட நகரில் குடியமர்த்தப்பட்டதாக. அதுமுதல் தாங்கள் தீவுக்கு திரும்பி வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இராணுவம் இதை மறுக்கிறது.

அந்தப் படகுகளில் இருந்த பலரும் பெண்களாகும். ஆயுதம் தாங்கிய கடற்படை அதிகாரிகளுடன் மோதும் சாத்தியத்தை எண்ணும்போது தங்களுக்கு பயம் தோன்றுவதாகவும், ஆனால் என்னவந்தாலும் அதைச் செய்வது என்று முடிவெடுத்திருப்பதாக அந்தப் பெண்கள் பிபிசி யிடம் தெரிவித்தார்கள்.

“நாங்கள் பெரிதும் எதிர்பார்த்தது, கடற்படை கப்பலகளுக்கும் எங்களது சிறிய படகுகளுக்கும் இடையில் எங்கள் பயணத்தை தடுக்கும் ஒரு காட்சி இடம்பெறும் என்று, அது எங்கள் சமூகத்தின் போராட்டத்தின் விழிப்புணர்வைத் தூண்டுவதற்கு உதவியாக இருக்கும் என்று” அன்று சமூகமளித்திருந்த பாதிரிகளில் ஒருவரான பிதா.ஜெயபாலன் இவ்வாறு தெரிவித்தார்.

ஆனால் அவர்கள் ஆச்சரியப்படும்வகையில் அப்படியான ஒரு நிலைப்பாட்டை அங்கு காணமுடியவில்லை.

வழக்கமாக தீவில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு ரோந்துப் படகு ஆழ்கடலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது, மற்றும் வேறெந்த கடற்படைக் கப்பல்களையும் கண்ணால் காண முடியவில்லை. கிராமவாசிகளால் தங்கள் படகுகளை தீவின் கரையில் நிறுத்திவிட்டு கடற்கரையோரமாக நடக்க இயலுமாக இருந்தது.

நாங்கள் கண்ணீர்விட்டுக் கதறினோம், கடற்கரையை நாங்கள் முத்தமிட்டோம். நாங்கள் மீண்டும் எங்கள் வீட்டுக்குத் திரும்பிவிட்டோம், இனி ஒருபோதும் இதைவிட்டுப் போகமாட்டோம்” என்றார் உள்ளுர் சமூகத் தலைவரான ஸாமின் பொணிவாஸ்.

பாழடைந்து கிடந்த தேவாலயத்தில் பிரார்த்தனையை ஒப்புக் கொடுப்பதற்காக அந்தக் குழுவினர் அதை நோக்கி நடந்தார்கள். அப்போதுதான் தீவில் நிலைகொண்டிருந்த கடற்படை அதிகாரிகளில் சிலர் அவர்களை அணுகினார்கள். அப்போது மக்கள் தாங்கள் திரும்பி வந்துவிட்டதாகவும் அங்கே தங்கப்போவதாகவும் அந்த அதிகாரிகளிடம் தெரிவித்தனர். உள்ளுர் பாடசாலை ஆசிரியர், அவர்களது காணி உறுதிகள் கவனமாகச் சேகரித்து வைக்கப்பட்டிருந் ஒரு கோப்பினை அவர்களிடம் காண்பித்தார்.

சில வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு காணி உறுதி உள்ளவர்களை அன்றைய இரவு அங்கு தங்குவதற்கு அனுமதி அளித்ததாகவம், அதேவேளை மற்றவர்கள் அன்று மாலையே அங்கிருந்து வெளியேறியதாகவும் பிதா.ஜெயபாலன் தெரிவித்தார். அந்தக்குழுவினர் அன்றைய பொழுதை கடற்கரையில் சுற்றித் திரிந்தும், ஒரு காலத்தில் அவர்கள் வீடுகள் இருந்த வளவின் முன் நின்றும் மற்றும் மரங்களில் இருந்து தேங்காய்களையும் மற்றும் வேறு பழங்களையும் பறித்தும் பொழுதைப் போக்கினார்கள்.

வேறு சிலர் தீவைச் சுற்றியுள்ள ஆழமற்ற கடல் நீருக்குள் துணிந்து இறங்கினார்கள், அவர்களால் மீன்களையும் சீனா மற்றும் வேறு இடங்களில் அதிகம் பெறுமதிமிக்கதாக உள்ள கடல் தாவரமான கடல் வெள்ளரியையும் இலகுவில் காணமுடிந்தது.

சில கிராமத்தவர்கள் தங்களால் கட்டாயமாக கைவிட்டுச் செல்ல நேர்ந்த தங்களது ஆடுமாடுகளை இனங்கண்டு அவற்றை திரும்பவும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார்கள். அந்த கால்நடைகள் இப்போது கட்டாக்காலிகளாகத் திரிந்து வெறிகொண்டு விட்டதால் அவர்களின் முந்தைய உரிமையாளர்களுக்கு அவை கீழ்படியவில்லை, அவற்றைத் திரும்பவும் உரிமைகோரும் முயற்சி பயனற்றதாகியது.

ஒரு மாதத்தின் பின்னர் அரசாங்க அதிகாரிகள் இரணைதீவுக்கு விஜயம் செய்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மொத்தக் குடும்பமாகிய 400 குடும்பங்களையும் – காணி உரிமைப் பத்திரம் இல்லாதவர்களையும்கூட – அங்கு குடியிருக்க அனுமதி வழங்க முடிவு செய்தார்கள். அது சற்றும் எதிர்பாராத மகிழ்ச்சியான வெற்றியாகும், ஆனால் இந்த விடயம்பற்றி ஒரு சில உள்ளுர் ஊடகங்களில் கட்டுரைகள் வெளியானதைத் தவிர பெருமளவு கவனிக்கப்படாமலே போயிற்று.

அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தங்கள் காணிகள் தங்களுக்கு திரும்பக் கிடைத்ததை நம்பவே முடியவில்லை மற்றும் கடற்படை முதலில் தங்களை அங்கு இறங்குவதற்கும் பின்னர் தொடர்ந்து தங்குவதற்கும் ஏன் அனுமதித்தது என்பதை இன்னமும் அவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

ஸ்ரீலங்கா கடற்படை வலியுறுத்துவது, தாங்கள் இரணதீவில் கடற்படைத் தளத்தை நிறுவிய பின்னர் இரணதீவு மக்கள் அங்கு குடியிருப்பதை தாங்கள் ஒருபோதும் ஆட்சேபிக்கவில்லை என்பதை. மக்கள் தாங்களாகவே அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்திருந்தார்கள் “ஏனென்றால் எல்.ரீ.ரீ.ஈ உடனான பிரச்சினைகள் மோசமான வாழ்க்கை நிலமைகள் அதற்கு காரணமாக இருந்தன” என்று பிபிசிக்குத் தெரிவித்தார் கடற்படைப் பேச்சாளரான லெப்.கமான்டர் இசுறு சூரியபண்டார.

ஆனால் சமுதாயத் தலைவர்கள் அது பொய் என்று கூறினார்கள்.
எண்ணற்ற விண்ணப்பங்கள் மற்றும் முறைப்பாடுகள் பல்வேறு அரச அதிகாரிகளிடம் கையளித்தபோதும் மற்றும் கடற்கரையில் ஒருவருடமாக அமைதியான போராட்டம் நடத்திய பின்னரும் ;அதற்கு மாறாக தங்களது தீவில் தாங்கள் வாழவதற்கு அனுமதிக்கவில்லை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிபிசி பார்வையிட்ட ஆவணங்களில், முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் ஸ்ரீலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தலைவரான போல் கொட்பிறே உட்பட பல்வேறு அதிகாரிகள் மத்திய அரசாங்கத்துக்கு எழுதியுள்ள கடிதங்களில் இரணைதீவு மக்கள் இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளார்கள் அவர்களை அவர்களது சொந்த தீவுக்குத் திரும்பிச்செல்ல அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்ட விடயம் காணப்பட்டது.

இரணைதீவு மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி 10 மாதங்களாகிவிட்டன, மற்றும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை திரும்பவும் பழையநிலைக்கு கொண்டுவர எவ்வளவு முயற்சி செய்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் அவர்களது வீடுகளாக இருந்து, தற்போது எஞ்சியுள்ள குண்டுகள் துளைத்த கான்கிரீட் சுவர்களுக்குப் பக்கத்தில் தற்காலிகமாக ஓலைக் குடிசைகளை அமைத்துக்கொண்டு வாழ்கிறார்கள். கிழிந்து ஒழுங்கற்ற மீன்வலைகள் உலர்வதற்காக வெளியே தொங்கவிடப்பட்டுள்ளன, மற்றும் மக்கள் திறந்தவெளியில் விறகடுப்பில் அடிப்படைக்கருவிகளை வைத்துக்கொண்டு சமைக்கிறார்கள்.

நவீனத்துவத்தின் ஒரே சாதனமாகத் திகழ்வது மொபைல் போன்கள் மட்டுமே, அவை நன்கொடையாளர்கள் வழங்கிய சூரிய ஒளியின் சக்தி மூலம் சார்ஜ் செய்யக்கூடிய பற்றரிகளால் இயங்குகிறது. ஆனால் அபிவிருத்தியின் அடையாளங்களும் கூட அங்கு தென்படுகின்றன. பழைய கிணறுகளில் சில சுத்தம் செய்யப்பட்டுள்ளன. கனரக இயந்திரங்களால் வெட்டிச் சுத்தமாக்கப்பட்ட சிறிய பாதைகள் தென்படுவதுடன், மக்கள் மீன்பிடியினால் கிடைக்கும் வருமானத்துக்கு மேலதிகமாக வருவாய் தேடுவதற்காக காய்கறிகளைப் பயிரிட ஆரம்பித்துள்ளார்கள். பிபிசி அங்கு வருகை தந்தபோது சின்னத்தீவு என அழைக்கப்படும் சிறிய தீவில் உள்ள தேவாலயத்தை பழுதுபார்ப்பதில் முமு;முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

கிராமத்தவர்களில் பலர் தீவுக்கு திரும்புவதற்கு முன்னர் தங்கியிருந்த இரணமடு நகரில் உள்ள தங்கள் வீடுகளுக்கும் இரணைதீவுக்கும் போவதும் வருவதுமாக இருந்தார்கள. தீவில் உள்ள பாடசாலை சீரழிந்த நிலையில் காணப்படுவதால் சிறுவர்கள் அங்கு பாடசாலைக்கு செல்ல முடியாதுள்ளது.

திரும்பி வந்ததில் இருந்து கிராமத்தவர்கள் சொல்வது சிரமங்கள் இருந்தாலும் தங்கள் வாழ்வு நன்றாக இருப்பதாகவே.

மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவுள்ள டொராஸ் பிரதீபன், தீவுக்கு அருகில் மிகவும் சிறப்பான மீன்பிடி இருப்பதாகத் தெரிவிக்கிறார். இப்போது அவர்கள் தங்கள் படகுகளை அங்கேயே நிறுத்த முடியும், இதனால் அவர்கள் இப்போது செலவிடும் எரிபொருளும் குறைவானது.

மற்றொரு பெண்மணியான பாக்கியம் காணிக்கை தெரிவிப்பது, இரணதீவுக்கு திரும்பி வந்ததின் பின்னர் வெறும் இரண்டு மாதங்களுக்குள் தன்னால் 70,000 ருபா (380 டொலர் அல்லது 300 பவுண்) சம்பாதிக்க முடிந்தது என்று, தீவினைச் சுற்றியுள்ள ஏராளமான மீன்கள் ,நண்டுகள் மற்றும் கடல் வெள்ளரிகளுக்குத்தான் இதற்காக நன்றி சொல்ல வேண்டும்.
கிராமவாசிகள் கடற்படையினருக்கு அருகே பக்கத்துக்கு பக்கமாகவே வாழ்கிறார்கள், கடற்படைத் தளத்தை தேசிய நலன் கருதி அங்கு வைத்திருக்க வேண்டியது அவசியம் என கடற்படையினர் தெரிவிக்கிறார்கள். இது மூலோபாயம் வாய்ந்த ஒரு இடம், கடத்தல்காரர்களையும் மற்றும் சட்ட விரோதமாக ஸ்ரீலங்காவின் கடல் எல்லையை கடக்கும் இந்திய மீனவர்களையும் இலக்கு வைப்பதற்கு இரணைதீவு முக்கியமான இடம் என்று கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

ஆனால் இருபிரிவினரும் இப்போது அமைதியாக சவாழ்வை மேற்கொண்டு வருகிறார்கள் தீவில் மக்கள் மீள்குடியேறுவதற்கு இராணுவம் தீவிரமாக உதவி செய்து வருகிறது. பெரியதீவு எனப்படும் இடத்தில் அமைந்துள்ள தேவாலயத்தைக் கடற்படை மீளக்கட்டிக் கொடுத்துள்ளது, கிராமவாசிகளுக்கு சுத்தமான குடிநீர் விநியோகத்தையும் வழங்கியுள்ளதுடன் பாதைகள் அடங்கிய உள்கட்டமைப்பு வசதிகளையும் அமைத்து வருகிறது.

உள்ளுர்வாசிகள் பிபிசி யிடம் கடற்படையினர் தங்களுக்கு இயந்திரங்களையும் மற்றும் உதிரிப்பாகங்களையும் கூட வழங்கியுள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால் இரணைதீவு மக்கள் தங்கள் பிரச்சினைகளை ஒருவகை மகிழ்ச்சியுடன் முடிவுக்கு கொண்டுவர முடிந்த போதிலும் அவர்களது நிலங்களைத் திரும்பப் பெறுவதற்கு அவர்கள் நடத்திய போராட்டம் மனச்சோர்வு உடையதாக இருந்தது என்பது மிகவும் பிரசித்தம்.

மே 2009ல் தமிழ் புலிகளைத் தோற்கடித்ததுடன் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இராணுவம் முந்தைய மோதல் பிரதேசங்களில் இன்னமும் 4,241 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து தன்வசம் வைத்துள்ளது என சமரசத்துக்கான ஒருங்கிணைந்த பொறிமுறையின் ஸ்ரீலங்கா செயலகம் தெரிவிக்கிறது. பாதுகாப்பு தொடர்பான கவலைகள் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் ஆகிய இரண்டுமே தாங்கள் வெளியேறத் தயங்குவதற்கான காரணங்கள் என இராணுவம் சுட்டிக் காட்டியுள்ளது.

வட மாகாண மாவட்டமான முல்லைத்தீவில் உள்ள ஒரு இராணுவ முகாமுக்கு முன்னால் தங்கள் காணிகளை மீட்பதற்காக, 700 நாட்கள் தொடர்ந்து நடக்கும் போராட்டம் உட்பட ஏராளமான பொதுமக்கள் போராட்டங்கள் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே இரணைதீவு கிராமத்தவர்களின் துணிச்சலான செயற்பாட்டுக்கு கிடைத்த வெற்றி, இராணுவ நடவடிக்கை காரணமாக இடப்பெயர்வுக்கு ஆளான ஏனைய சமூகத்தவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது.

மனித உரிமைகள் ஆர்வலரான றுக்கி பெர்ணாண்டோ, இந்தவகை நடவடிக்கைகள், அது நடக்கும் சந்தர்ப்பம் மற்றும் அதில் ஈடுபடும் மக்களின் வகை என்பனவற்றிலேயே தங்கியுள்ளது என எச்சரிக்கை விடுத்தார்.

“அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் என்பன நீதியை வழங்கவில்லை என்றால்,மற்றும் குறிப்பாக புகார்கள், வேண்டுகோள்கள், பேச்சுவார்த்தைகள் அல்லது ஆர்ப்பாட்டங்களுக்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என்றால், சமுகங்கள் அவர்களுக்கு உரிமை உள்ளவற்றைக் கோருவதற்கு இரணைதீவு சமூகத்தவர்கள் செய்ததைப்போல வன்முறையற்ற நேரடிச் செயற்பாட்டில் இறங்குவதைக் கவனத்தில் கொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது” எனறு றுக்கி; தெரிவித்தார்.

அந்த தீவில், உண்மையான வேலைகள் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது. இந்தத் தீவினை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு கணிசமானளவு அரசாங்க உதவிகள் தேவையாக உள்ளன என உள்ளுர்வாசிகள் சொல்கிறார்கள். இரணமட்ட நகர் மற்றும் இரணைதீவுக்கு இடையில் மக்களையும் மற்றும் பொருட்களையும் கொண்டு செல்வதற்கு வசதியாக ஒரு பயணப் படகுச் சேவையை வழங்குவதாக வாக்குறுதியளிக்கப் பட்டுளது, ஆனால் அவர்களுக்கு இன்னமும் தங்கள் வீடுகள், உள்ளுர் பாடசாலை மற்றும் தீவைச் சுற்றியுள்ள வீதிகள் என்பனவற்றைத் திருத்தியமைக்க வேண்டிய தேவை உள்ளது. அந்தத் தீவின் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை ஒருநாள் அந்தத் தீவில்தான் அமையும் எனக் கனவு காண்கிறார்கள்.

“ ஆம், நாங்கள் அங்கு திரும்பிச் செல்வோம். இது எங்கள் மூதாதையரின் வீடு, ஒவ்வொரு ஒற்றை மனிதனது கனவும் தங்கள் உடல் அங்கே புதைக்கப்பட வேண்டும் என்பதுதான்” என்று திரு.பொணிவாஸ் தெரிவித்தார்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share:

Author: theneeweb