மீட்பர்களில்லாத கிளிநொச்சி

–          கருணாகரன்—-

கிளிநொச்சி – கரடிப்போக்குச் சந்தியில் கரைச்சிப் பிரதேச சபைக்குச் சொந்தமான நிலத்தில் அவசர அவசரமாக கட்டிட நிர்மாணம் நடக்கிறது. என்ன இவ்வளவு அவசரமாக அங்கே – அதுவும் நகரத்தின் மையப்பகுதியில் – இப்படியொரு திட்டமிடப்படாத கட்டிட நிர்மாணம் என்று விசாரித்தால், அதிர்ச்சியான சேதிகளே பதிலாகக் கிடைத்தன.

அந்த நிலம் ஐந்து பேருக்குக் கடைகளை அமைப்பதற்காக வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை வாடகைக்குப் பெற்ற தனி நபர்கள்  அங்கே கடைகளைக் கட்டுகிறார்கள். இந்த அவசர நடவடிக்கை தொடர்பாக கடந்த வாரம் பெரிய சர்ச்சை ஒன்றும் சபையில் நடந்திருக்கிறது. மட்டுமல்ல, “இது தவறான ஒரு நடவடிக்கை. தவசாளர் வேழமாலிகிதன் தன்னுடைய இஸ்டப்படி அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயற்படுகிறார். இப்படி அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறான காரியங்களைச் செய்கின்றவர்கள் எப்படி மற்றவர்களின் அதிகார எல்லைகளைப் பற்றி விமர்சிக்கத் தகுதியானவர்கள். பிரதேச சபையின் பெறுமதியான காணியை சீரழிக்க வேண்டாம். பொதுச் சொத்தா இது தனிச் சொத்தா?” என்று பொதுமக்கள் ஒரு எதிர்ப்புப் போராட்டத்தையும் கடந்த 11.02.2019 அன்று கிளிநொச்சியில் நடத்தியுள்ளனர்.

இந்தச் செய்திகள் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கின்றன. அதாவது சபைக்கு வெளியிலும் இந்த விவகாரம் பொது வெளிக் கவனத்திற்குச் சென்றுள்ளது.

ஆயினும் இதுவரையில் இது தொடர்பாக நகர அபிவிருத்திக்குழுவோ (அப்படி ஒரு குழு கிளிநொச்சியில் இப்பொழுது செயற்படுகிறதா என்பது கேள்வியே) காணிப் பயன்பாட்டுக்குழுவோ (இதுவும் கூட அப்படித்தான் உறங்குநிலையில் உள்ளது அல்லது செயலற்றுக் கிடக்கிறது) உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், ஆளுநர் எவரும் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.

குறைந்த பட்சம் இந்தத் தவறான நடைமுறையைக் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் போன்றோரும் அக்கறை கொண்டதாக இல்லை.

இது பற்றிய கேள்வியை பிரதேச சபையின் தவிசாளரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, “பாதிக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில்தான் இந்தக் கடைகளுக்கான நிலம் வழங்கப்பட்டது” என்று அவர் சிம்பிளாகப் பதிலளித்திருக்கிறார்.

இந்தப் பதில் சிரிப்பையே தருகிறது.

ஏனென்றால் கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்டவர்களே கூடுதலாக இருக்கிறார்கள். அவர்கள் அத்தனைபேருக்கும் இந்த மாதிரி உதவிகளையும் நலத்திட்டங்களையும் பிரதேச சபை அளிக்குமா? அதற்கான சாத்தியங்கள் சபையிடம் உண்டா?

ஆகவே இது சிறுபிள்ளைத்தனமான வியாக்கியானமே தவிர, முறையான பதிலல்ல. தமது ஆதரவாளர்களுக்குக் கடைகளைக் கட்டுவதற்கான நிலத்தை வழங்கி, அதற்கு அனுமதி அளித்து விட்டு, விடயம் நெருக்கடிக்குள்ளானபோது இந்த மாதிரிச் சாட்டுப்போக்குச் சொல்லித்தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதே இந்தப் பதிலாகும்.

சனங்கள் சொல்வதைப்போல உண்மையில் இது தவறான ஒரு நடவடிக்கையே. மட்டுமல்ல, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாததும் கூட.

ஏனென்றால், கிளிநொச்சி நகரமானது வளர்ச்சியடைந்து கொண்டு வரும் ஒரு புதிய மையமாகும். அப்படி வளர்ச்சியடைந்து வரும் ஒரு நகரை உரிய முறையில் திட்டமிட வேண்டும். அதுவும் போரினால் அழிவடைந்த நகரம் என்ற வகையில் அதை மீளக் கட்டியெழுப்பும்போது அனைத்துத் தரப்பினரும் கூடி அந்த நகரைப் பற்றித் திட்டமிட்டிருக்க வேண்டும். இந்தத் தவறினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான முருகேசு சந்திரகுமார், முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவனந்தா, பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான சிவஞானம் சிறிதரன், முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உள்ளிட்ட வடக்கு மாகாணசபை மற்றும் நகர திட்டமிடல் அபிவிருத்தி சார்ந்த தரப்பினர் அனைவரும் இழைத்துள்ளனர். இதையிட்ட கவலைகளை கிளிநொச்சியின் அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் விரும்புவோரும் குறித்த பிரதேசத்தில் வாழ்வோரும் கூடக் கொண்டிருக்கவில்லை என்பது மிகக் கவலையானது.

இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை. இந்தக் கட்டத்திலாவது கிளிநொச்சி நகர அபிவிருத்தியைப் பற்றிய அக்கறைகளைக் கொள்ளலாம். அப்படிக் கொள்ள வேண்டியது அவசியம்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கிளிநொச்சி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. இதற்குப் பிரதான காரணம், கிளிநொச்சியின் அபிவிருத்தியில் உள்ள குறைபாடுகளேயாகும். குறிப்பாக நீரோடும் பகுதிகள் இந்த மாதிரிக் கவனமற்ற போக்கினால் அத்துமீறிய குடியேற்றத்துக்குள்ளாகி நீரோட்டம் தடைப்பட்டமை. இதற்கு தவறான நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக இருந்தமை. இதற்கு முறையான திட்டமிடலின்மை காரணமாகியமை. இப்படியே தவறுகளின் விளைவே அந்தப் பெரிய அனர்த்தம். இப்பொழுது நடந்து கொண்டிருப்பதும் இதுதான். தவறான முறைகளில் அவ்வப்போது எடுக்கின்ற தீர்மானங்களும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளும் ஒட்டுமொத்த நகர வளர்ச்சியிலும் நகர் வாழ் மக்களின் வாழ்விலும் நெருக்கடிகளை ஏற்படுத்துவனவாக உள்ளன.

இதையிட்டுக் குரல் எழுப்பக்கூடியவர்கள் கிளிநொச்சியில் இல்லை என்பது துயரமானது. இந்த நிலை நீடிக்குமானால் எதிர்காலக் கிளிநொச்சி என்பது வளர்ச்சியற்ற – தற்போதைய யாழ்ப்பாணத்தைப்போலவே இருக்கப்போகிறது.

ற்போதைய யாழ்ப்பாணம் என்பது நாற்பது ஆண்டுகளாக அப்படியே உறைந்திருக்கின்ற ஒன்று. ஆனால் உலகில் எல்லா நகர்களும் ஊர்களும் வளர்ச்சியடைந்து கொண்டு போகின்றன. யாழ்ப்பாணமோ இதற்கு மேல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில் அப்படியே உறைந்திருக்கிறது. இதற்குக் காரணம், ஏற்கனவே திட்டமிடலில் நிகழ்ந்த குறைபாடுகளே. அங்கு திட்டமிடற்குறைபாடுகள் மட்டுமல்ல திட்டமிடலே நிகழவில்லை. அப்படி ஒன்று நடந்திருந்தால், அது எப்போது நடந்தது? அதில் பங்கேற்றவர்கள் யார் என்று யாரும் தெரியப்படுத்தலாம்.

ஆகவே இந்தத்திட்டமிடற் குறைபாட்டினால் எழுந்தமானமாக ஒவ்வொன்றையும் அவ்வப்போது கட்டியெழுப்பியதன் விளைவுகள் இன்று நகரை விரிவாக்க, விஸ்தீரணமாக்க முடியாமல் நெருக்குகின்றன.

இதுதான் இப்பொழுது கிளிநொச்சியிலும் நடந்து கொண்டிருக்கிறது. முழு மொத்த நகர அபிவிருத்தியைப் பற்றிய பிரக்ஞை இல்லாத நிலையில் எழுந்தமானமாக நிர்மாணப்பணிகள் நடக்கின்றன. குடியிருப்புகள் உருவாகின்றன. உருவாக்கப்படுகின்றன.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கரைச்சிப் பிரதேச சபையின் இந்தக் கடைத்தொகுதி அமைக்கும்  இடமானது கிளிநொச்சி நகரின் மையத்தில் அமைந்துள்ளது. கண்டி – யாழ்ப்பாணம் (ஏ9) நெடுஞ்சாலையின் ஓரத்தில் கரடிப்போக்குச் சந்தி என்ற இடத்தில் இது நடக்கிறது. உண்மையில் இந்த இடம் மிகப் பெறுமதியானது. இதைச் சரியாக பிரதேச சபை புரிந்து கொண்டு செயற்பட்டிருக்குமாக இருந்தால் இங்கே நகர அபிவிருத்திச் சபையிடம் ஒரு முழுமையான திட்டத்தைப் பெற்று அதன் அடிப்படையில் பிரதேச சபையே இங்கே கட்டிடத்தொகுதியை நிர்மாணித்திருக்க வேண்டும். அந்தக் கட்டிடத்தொகுதியை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குப் பிரதேச சபையிடம் நிதி இல்லை என்றால் அதைக் கட்டம் கட்டமாக நிர்மாணிக்க முயற்சித்திருக்கலாம். இதற்கான நிதி இல்லை என்றால், அந்த நிதி மூலங்களைக் கண்டறிவதற்குப் பிரதேச சபை முயன்றிருக்க வேணும். அப்படிச் செய்வதே சபையின் பணியாகும்.

ஆனால் சபை இதைச் செய்யவில்லை. பதிலாக யாரோ ஐந்து பேருக்கு கடைகளை அமைப்பதற்காக இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தியைப் பற்றிப் புரிந்தவர்கள் இதையிட்டுத் தலையில்தான் கையை வைப்பார்கள். அந்தளவுக்கு அவர்களுக்கு நியாயமான கோபம் வரும்.

இதைப்பற்றி யாரிடம் முறையிடுவது? யார் இதைப்பற்றிப் பேசுவது? யாரிடம் பேசுவது? எதிர்த்தரப்பு பிரதேச சபை உறுப்பினர்களிலும் எத்தனைபேருக்கு இதைப்பற்றிய விளக்கமும் அக்கறைகளும் உள்ளன? அப்படி இந்த விடயத்தை முன்னெடுக்கின்ற உறுப்பினர்களுக்கு ஏனைய எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் ஆதவளித்தால் சபையையே முடக்கலாம். இந்தப் பாரிய குறைபாட்டை நிவர்த்திக்கலாம். இதை எப்படிச் சாத்தியப்படுத்துவது? என்ற கேள்விகள் பல உள்ளன.

கரைச்சிப் பிரதேச சபை

கரைச்சிப் பிரதேச சபையை நகரசபையாக மாற்ற – தரமுயர்த்த வேணும் என்று சில மாதங்களுக்கு முன்பு இதே சபையில் பிரேரிக்கப்பட்டது. பிரதேச சபையாகக் கூட இயங்குதற்கான தகுதியை – திட்டமிடலை – நடைமுறைகளை – அறிவை – க் கொண்டிருக்காத ஒரு சபையை எப்படி நகர சபையாகத் தரமுயர்த்துவது?

நகரசபையாகத் தரமுயர்த்த வேண்டும். அதை அப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்று மெய்யாகவே விரும்பினால் அதற்கான தகுதி நிலைகளை வளர்க்க வேண்டும்.

இதற்கு குறைந்த பட்சம் பச்சிலைப்பள்ளி – பளை பிரதேச சபையின் கடந்த காலச் செயற்பாடுகளை (நிகழ்காலச் செயற்பாடுகளை அல்ல) ஒரு முன்மாதிரியாக – ஆய்வாகக் கொள்ள வேண்டும்.

அப்போதைய (2014 காலப்பகுதியில்) பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையானது பளை நகரில் ஒரு பேருந்து நிலையம், கடைத்தொகுதி, பொது மண்டபம், விளையாட்டரங்கு போன்றவற்றைச் சிறப்பாக அமைத்திருக்கிறது. ஒரு சிறிய – வருமானமும் சனத்தொகையும் குறைந்த சபையினால் இவ்வளவையும் நேர்த்தியாகச் செய்ய முடிந்திருக்கிறது.

ஆனால், கரைச்சிப் பிரதேச சபையோ கிளிநொச்சி நகரம், பரந்தன் சிறுநகர் மற்றும் தருமபுரம், வட்டக்கச்சி, அக்கராயன் – ஸ்கந்தபுரம், வன்னேரி, இரணைமடு உள்ளிட்ட சிறு பட்டினங்கள், முக்கியமான இடங்களை உள்ளடக்கிய பெரும் பிரதேசமொன்றை ஆளுகைப் பிரதேசமாகக் கொண்டது. கரைச்சி, கண்டாவளை என்ற இரண்டு பெரும் பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கியது. கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிக சனத்தொகையைக் கொண்ட பிரதேச செயலர் பிரிவுகள் இவை இரண்டுமே. ஆகவே வருமானம் கூடிய சபையும் கரைச்சிப் பிரதேச சபையே. இரண்டு பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரே சபை என்பதாலும் நகரத்தை உள்ளடக்கிய சபை என்பதாலும் கரைச்சிப்பிரதேச சபைக்கான வருமானம் அதிகம். வளமும் அதிகம்.

இப்படியான சபை ஒன்றைச் சரியான முறையில் தலைமை தாங்கி நிர்வகித்தால் நகரசபையாகத் தரமுயர்த்துவதுடன் சிறந்த நகர வடிவமைப்பை உருவாக்குவற்கான பங்களிப்பையும் வளங்கலாம்.

போரினால் அழிவடைந்த நகரம் என்ற வகையில் அதை மீளக் கட்டியெழுப்பும்போது அதன் கடந்த காலக் குறைபாடுகளில் இருந்து அவற்றை நிவர்த்தி செய்ய முடியும். அப்படி நிவர்த்தி செய்ய வேணும். அது வசதியானதும் கூட. போரினால் அழிவடைந்த நகரங்களை மீளக்கட்டியெழுப்பும்போது அவற்றின் குறைபாடுகளைக் களைந்தே உலகம் முழுவதும் மீளுருவாக்கப்பணிகளைச் செய்திருக்கிறார்கள்.

இதை நாம் ஒரு பாடமாக – தேவையான கவனமாகக் கொள்வது அவசியம்.

கரைச்சிப் பிரதேச சபை விடுகின்ற தவறுகளைப்போலவே மாவட்டச் செயலகமும் பிரதேச செயலமும் தவறுகளை விட்டுக்கொண்டிருக்கின்றன. நகரில் உள்ள டிப்போச் சந்திக்கு அண்மையில் உள்ள முக்கியமான இன்னொரு மையத்தை அரச உத்தியோகத்தர் விடுதியாக நிர்மாணித்துக்கொண்டிருக்கிறது மாவட்டச் செயலகம். உண்மையில் அது ஒரு மிகச் சிறந்த வணிக வளாகத்துக்குரிய இடம். அதை அரச ஊழியர் குடியிருப்பாளர் மையமாக மாற்றும் மாவட்டச் செயலகத்துக்கும் திட்டமிடலுக்கும் இடையில் என்ன சம்மந்தம், என்ன தகுதி இருக்கிறது? இவ்வாறான மாவட்டச் செயலகத்தினால் எப்படி மாவட்டத்துக்குத் தேவையான – பொருத்தமான திட்டமிடல்களைச் செய்ய முடியும்?

இந்த அரச உத்தியோகத்தர் விடுதியை திருவையாறுப் பகுதியில் அல்லது அது போன்ற இன்னொரு இடத்தில் உருவாக்கியிருக்கலாம்.

திருவையாறில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த 14 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதைப் பிரதேச செயலகம் 2017 இல் தனியார் ஒருவருக்கு வழங்கியது. அங்கே இப்பொழுது மாதிரிச் சிறுவர் இல்லம் ஒன்று சம்பிரதாயபூர்வமாக இயங்குகிறது. உண்மையில் இந்த இடத்தை முன்கூட்டிய திட்டமிடலின் பிரகாரம் அரச உத்தியோகத்தர் விடுதிக்கோ அல்லது இது போன்ற பயனுள்ள முக்கியமான பயன்பாட்டுக்கு ஒதுக்கியிருக்கலாம். அப்படி நடக்கவில்லை. இதெல்லாம் திட்டமிடலின் குறைபாடே. இதைக்குறித்து இந்தப் பத்தியாளர் முன்பும் குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப் பிறகு கூடக் காணிப்பயன்பாட்டுக்குழுவோ நகர அபிவிருத்திக்குழுவோ திட்டமிடற் செயலகமோ அக்கறை கொள்ளவில்லை.

இலங்கையின் மிக இளைய நகரம் மட்டுமல்ல, போரினால் முற்றாகவே அழிந்த நகரம் கிளிநொச்சி. கிளிநொச்சி நகரத்துக்கு ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளே வயதும் வரலாறும். ஆனால், அதற்குள் அது பல தடவை இராணுவ முற்றுகைக்குள்ளும் படையெடுப்புகளுக்குள்ளும் உள்ளாகியது. புலிகள், இலங்கைப் படைகள் என்று மாறி மாறி வெவ்வேறு அதிகாரத்தரப்பின் ஆளுகைக்குள்ளாகியிருக்கிறது. இப்பொழுதுதான் அது யுத்த நெருக்கடியிலிருந்து மீண்டிருக்கிறது. இனியாவது அதை பொறுப்புணர்வோடு கட்டியெழுப்புவதற்கு ஆர்வமுள்ளவர்களும் பொறுப்பானவர்களும் முன்வர வேணும். இல்லையெனில் யுத்த அழிவை விட பேரழிவுகளையும் பெரும் நெருக்கடிகளையும் கிளிநொச்சி சந்தித்தே தீரும். அதாவது தொடரும் துயரில் கிளிநொசசி சிக்கியிருக்கும்.

எங்கே மீட்பர்கள்? யார் அந்த மீட்பர்கள்?

Share:

Author: theneeweb