கட்டுத்துவக்கு, வாள் மற்றும் கசிப்பு வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்

யாழ்.உடுத்துறை பகுதியில் கட்டுத்துவக்கு, வாள் மற்றும் கசிப்பு என்பவற்றை வீட்டில் வைத்திருந்த நபர் ஒருவரை பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்.உடுத்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

அதன் போது ஒரு தொகை கசிப்பு , கட்டுத்துவக்கு மற்றும் வாள் என்பவற்றை வீட்டில் இருந்து பொலிஸார் மீட்டத்துடன் வீட்டில் இருந்த நபரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றில் பாரப்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Share:

Author: theneeweb