கிளிநொச்சியில் ரணில் வைத்த கண்ணி வெடி

–          கருணாகரன்….

“எல்லாவற்றையும் மறப்போம். மன்னிப்போம். நமக்கிடையில் குற்றச்சாட்டுகளும் விசாரணைகளும் எதற்கு? தென்னாபிரிக்காவைப்போல இணைந்து வாழ்வோம்” என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

போதாக்குறையாக “மாகாணசபைகளுக்குஅதிகாரங்கள்பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. எனினும்அவற்றைபயன்படுத்தாமலிருப்பதுசிறந்ததல்ல. வழங்கப்பட்டுள்ளஅதிகாரங்களைபயன்படுத்தமுடியாவிட்டால்அதனைஅரசாங்கத்திடம்கையளியுங்கள்” என்றும் கூறியிருக்கிறார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 15.02.2019 அன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்துக்கான அபிவிருத்தி பற்றிய கூட்டத்திற்குத்  தலைமையேற்றவேளையிலே இதையெல்லாம் அவர் தெரிவித்திருக்கிறார்.

தனுடைய சாராம்சம் என்னவென்றால், யுத்தக் குற்றங்கள் பற்றிய கதையாடல்களை நாம் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டாம். எல்லாவற்றையும் மறந்து விடுவோம். ஆகவே நீங்கள் (தமிழ் மக்கள்) எம்மை மன்னித்துக் கொள்ளுங்கள். அதைப்போல நாங்கள் (அரசாங்கம்) செய்ததையெல்லாம் நீங்களும் மறந்து விடுங்கள். அவ்வாறே உங்கள் தரப்பிலிருந்து (புலிகள்) செய்ததையும் நாங்கள் மறந்து விடுகிறோம். மன்னிக்கிறோம் என்பதாகும்.

பிரதமர் இப்படிச் சொன்னது சரியென்று சிலர் சொல்லக் கூடும். இலங்கைத்தீவில் அமைதியும் சமாதானமும் ஒற்றுமையும் ஐக்கியமும் ஏற்பட வேண்டும் என்றால், பகைமையைத் தொடர்ந்தும் வளர்த்துக் கொண்டிருக்க முடியாது என்று அவர்கள் கூறுவார்கள். ஒற்றுமையும் அமைதியும் ஐக்கியமும் சமாதானமும் ஏற்பட்டால்தான் இலங்கைத்தீவைப் பொருளாதாரத்திலும் அறிவுத்துறையிலும் மேம்படுத்தலாம் என்பது அவர்களுடைய கருத்தாகும். இது ஒரு வகையில் உண்மையே.

போர் முடிந்த பிறகு பொறுப்புக் கூறல், பகை மறப்பு, நல்லிணக்கம், அமைதி, தீர்வு, சமாதானம், அபிவிருத்தி என்றொரு நிகழ்ச்சி நிரல் மிகப் பிரமாண்டமாகவும் பிரபலமாகவும் வைக்கப்பட்டது. இதற்காகப் பெருமளவு நிதியும் பிற வளங்களும் கூடச் செலவழிக்கப்பட்டன.

இருந்தும் கடந்த பத்து ஆண்டுகளில் பகை மறப்பிற்கும் நல்லிணக்குத்துக்கும் பதிலாக பகை வளர்ப்பும் நல்லிணக்கத்துக்கு எதிரான போக்குமே நடைமுறையாகியிருக்கிறது.

அப்படி பகை வளர்ப்புச் சூழலைப் பராமரித்துக் கொண்டு, பகையை மறப்போம். எல்லாவற்றையும் மன்னிப்போம். நமக்கிடையில் விசாரணைகள் வேண்டாம் என்றால்….அதனுடைய அர்த்தம் என்ன? என்ற கேள்வி மறுதரப்பினரிடம் எழுமல்லவா. அப்படியானவர்களுக்கு இந்த வார்த்தைகளைக்கேட்கும்போது சினந்தான் வரும்.

அவர்கள் நடந்த தவறுகளை மன்னிக்கக் கடினமான குற்றங்களாகவே பார்க்கிறார்கள். இழப்புகளை வலியோடு உணர்கிறார்கள். எனவே நீதியையும் நிவாரணத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அதற்காகவே அவர்களுக்கு விசாரணைகள் தேவைப்படுகின்றன. விசாரணைகள்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் குற்றவாளிகளுக்குத் தண்டனையையும் தரும்.

விசாரணைகள் வேண்டாம் என்றால், அதற்குப் பதிலாக இழப்பீடும் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய பங்கும் கொடுக்கப்பட வேண்டும். பங்கு என்பது இந்த நாட்டில் தாங்கள் (தமிழர்கள்) சமநிலையில் இருப்பதற்கான உத்தரவாதமும் உரிமையும். அதையே எதிர்பார்க்கிறார்கள். அதற்காகவே அவர்கள் ஆண்டுதோறும் ஜெனீவாவில் தங்களுடைய முறைப்பாடுகளோடு கூடுகிறார்கள். குரல் எழுப்புகிறார்கள்.

இதெல்லாம்  நிகழுமானால் அவர்கள் தங்கள் காயங்களை ஆற்றிக் கொள்வதற்கும் வலிகளை மறந்து, மன்னிப்பை நோக்கி நகர்வதற்கும் ஏதுவாகும்.

எனவே இதுவும் ஒரு வகையில் நியாயமானதே.

ஆகவேதான் இதையெல்லாம் செய்யாமல், வெறுமனே பகையை மறப்போம். எல்லாவற்றையும் மன்னிப்போம். நமக்குள் எதற்கு விசாரணைகள்? எனும்போது அவர்களுக்குக் கோபம் வருகிறது. அவர்கள் அரசாங்கத்தையும் அதன் தலைவருடைய பேச்சையும் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

ஆனாலும் பிரதமர் கிளிநொச்சி விஜயத்தைச் சில திட்டங்களோடுதான் மேற்கொண்டிருக்கிறார் என்றே படுகிறது.

1.   பகை மறப்பைக் கோருவது. இது ஏனென்றால் விசாரணைகள் வேண்டாம் என்று வலியுறுத்துவதற்கானது. ஏறக்குறைய (நிபந்தனையற்ற) நல்லிணக்கத்துக்கு அழைப்பது.

இதை அவர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கேட்காமல் கிளிநொச்சியில் வைத்துக் கேட்டதற்குக் காரணம், அங்கேதான் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருக்கின்றனர் என்பதால். ஆகவே போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன் இதைப் பகிரங்கமாகச் சொன்னால் அவர்கள் அதை ஏற்றதாக ஆகிவிடுமல்லவா. அதுவும் அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் மத்தியில் வைத்து இதைச் சொல்லும்போது அதற்கான அரசியல் பெறுமானம் வேறு. அதாவது. யுத்தக்குற்ற விசாரணை தேவை இல்லை என்பதை ஏற்க வைத்தல்.

2.   பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது.

சிறிதரன் பாராளுமன்றத்தில் அடிக்கடி அரசாங்கத்தைச் சாடுபவர். அரசாங்கத்தின் மீது அடிக்கடி கேள்விகளை எழுப்புகின்றவர். கூட்டமைப்பின் தலைமைக்குக் கட்டுப்பட்டு, அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்தாலும் அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான நெருக்கத்தைத் தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று காட்டுகின்றவர். அதற்காக அரச எதிர்ப்பின்மீது தீவிரம் கொண்டிருப்பவர். குறிப்பாக கொழும்பில் தனது தலைமைப்பீடத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து கொண்டு கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் எதிர்ப்புக் குரலை எழுப்புகின்றவர். இரட்டை முகத்தைக் கொண்டிருப்பவர்.

ஆகவே இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேணும் என்ற  நோக்கோடு சிறிதரனுக்கும் தமக்குமான நெருக்கத்தையும் இணைவையும் காட்டுவது. இப்படிக் காட்டுவதன் மூலம் சிறிதரனின் இரண்டக நிலையை முடிவுக்குக் கொண்டுவருவது. அதாவது சிறிதரனை அவருடைய கிளிநொச்சித் தொகுதியில் வைத்தே தோற்கடிப்பது. அல்லது சரணாகதியடைய வைப்பது.

எதிர்பார்த்தபடியே பிரதமருக்கும் திரு. சுமந்திரனுக்கும் இதில் பூரண வெற்றியே. கிளிநொச்சியிலிருந்து கொழும்பு திரும்பும் வழியில் இதைப்பற்றி – சிறிதரனின் காதில் பூவைச் சுற்றியதைப்பற்றி இருவரும் சிரித்துப் பேசியபடியே சென்றிருப்பார்கள்.

3.   அடுத்து வரவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபடுவது. இதை மையமாக வைத்து நகர்த்தப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள். யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் சில புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சில திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இவை தொடர வேண்டுமாக இருந்தால் மாகாணசபைத் தேர்தலில் இவற்றை ஆரம்பித்து வைத்த தரப்புகளுக்கு வெற்றி வாய்ப்புக் கிடைக்க வேணும் என்ற உணர்வை ஏற்படுத்துவது.

இந்த மூன்றிலும் ஏறக்குறையப் பிரதமருக்கு வெற்றியே. அதிலும் முன்னைய இரண்டிலும் கணிசமான வெற்றிகளை அவர் அறுவடை செய்து கொண்டே கிளிநொச்சியிலிருந்து திரும்பியிருக்கிறார்.

முக்கியமாக “எல்லாவற்றையும் மறப்போம். மன்னிப்போம். நமக்கிடையில் குற்றச்சாட்டுகளும் விசாரணைகளும் எதற்கு? தென்னாபிரிக்காவைப்போல இணைந்து வாழ்வோம்” என்று பிரதமர் சொன்னபோது இதைக் கேட்டுக்கொண்டு அங்கே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்.  எப்போதும் தன்னுடைய குரலை உயர்த்தி, அரசாங்கத்தைக் கடுந்தொனியில் விமர்சிக்கும் சிவஞானம் சிறிதரன் தொடக்கம் சுமந்திரன் வரையில் யாரும் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

ஆனால், அவர்கள் இருவரும் தமது மக்களின் சார்பில் இதற்கான பதிலைச் சொல்லியிருக்க வேணும். அந்தப் பதிலானது, “நல்லது பிரமர் அவர்களே, நீங்கள் சொல்வதைப்போல நாங்களும் பகையை மறக்கவே விரும்புகிறோம். பகைமையை மன்னிக்கத் தயாராக இருக்கிறோம். நாம் விசாரணைகளைக் கைவிடுவதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றால், அதற்கான சூழலை உருவாக்கும் பொறுப்பு உங்களிடமே உள்ளது. எமது மக்களின் காயங்களை, வலிகளை, துயர்களை ஆற்றக்கூடிய விடயங்களை நீங்கள் செய்தால் எமது மக்களை நாம் மன்னிப்பை நோக்கித் தயார்ப்படுத்தலாம். எமது மக்களுடைய உரிமைக்கோரிக்கைக்கான ஏற்பினை நீங்கள் செய்தால் நாங்கள் உங்களுடன் கைகோர்ப்பதற்குத் தயாராக இருக்கிறோம்” என்று அமைந்திருக்க வேண்டும்.

அரசியல் ரீதியாகச் சிந்திக்கும் எவரும் இத்தகைய பதிலையே சொல்லியிருப்பர். அதுதான் சாணக்கியம். தங்களுடைய மக்களின் சார்பாக விசுவாசமாகச் சிந்தித்திருந்தால் இவ்வாறான பதில் நிச்சயமாக மனதில் வந்திருக்கும்.

சிறிதரனைத்தான் விடுவோம். குறைந்த பட்சம், சுமந்திரனாவது இதற்கான பதிலைச் சொல்லியிருக்க வேணும். ஏனென்றால், சுமந்திரன் ஒரு புகழ்மிக்க சட்டவாளர். நீதிமன்றத்தில் பல வாதக் களங்களைச் சந்தித்தவர். ஆகவே அவர் அரசியல் ரீதியாகச் சிந்திக்கும் ஆற்றலையோ பண்பையோ கொண்டவர் அல்ல என்றால், சட்டவாளர் என்ற அடிப்படையிலாவது தமது மக்களின் சார்பாக வாதிட்டிருக்கலாம். பதலளித்திருக்கலாம்.

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.

பதிலாக பிரதமரின் கோரிக்கையை – கூற்றினை மௌமான இருந்து ஆமோதித்தது கூட்டமைப்பு.

ஜெனிவாவில் யுத்தக் குற்றங்களைக் குறித்தும் போருக்குப் பிந்திய இலங்கைச் சூழலைப்பற்றியும் பொறுப்புக்கூறல், பகை மறப்பு, நல்லிணக்கம் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் சூழலில் அவற்றைப் பற்றிய தன்னிலைச் சித்திரமொன்றைப் பிரதமர் கிளிநொச்சியில் உருவாக்கியிருக்கிறார்.

இதற்கு அவர் தன்னுடைய சக பங்காளிகளையும் சேர்த்திருக்கிறார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகால அரசியல் அனுபவமுடையவர் தான் என்பதை ரணில் விக்கிரமசிங்க தெளிவாக நிரூபித்திருக்கிறார். எந்த நிலையிலும் தன்னால் சாதுரியமாகச் செயற்பட முடியும். வெற்றியைப் பெற முடியும் என்று காட்டியுள்ளார்.

ஆம், கிளிநொச்சி விஜயம் பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் வெற்றியே. தமிழர்களுடைய நிலத்தில் வைத்தே தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இது முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து வரும் தொடர் தோல்வியில் இன்னொரு முக்கியமான புள்ளியாகும்.

ரணில் தன்னுடைய அரசியலில் மிகத் தெளிவாக உள்ளார். அதன்படி அவர் செயற்படுகிறார். ரணிலைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படுவது, ஜே.ஆருக்குப் பிறகு இன்னொரு அரசியல் தந்திரசாலி (நரி) ரணில் என்று. இது வெறுமனே உறவின் அடிப்படையிலான தொடர்புக் கூற்றல்ல. அரசியல் ரீதியான அடையாளம். அவதானம்.

அப்படியான ஒரு அரசியல் சூதாடி எப்படித் தன்னுடைய காரியங்களைச் சாதிப்பதற்கு முயற்சிப்பார் என்று தெரியாமல் இழித்துக் கொண்டு நிற்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?

இதையிட்ட கவலைகள் யாருக்குண்டு.

பகை மறப்பும் நல்லிணக்கமும் ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதில் நிகழாது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, மதித்துக் கொண்டு, அரவணைப்பதில்தான் நிகழும்.

அதற்கான தூரம் இன்னுமுண்டு என்றே தோன்றுகிறது.

ஆனால், ரணில் வைத்த கண்டி வெடி நல்லாத்தான் வெடிச்சிருக்கு.

00

Share:

Author: theneeweb