’இந்து தமிழ் திசை’ சிறப்புக் கட்டுரை: ’பரேல்வி’ எனும் முற்போக்கு சிந்தனையில் வளர்ந்து பயங்கரவாதியான ஆதில்

 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகக் காரணமான ஆதில் அகமது தார்(19), இஸ்லாத்தில் முற்போக்கு சிந்தனையாகக் கருதப்பட்ட ’பரேல்வி’ பிரிவு குடும்பத்தை சேர்ந்தவர். இவரது செயல்பாடுகளின் மூலம், எப்படிப்பட்டவர்களையும் தமக்கு சாதகமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மாற்றி விடுகிறார்கள் என்பது உறுதியாகிறது.

மத்திய காஷ்மீரின் புல்வானா மாவட்டத்தி குந்திபாக் கிராமத்தை சேர்ந்தவர் ஆதில். இங்கிருந்து 10 கி.மீ தொலையில் தான் தாக்குதல் நடந்த புல்வானா உள்ளது. இந்த கிராமத்தினரில் பெரும்பாலானவர்கள் பரேல்வி கொள்கைகளை பின்பற்றுபவர்கள்.

பயங்கரவாதியான ஆதில் அகமது தாரின் குடும்பமும் பரேல்வி கொள்கைகளை நேசித்து வருகிறது. பரேல்விகள் இடையே ஜிஹாத் பற்றிய பேச்சுக்களும் அதிகமாக இருப்பதில்லை எனப் பொதுவானக் கருத்து உள்ளது.

இப்படிப்பட்ட குடும்பத்தின் இளைஞர்களையும் ஜெய்ஷ்-எ-முகம்மது போன்ற தீவிரவாத அமைப்பினர் அனுகி மனமாற்றம் செய்து வருவது காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளஸ்டூ படிப்பை பாதியில் முடித்த ஆதில் அகமது கடந்த வருடம் மார்ச்சில் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார். அதற்கு முன் சில மாதங்கள் தன் வீட்டுக்கு அருகிலுள்ள மரம் அறுக்கும் மில்லில் பணியாற்றியுள்ளார்.

இவரது நெருங்கிய நண்பராக இருந்த சமீர் என்பவர் பட்டப்படிப்பில் இணைந்து படிப்பில் கவனம் செலுத்துகிறார். பரேல்வியின் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றி வந்த ஆதில் அப்பகுதியின் மசூதிகளின் தொழுகைகளுக்கும் தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.

ஆதில் போன்ற தீவிரமான ஒரு பரேல்வி முஸ்லிம்களையும், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் மாற்றி தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட வைத்துள்ளார். இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் மற்ற தீவிரவாதிகளை விட மசூத் அசார் கைதேர்ந்தவராக உள்ளார்.

எனினும், பரேல்வி குடும்பத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பில் சேர்ந்த முதல் நபர் ஆதில் அல்ல. இவருக்கு முன்பாக ஆதிலின் ஒன்றுவிட்ட சகோதரான மன்சூர் அகமது தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவில் இணைந்து கடந்த 2016-ல் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் ஆதில் போன்ற பரேல்விகள் இடையே ஏற்பட்டு வரும் மாற்றத்திற்கு தீவிரவாத இயக்கத்தில் இணைந்த காஷ்மீர் இளைஞர் புர்ஹான் வாணியும் ஒரு காரணம் எனக் கருதப்படுகிறது.

வாணி பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்ட பின் காஷ்மீரில் பெரிய போராட்டம் துவங்கியது. இதில் தான் முதன் முதலாக பாதுகாப்பு படைகள் மீது காஷ்மீர் இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தத் துவங்கினர்.

இதற்கு பதிலாக அவர்கள் மீது பாதுகாப்பு படைகள் ’பெல்லட்’ எனும் ரப்பர் குண்டுகளால் சுட்டது. இதுபோன்ற சம்பவங்களை சாதகமாக்கிய தீவிரவாதிகள், காஷ்மீர் இளைஞர்களின் மனதில் இந்தியாவிற்கு எதிராக மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதாகக் கருதப்படுகிறது.

காஷ்மீர் தர்காவில் தாக்குதல்

பரேல்விகள் வணங்கும் ‘சரார்-எ-ஷெரீப்’ எனும் தர்கா காஷ்மீரில் மிகவும் பிரபலம். இங்கு ஒளிந்திருந்தால் சந்தேகம் வராது என 1995-ல் தீவிரவாதிகள் அதில் ஒருமுறை தஞ்சம் அடைந்தனர். இதை அறிந்த பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் அந்த தர்கா கட்டிடம் பாதிப்படைந்தது

யார் இந்த பரேல்விகள்?

அனைத்து மதங்களை போலவே இஸ்லாமியர் இடையேயும் பல்வேறு சிந்தனை பிரிவுககள் உண்டு. இவற்றை துவக்கி போதித்த மவுலானாக்களின் பெயரில் அப்பிரிவுகள் அழைக்கப்படுகின்றன. உலக முஸ்லிம்கள் இடையே பரவலாகப் பின்பற்றப்படுவது ஷாபி, மாலிக்கீ, ஹம்பிலி மற்றும் ஹனபி ஆகியவை முக்கிய நான்கு சிந்தனை பிரிவுகள்.

ஹனபியின் இரண்டு பிரிவு

இந்த நான்கில் ஒன்றான ஹனபியில் மட்டும் ’பரேல்வி’, ’தியோபந்தி’ என இரண்டு கிளை சிந்தனைப் பிரிவுகள் இந்தியாவில் உருவாயின. இந்த இரண்டுமே உபியின் மேற்கு பகுதியில் இஸ்லாமிய மதரஸாக்கள் அமைந்துள்ள இடங்களின் பெயர்கள். இவை, நாட்டின் பிரிவினைக்கு முன் உருவானவை.

சிந்தனைக்கு ஏற்ற பாடம்

இந்த பழம்பெரும் மதரஸாக்களில் அதன் சிந்தனை பிரிவுகளுக்கு ஏற்ப பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதனால், தாம் பின்பற்றும் சிந்தனைகளுக்கு ஏற்ப தன் பிள்ளைகளுக்கான மதரஸாவை முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கின்றன.

152 வருட உபி மதரஸா

உபியில் அமைந்துள்ள தியோபந்தின் தாரூல் உலூம் மதரஸா 152 வருடங்கள் பழமையானது. இதில் இஸ்லாத்தின் பழமைவாதம் போதிக்கப்படுவதாகக் கருதினார் அதில் படித்தவர்களில் ஒரு முஸ்லிமான அகமது ரசா.

பரேலியில் புதிய இயக்கம்

இதனால், சில மாறுதல்களுடன் தியோபந்திற்கு அருகிலுள்ள தனது நகரான பரேலியில் ‘பரேல்வி’ எனும் பெயரில் சுமார் 110 வருடங்களுக்கு முன் ஒரு இயக்கத்தை அவர் உருவாக்கினார். இதுபோன்ற பிரிவுகளுக்கு நம் நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களின் ஆதரவும் கிடைத்தது.

முற்போக்கு கொள்கைகள்

அப்போது முற்போக்கு சிந்தனைகளாக கருதப்பட்டதை போதிக்க பரேலியில் ’மன்சர்-எ-இஸ்லாம்’ எனும் பெயரில் ரசா 1904-ல் துவக்கிய புதிய மதரஸா இன்றும் நடைபெற்று வருகிறது. ரசாவின் குடும்ப வழி வந்தவர்களால் அது இன்றும் நிர்வாகிக்கப்படுகிறது.

புரிதலில் மாற்றம்

இந்த இரண்டிலுமே சன்னி ஹனபி வகைப் பாடங்கள் போதிக்கப்பட்டாலும் பரேல்வியின் முற்போக்கு சிந்தனைகளுக்கு ஏற்ப மறைநூலான குர்ஆன் புரிதலில் மாற்றம் உள்ளது. இஸ்லாமியப் பழக்க, வழக்கங்களிலும் தியோபந்திகளை போல் அன்றி சில மாற்றங்களை கடைப்பிடிக்கின்றன.

பர்தா பெண்கள்

இந்த மாற்றம், கல்வி அறிவு பெற்றவர்கள் இடையே அதிகமானது. இதன் தாக்கமாக பரேல்விகளில் பர்தா அணியும் பெண்கள் சற்று குறைந்தது. இறந்தவர்களுக்கு அவர்கள் 10, 20, 40 ஆம் நாட்கள் மற்றும் வருடநினைவு நாட்களில் சடங்குகள் செய்யும் பழக்கம் பரேல்விகளிடம் உருவானது.

கருத்து மோதல் இல்லை

எனினும், இதுபோன்ற பிரச்சனைகளால் இருவகை சிந்தனைவாதிகள் இடையே பெரிய அளவில் கருத்து மோதல்கள் வருவது இல்லை. தியோபந்தி மற்றும் பரேல்வி இடையே திருமணஉறவுகளும் இருந்தது.

சுதந்திரப்போரில் முக்கியப் பங்கு

தியோபந்திகள், குர்ஆனின் புரிதல் மாறாமல் கற்று அதை தீவிரமாக பின்பற்றுகிறார்கள். இதற்கு குர்ஆனில் தீவிரவாதம் போதிக்கப்பட்டது என்பது அர்த்தமில்லை. ஏனெனில், இந்திய சுதந்திரப்போரில் தியோபந்த் மதரஸாவின் முக்கியப் பங்கு வகித்த வரலாறு உண்டு.

அல்லாவை தவிர எவரையும் வணங்கக் கூடாது

இந்த மாற்றத்தை சரியாகப் புரிந்து கொள்ளும்படி மேலும் சில உதாரணங்கள் உள்ளன. குர்ஆனில் அல்லாவை தவிர அவரது இறைத்தூதர்கள் உள்ளிட்ட எவரையும் வணங்கக் கூடாது என உள்ளது.

முஸ்லிம் துறவிகளான சூபிக்கள்

ஆனால், இறைத்தூதர்களை வணங்கியதுடன் மிலாது நபி போன்ற விழாக்களையும் பரேல்விகள் கொண்டாடத் துவங்கினர். முஸ்லிம் துறவிகளான சூபிக்களையும் இவர்கள் வணங்க அனுமதித்தனர். இந்த ஆதரவால் அக்காலங்களில் பரேல்விகள் சூபிக்களாலும் வழிநடத்தப்பட்டனர்.

தமிழகத்தின் தர்காக்கள்

இதனால் தான் இந்தியாவில் அதிகமுள்ள சூபிக்களின் தர்காக்கள் இன்னும் கூட பரேல்விகளால் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் அதிகம் உள்ள தர்காக்களை வணங்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் இதன் வரலாறு அறிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு.

இந்துக்களுடன் மதநல்லிணக்க உறவு

தமிழகத்தில் சில இந்துக்கள் கோயில்களாகக் கருதி தர்காக்களை வணங்குவது உண்டு. இதனால் தான் இன்றும் தர்காக்களின் சந்தனக்கூடு விழாக்களில் இந்துக்கள் நடத்தும் ஊர்வலங்கள் நடைபெறுகிறது. இதன் பின்னணியில் தமிழக இந்து-முஸ்லிம்கள் இடையே வளர்ந்த மதநல்லிணக்க உறவும் காரணமாக இருந்தது.

சூபிக்களின் ’மசார்’

தர்காக்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சூபிக்களின் மசார்(புதைக்கப்பட்ட இடம்) அமைந்துள்ளன. இதில் ஒன்றான கரீப் நவாஸ் எனப்படும் அஜ்மீர் ஷெரீப் காஜா மொய்னுத்தீன் சிஸ்தி மற்றும் டெல்லியின் ஹசரத் நிஜாமுத்தீன் சிஸ்தி ஆகிய சூபி தர்காக்கள் வடமாநிலங்களில் மிகவும் பிரபலம்.

அஜ்மீர் தர்காவில் பாகிஸ்தானியர்கள்

சுதந்திரத்திற்கு முன் உருவாகாத பாகிஸ்தான் மக்களும் இந்த தியோபந்த், பரேல்வி சிந்தனையாளர்களால் ஈர்க்கப்பட்டவர்கள். இதனால், இந்தியா வரும் அதிபர்கள் உள்ளிட்ட பாகிஸ்தானியர்கள் அஜ்மீர் தர்காவிற்கு செல்லாமல் நாடு திரும்புவது குறைவு.

ஆயுதமான மதம்

இருப்பினும், காஷ்மீரில் பிரச்சனையை கிளப்ப வேண்டி பாகிஸ்தானின் ஒரு பிரிவு முஸ்லிம்கள் தம் மதத்தையே தன் ஆயுதமாக்கி விட்டனர். மதத்தை வளர்க்க அவர்கள் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள ஜிஹாத் கொள்கையை, உயிர்களை பலியாக்கத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

தீவிரவாதத்தில் சேராத பரேல்விகள்

எனவே தான் அங்குள்ள ஒரு பிரிவு முஸ்லிம்களால் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-எ-தொய்பா, ஹுஜுபுல் முஜாகித்தீன் போன்ற தீவிரவாத அமைப்புகள் பலவும் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற அமைப்புகளில் முற்போக்கு கொள்கைகள் கொண்ட பரேல்விகள் பெரும்பாலும் சேர்வதில்லை

ஜிஹாத் மீதான தவறானப் புரிதல்

முஸ்லிம்களில் எந்த கொள்கைகளை சேர்ந்தவர்களாக இருப்பினும், ’ஜிஹாத்’ மீதான தவறானப் புரிதல்களை கொண்டவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதுபோல் தவறானப் புரிதல் கொண்டவர்கள் பாகிஸ்தானில் அதிகம்.

அனைவரும் போராட வேண்டும்

இவர்களால் இந்திய உயிர்கள் பரிதாபமாக பலியாவது தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நம் அரசுடன் இணைந்து சாதி,மத வேறுபாடின்றி அனைவரும் போராடுவது அவசியம்.

Share:

Author: theneeweb