எதிர்காலத்திலும் இதுபோன்ற தவறுகள் எமது சந்ததிக்கு நேர்ந்துவிடலாகாது

கானல்தேசம்- முன்னுரை –   நடேசன் —

 

அப்பிள் நிலத்தில் விழுவது, அதனது காம்பு சூரியவெப்பத்தில் காய்ந்துவிடுவதாலா? காற்று பலமாக வீசியதாலா? புவியீர்ப்பினாலா? அல்லது அப்பிள் மரத்தின் கீழே நின்ற சிறுவன் அதை உண்பதற்கு விரும்பியதாலா?

இப்படி பல காரணங்கள் பழமொன்று விழுவதற்கு இருக்கும்போது, ஏனைய விடயங்களுக்கு எத்தனை காரணங்கள் இருக்கலாம் என ருஷ்ஷிய எழுத்தாளர் லியோ ரோல்ஸ்ரோய் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதை வாசித்தபோது இலங்கையில் தமிழர்கள் போராட்டம் தோற்றதற்கு இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல காரணம் என்ற விசாலமான சிந்தனையில் உருவாகியதே இந்த நாவல். அதேவேளையில் ஈழப் போராட்டத்தை அவதானமாக கவனித்த காலப்பகுதியில், அவுஸ்திரேலியாவில் வெளிவந்த ‘உதயம்’ மாத இதழின் நிருவாக ஆசிரியனாக இருந்தபோது பல சம்பவங்கள் என்னை மிகவும் ஆழமாக பாதித்தன. அதில் முக்கியமானது இலங்கையின் இராணுவத் தளபதி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலாகும்.

ற்கொலைத் தாக்குதல் என்பது மிகவும் பழைமையானது. பழைய வேதாகமத்தில், வெட்டாத மயிரில் இருந்து வலிமை பெற்ற சாம்சன் சிறையிருந்த மண்டபத்தின் துண்களை உடைத்து, சிறைப்பிடித்தவர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கொன்று தானும் இறந்தான். பாரதப்போரில் அரவானது களப்பலி அத்துடன் பல நமது தொன்மையான கதைகளில் இப்படியான தற்கொலை தாக்குதல்கள் உள்ளன.

ஜப்பானியர்களது கமக்காசியென அழைக்கப்பட்ட குண்டுடன் பாய்ந்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் நடந்து எதிரிகளை நிலைகுலையப்பண்ணியது. தற்பொழுது இஸ்லாமியத் தீவிரவாதிகளாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமென தற்கொலை தாக்குதல்கள் செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் தன்னுயிரைக் கொடுத்து எதிரியை அழிப்பதற்கான உதாரணங்கள்.

விடுதலைப்புலிகள் பெண்ணைக் கர்ப்பிணியாக்கி அதன் பின் அந்தப்பெண்ணை தொடர்ச்சியாக இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி, பின்னர் தற்கொலை குண்டுதாரியாக இராணுவ தளபதிக்கு எதிராக பாவித்தது போன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை வேறு வரலாறுகளில் நான் படித்திருக்கவில்லை. மனித சமூகத்தில் மட்டுமல்ல மிருகங்கங்கள் மத்தியிலும் நம்மால் பேசப்படும் தாய்மை என்ற கருத்தாக்கத்தை அத்தகைய செயல் தகர்க்கிறது. இத்தகைய செயலை எப்படிப் புரிந்து கொள்வது?

தமிழ் மக்களது சொத்துக்கள் உடமைகள் அழிக்கப்பட்டது பலருக்கும் தெரியும். ஆனால், தென்பகுதியில் ஒரு இடத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்த சிங்கள குடும்பத்தின் வீடு, பாதுகாப்புப் படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது மற்றைய ஒரு செய்தி.

முல்லைத்தீவு இராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகளின் தாக்குதலில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தபோதிலும் எழு இரணுவ வீரர்கள் பல நாட்கள் தண்ணீர் தாங்கியில் ஒளித்திருந்து உயிர் பிழைத்தார்கள்.

விடுதலைப்புலிகளால் துணுக்காயில் நடத்தப்பட்ட சித்திரவதை முகாமில் பலர் இறந்தபோதும் சிலர் உயிர் தப்பினார்கள்.

இப்படியான சம்பவங்கள் சில என்னை ஆழமாக யோசிக்கவைத்தன. எனினும், போர்க்காலத்தில் நான் இலங்கையில் இருக்கவில்லை. சம்பவங்கள் உண்மையானவை என்பதால் அதனது காரணங்களை கற்பனையாக்கி புனையப்பட்ட பாத்திரங்களை உலாவவிட்டேன். இந்த நாவலில் சில முக்கியமான சம்பவங்கள் ஊடகங்கள் மூலமும் தனிப்பட்ட தொடர்பாலும் எனக்குத் தெரிந்தவை. அவைகளின் காரணங்கள் கற்பனையில் இப்படி இருக்குமா என நினைத்து எழுதப்பட்டது இந்த நாவல். தகவல் எங்குமுள்ளது. அதன் காரணத்தை சொல்வது நாவலாகும்

கடந்த முப்பது வருடப்போரில் பல இருண்ட பக்கங்களோடு பல நிரப்பப்படாத பக்கங்களும் உள்ளன. இவை எதிர்காலத்தில் வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்படுமா என்பது தெரியாதபோது நாவலாசிரியரினால் கற்பனையால் சில பகுதிகள் விரவப்படுகிறது.

The king died and then the queen died is a story. The king died, and then queen died of grief is a plot.” – E. M. Forster

இதுவரையும் போரைப் பற்றி எழுதியவர்கள் போரில் பங்குகொண்டவர்கள். நான் போரை நேரடியாக பார்த்தவனில்லை என்பதால், நான் உருவாக்கிய பாத்திரங்கள் கற்பனையானவை. அவர்கள் சென்ற வழியே இந்த நாவல் செல்கிறது. இது போர் நாவலல்ல. போரால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசிலரது கதையே இதில் வருபவர்கள் எவரேனும் கற்பனைப்பாத்திரங்கள் அல்ல என வாசகர் தீர்மானித்தால் அது வாசகரின் கற்பனை. அதற்கு நான் பாத்திரவாளியல்ல.

இலங்கையில் நீடித்த போரினால் மூன்று இனங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். பாதிப்பின் அளவுகளின் எண்ணிக்கையில் வித்தியாசமிருக்கலாம். மனிதர்களை இன மதம் கடந்து பார்க்கிறேன். அவர்களது பாதிப்புகளை வெளிப்படுத்த எனது பாத்திரங்கள் அந்தந்த சமூகத்தில் இருந்து தெரிவாகியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் மட்டுமல்ல பல வெளிநாட்டவர்களும் இந்தப் போர் வரலாற்றில் நிஜமான பாத்திரங்களாக இருப்பதனால் எனது பிரதான பாத்திரங்கள் சில வெளிநாட்டவர்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நாவலாசிரியனாகவும் இலக்கியப்பரப்பில் நிற்கும் எனது அரசியல் பார்வையையும் வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதையும் இங்கு மேலுமொன்றை சுட்டிக்காண்பிக்கின்றேன்.

Black July

83 ஜுலையின் பின்பு தமிழர்கள் ஒரு ஆயுதப்போரை நோக்கித் தள்ளப்பட்டார்கள் என நினைத்தவனில் நானும் ஒருவன். தமிழர்கள் மிகவும் இலகுவாக அதிகாரப்பகிர்வை பெற்றுக்கொள்ள கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களை விடுதலைப்புலிகள் நிரகரித்ததுடன் பல முக்கிய அரசியல் சமூகத் தலைவர்களையும் கொன்றதால் போராட்டத்தை ஆதரித்த என் போன்றவர்கள் பிற்காலத்தில் இலங்கை அரசாங்கத்தை விட தமிழ்மக்களின் எதிரிகள் விடுதலைப்புலிகள்தான் என்ற நிலைப்பாட்டை எடுக்கவேண்டியிருந்தது.

இந்த எனது எண்ணத்திலிருந்து இம்மியளவும் மாறாதவேளையில், எதிர்காலத்திலும் இதுபோன்ற தவறுகள் எமது சந்ததிக்கு நேர்ந்துவிடலாகாது என்பதற்காகவே எனது நோக்கத்தை நாவலாக இங்கு பதிவுசெய்துள்ளேன்.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களது தவறுகளை மட்டுமல்ல, அயல்நாடான இந்தியாவின் பங்கையும் விவரிக்காமல் இந்தப் போரை பற்றி எழுதமுடியாது. போரின் இறுதிக்காலத்தில் மேற்கு நாடுகள் பலவும் இதில் பங்குகொண்டன. இந்தப்போரில் முக்கிய பங்குகொண்ட விடுதலைப்புலிகள் இயக்கம், தமிழர்களுக்காக இலங்கை அரசோடு போராடியதுடன் மட்டும் நிற்கவில்லை. ஏனைய விடுதலை இயக்கங்களை எதிர்த்தும் போராடியது. அத்துடன் உள்நாட்டில் வாழ்ந்த ஏனைய இனத்தினரோடும் போராடியது. வெளிநாடுகள் முன்வைத்த தீர்வு யோசனைகளுக்கு எதிராகவும் போராடியது. ஒரு விதத்தில் பல முனைகளில் போரிடவேண்டிய நிலையை தங்களுக்கு அவர்களே உருவாக்கினார்கள்.

காட்டில் வேட்டையாடும் மிருகங்கள் தமது உணவிற்கு அதிகமாக வேட்டையாடுவது இல்லை. அவை தங்கள் இருப்பை பாதுகாக்கவும் பால் உறவிற்காகவும் மட்டுமே சண்டையில் ஈடுபடும். காட்டில் உள்ள விதிமுறைகள்கூட இந்தப் போராட்டத்தில் இருக்கவில்லை. எந்தவிதமான நியாயங்களோ அறங்களோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தவில்லை என்னும் கசப்பான உணர்வை அவர்களை ஆதரித்தவர்களும் மறுக்க முடியாது.

அரசியல்வாதிகள் பலதரப்பிலும் இப்படியான நிலைக்கு மூலகாரணம் என்பது பலருக்கும் புரிந்த உண்மை. இலங்கை அரசுகளில் இருந்த அரசியல்வாதிகள் இந்தப் போராட்டத்தை ஆரம்பத்திலேயே சுமுகமாக முடித்திருக்கலாம்.. ஆனால், அவர்கள் போரை உருவாக்கி அதை அரசியலாக்கியது மட்டுமல்ல, வியாபாரமாகவும் மாற்றினார்கள். அதேபோன்று தமிழ் அரசியல்வாதிகளும் விளையாட்டு மைதானத்தில் வீரர்களை உற்சாகப்படுத்தும் பார்வையாளர்களாக இயங்கினார்கள். இதனால் இரண்டு பக்கத்திலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வீணாக உயிரிழந்தார்கள். விதை நெல்லை அவித்து தங்கள் பசிபோக்கும் விவசாயியின் போக்கை ஒத்தவை இலங்கை அரசியல்வாதிகளின் நடத்தைகள். இந்தப்போரை அரசிற்கோ எந்த இனத்திற்குமோ பெருமைதரும் போராக நினைவு கூரமுடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு வெற்றியை ஒரு பிரிவும் பெறவில்லை. அழிவு மட்டுமே நடந்தது.

சிறுவயதில் இருந்து வாழ்கையின் பெருமளவு காலத்தில் நீடித்த இந்தப் போரையும் அதனது விளைவுகளையும் அவதானித்து வந்துள்ளேன். போரைத் தணிக்கவும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும் என்னால் முடிந்தவரை எனது சக்திக்குட்பட்டவாறு முயற்சி செய்திருக்கின்றேன்.

போர் முடிந்தாலும் இன்னமும் பூரண அமைதி ஏற்படாத காலத்தில் இந்த நாவல் வெளிவந்தபோதிலும் பொதுவாக எழுபதுகளில் இருந்து போராட்டத்தில் ஈடுபட வந்து, பின்னர் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் ( இதில் பலர் எனது நண்பர்கள்) பிரதானமாக நான் மிகவும் நேசித்த பத்மநாபாவுக்கும் இந்த நாவலை சமர்ப்பிப்பதன் மூலம் ஏதோ சிறிய ஆறுதலை அடையமுடியும் என நினைக்கிறேன்.

மதநம்பிக்கையுள்ளவன் மறைந்த தனது பெற்றோரது அஸ்தியை கரைக்கும்போது ஏற்படும் உணர்வுடன் இந்த நாவலைப் படைத்தேன் என்றால் அது மிகையான கூற்றல்ல. இந்த நாவலின் நோக்கம் பழயவற்றைக் கிளறுவதல்ல. புதியவற்றை மற்றாக வைப்பதற்கே என்பதுடன் நாவலுக்கும் வாசகர்களுக்குமிடையில் இருந்து விலகுகிறேன்.

நடேசன்

uthayam12@gmail.com

Share:

Author: theneeweb