கிளிநொச்சியில் மக்கள் சிந்தனைக்களம்

      கருணாகரன்—–

கிளிநொச்சியில் “மக்கள் சிந்தனைக்களம்” என்ற சுயாதீன அமைப்பொன்று உருவாகியுள்ளது. ஆறு மாதங்களுக்கு மேலாகச் செயற்பட்டு வந்த இந்த அமைப்பு இப்பொழுது தன்னைப் பொது வெளியில் வெளிப்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த 03.02.2019 அன்று கிளிநொச்சி நகரில் உள்ள கருணா நிலையத்தில் நடத்தியிருக்கின்றனர்.

அமைப்பின் சார்பாகக் கலந்து கொண்டவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அத்தியட்சகர் டொக்ரர் த.சத்தியமூர்த்தி, காவேரிக்கலாமன்றத்தின் பணிப்பாளர் வண பிதா யோசுவா, கரைச்சிப்பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் திருமதி அருட்சோதி, கருணாநிலையத்தின் பொறுப்புமைக் குருவானவர் அருட்தந்தை டானியல், சாந்தபுரம் ம.வி அதிபர் பெ.கணேசன், கிளிநொச்சிசின்மியாமிசன்சுவாமிசிவேந்திரசைத்தன்ய ஆகியோர். கூடவே சிந்தனைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களில் சிலரும் அப்பொழுது அங்கே பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது வண பிதா யோசுவா “மக்கள் சிந்தனைக்களம்” பற்றிய முன்னறிமுகத்தினைச் செய்யும்போது, “மக்கள்சிந்தனைக்களம்கடந்தஆறுமாதங்களுக்கு மேலாகஇயங்கிவருகிறது. இதன்பிரதானநோக்கமானது,மக்கள்தாம்சொல்லவிரும்புகின்றவற்றைசொல்லதயங்குகின்றபோதுஅல்லதுசொல்லவிரும்புகின்றவற்றை  சரியானமுறையில் சொல்வதற்கான வாய்ப்புக்களை தேடுகின்றபோது அவ்வாறான விடயங்களைசிந்தித்து, கலந்துரையாடி,சொல்லவேண்டிய இடங்களுக்கு  சொல்வது மக்கள்சிந்தனைக்களத்தின் ( சிந்தனையாளர்வட்டம்) நோக்கமாகும். அதாவது குரலற்ற மக்களின் குரலாக ஒலிப்பதும் செயற்படுவதுமாகும்.

“நான்நானாகஇருக்கிறேன், நீநீயாகவேஇரு.மக்களுக்காகஒருகணம்சிந்திப்போம்”  என்ற mதொனிப்பொருளை அடிப்படையாககொண்டு  இரண்டுவாரத்திற்கு mஒருதடவைகூடிக் mகலந்துரையாடி  விடயங்களை mஉரியதரப்பினர்களின் கவனத்திற்கு mகொண்டு செல்லுதல்இதன் பணியாகும்.  இதன் மூலம் மக்களுடைய  பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கி நகர்வதும் மக்களின் தேவைகளைப் பற்றிய உரையாடல்களைச் செய்வதும் பிரதேசத்தின் நலன், வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிச் சிந்திப்பதும் இந்த அமைப்பின் நோக்கமாகும்.  இவ்வமைப்பானது  கிளிநொச்சிமாவட்டத்தில்ஒருஅழுத்தகுழுவாகஇருந்துசெயற்படும்.

“இந்தச்சிந்தனையாளர்வட்டத்தில்  அங்கம்வகிப்பவர்கள்,   எந்த பின்புலத்தையும் சார்ந்தவர்களாகவும்  இருக்கலாம். எந்த கொள்கையோடும் இருக்கலாம்.  ஆனால் மக்கள் நலன்சார்ந்து சிந்திக்ககூடியவாறு இவ்வமைப்பில் இணைந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை, சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள முடியும்.

“சிந்தனையாளர் களத்தில்  நடுநிலையாக சிந்திக்கக்கூடியவர்கள் இணைவதில் தடையில்லை, இதுவொரு அமைப்பாக செயற்பட்டாலும் இங்குதலைவர், செயலாளர்என்ற நிர்வாக கட்டமைப்பு இல்லை. இரண்டு வாரத்திற்கு ஒரு  தடவைகூடுகின்றபோது ஒருவர் தலைமை  வகிப்பதோடு, மிக முக்கியமான விடயம்குறித்த கலந்துரையாடல் இடம்பெறும். சமகாலப் பிரச்சினைகளும் பேசப்படும்.

“கிளிநொச்சிமாவட்டத்தில்  சிவில்சார்ந்தஅமைப்புக்கள், அல்லது குரல் கொடுக்ககூடிய அமைப்புக்கள்  மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இதுவொரு பாரிய பிரச்சினையாகும், இதனால் இங்குள்ளமக்கள் பிரச்சினைகள் வெளியிடங்களுக்கோ, அல்லது சம்மந்தப்பட்டவர்களுக்கோ கொண்டுசெல்லப்படுவதில்லை. எனவே இச்சிந்தனையாளர் வட்டத்தில் இவ்வாறான பிரச்சினைகள் பற்றிகலந்துரையாடி அவற்றைஅ ரசு, அரசியல்வாதிகள்,  அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளைகாணும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து டொக்ரர் சத்தியமூர்த்தி, வண பிதா டானியல், சின்மியா மிசன் சுவாமி சிவேந்திரசைத்தன்ய, திருமதி அருட்சோதி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

மக்கள் சிந்தனைக் களத்தின் பிரதான இலக்கானது சமூகப் பிரச்சினைகள், பண்பாட்டு நெருக்கடிகள், நிர்வாக ஒழுங்கீனங்கள் அல்லது முறைகேடு, அதிகார துஸ்பிரயோகம், ஊழல், இயற்கை வளச் சிதைப்பு போன்றவற்றுக்கெல்லாம் எதிராக குரல் கொடுப்பது என அறிய முடிகிறது. அதேவேளை  கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், தொழிற்துறை போன்றவற்றில் ஆக்கபூர்வமான நிலைமைகளை உருவாக்குவதற்கு முயற்சிப்பது. தூண்டலாகச் செயற்படுவது என்பதாகும்.

இது வரவேற்க வேண்டிய ஒன்று. உண்மையில் இந்த மாதிரி பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டிய அரசியல் அதிகாரத் தரப்புகள் சரியான முறையில் செயற்படுமாக இருந்தால் இதில் பாதிப்பிரச்சினை சுலபமாகத்தீர்ந்து விடும். மக்களுக்கும் சுமைகளும் வலிகளும் இல்லை. அல்லது பிற பொது அமைப்புகள் இவற்றைக்குறித்து தமது குரலைக் கடந்த காலத்தில் உயர்த்தியிருக்கலாம். அப்படி எதுவும் நடைபெறவில்லை. அல்லது அந்தத் தன்மை குறைந்து விட்டது.

எனவேதான் இந்தப் பிரச்சினைகளைப் பற்றி சிந்தனைக் களத்தில் கூடி ஆராய்ந்து, தகவல்களைத் திரட்டி உரியதரப்புகளுடன் அணுகிப் பிரச்சினைகளைப் பேச முற்படுகிறது சிந்தனைக்களம். அப்படிப் பேசுவதன் மூலம் முடிந்தளவுக்கு இந்த விடயங்களில் முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் உருவாக்க முற்படுகிறது.

அதேவேளை எப்போதும் எந்தத் தரப்பின் மீதும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் மட்டும் முன்வைத்துக் கொண்டிருக்காமல், அந்தத்தரப்புகளின் நல்ல செயற்பாடுகளைப் பொது வெளியில் பாராட்டி ஊக்கப்படுத்துவமும் சிந்தனைக் களத்தின் நோக்கமாகும் என்று விளக்குகிறார் சிந்தனைக் களத்தின் உறுப்பினர் ஒருவர்.

அவர் மேலும் குறிப்பிடும்பொழுது, “இது ஒரு அரசியல் கட்சியோ அமைப்போ கிடையாது. மட்டுமல்ல, அரசியல் சாராத, அரசியலுக்கு அப்பாலான, அரசியல் கலப்புகள், சார்புகள் அற்ற ஒரு அமைப்பு. இந்த அமைப்பை எவரும் எந்த அரசியல் தேவைகளுக்கும் நோக்கங்களுக்கும் பயன்படுத்தக் கூடாது. அப்படி எந்த உறுப்பினர்களும் செயற்படவும் முடியாது. ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் முழுமையான சுயாதீனம் உள்ளது. அனைவரும் தமது கருத்துகளை முன்வைப்பதற்கு ஒவ்வொரு சந்திப்பிலும் இடமுண்டு. அவ்வாறு அனைவரும் தமது கருத்துகளைப் பகிர்வது அவசியமாகும். அப்பொழுதுதான் பொது அபிப்பிராயங்கள் எவ்வாறு உள்ளன என்பதை அறிவதுடன் உரிய ஜனநாயகப் பண்பை நாம் கடைப்பிடிக்கக்கூடியதாகவும் இருக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு இடமளிப்பதும் மதிப்பளிப்பதும் நமது வாழ்க்கை முறையாக மாறுவதற்கு சிந்தனைக்களம் ஒரு மாதிரியான அமைப்பாகும்.

“இது தன்னுடைய செயற்பாட்டின் மூலமாக முற்று முழுதான மக்கள் நலன் சார்ந்த அமைப்பாக எதிர்காலத்தில் தன்னை அடையாளப்படுத்தும். குரலற்ற மக்களின் குரலாக ஒலிப்பதே இதனுடைய அடையாளம்” என்றார்.

இப்படி ஒரு அமைப்பு இவ்வாறான குணாம்சத்தோடும் நிலைப்பாட்டோடும் செயற்படுவது இன்றைய நாளில் அபூர்வம். ஒன்றில் இவ்வாறான அமைப்புகள் குருவிச்சையைப்போல இன்னொன்றில் ஒட்டிக் கொண்டிருக்கும். அல்லது, அமைப்பு என்ற இவ்வாறான விருட்சங்களில் அரசியல்வாதிகளும் கட்சிகளும் குருவிச்சையைப்போல ஒட்டிக்கொண்டு அவற்றின் சத்தையும் சாரத்தையும் உறிஞ்சி விடும். இதைக் கடந்து தன்னைத்தனித்துவமாக நிலை நிறுத்த முனைவது முக்கியமான ஒன்றே. அதுவும் வித்தியாசமான தனது செயற்பாடுகளின் மூலமாக.

மக்கள் சிந்தனைக் களம் கடந்த காலத்தில் முன்னெடுத்த சில பணிகளைப் பற்றியும் தெரிவித்தது. போருக்குப் பிந்திய சூழலில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டங்களின் நடைமுறை மற்றும் குறைபாடுகள், மக்கள் அபிப்பிராயங்களைத் திரட்டி, கரைச்சிப் பிரதேச செயலாளருடன் பேச்சுகள் நடத்தியது.

இதனைக் கவனத்திற் கொண்ட பிரதேச செயலகம் உடனடியாகவே இதைக்குறித்து நடவடிக்கையை மேற்கொண்டது. அரச மற்றும் பிரதேச செயலகத்தின் மூலம் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட வீடுகளில் ஆட்களற்ற வீடுகளைக் கணக்கிட்டு அங்கே குடியிருப்பாளர்களை குடியமருமாறு அறிவித்தல் விடுத்தது. இனிமேற் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பயனாளிகள் தெரிவு நடக்கும் என உறுதியளிக்கப்பட்டது. காணியற்ற மக்களுக்கான காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் அத்துமீறிய குடியிருப்புகள் தொடர்பான கவனமும் கொள்ளப்பட்டது.

இதைவிட கடந்த காலத்தில் கல்வி, மருத்துவம், இயற்கை வளச் சிதைப்பு, வறுமைக்கான காரணங்கள், வறுமை ஒழிப்புக்கான திட்டங்கள், தொழில்வாய்ப்பு, இளைய தலைமுறையினர் எதிர்நோக்குகின்ற சவால்கள், சுயதொழில் முயற்சிகள், சந்தை மற்றும் பொது இடங்களில் பராமரிப்பு, வெள்ள அனர்த்தம், விவசாயிகளின் நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகள், அத்துமீறிய குடியிருப்புகளின் சிக்கல்கள் எனப் பல பொருள்களில் ஆய்வுகளைச் செய்திருக்கிறது. சில விடயங்களைக் குறித்து உரிய தரப்புகளுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுமுள்ளது.

அத்துடன், பிற நாட்டு கல்வி பொருளாதார வளர்ச்சிகளைப் பற்றிய அனுபவப் பகிர்தல்களும் புதியன பற்றிய சிந்திப்புகளும் நிகழ்ந்துள்ளன.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் பொதுவாழ்வில் ஈடுபடுவதும் ஒரு மணி நேரத்தைப் பொது வாழ்வுக்காகச் செலவழிப்பது என்பதும் மிகவும் கடினமானது. பொது நோக்குடைய நிறுவனங்களும் பொது அமைப்புகளும் உடைந்தும் செயழிழந்தும் வருவதே இன்றைய யதார்த்தம்.

இவ்வாறான நிலையில் குரலற்ற மக்களின் குரலாக ஒலிப்பதும் செயற்படுவதும் முக்கியமானது. அதுவும் போரினால் பெரும் பாதிப்பைச் சந்தித்த கிளிநொச்சி மாவட்டத்தில் உருவாகியிருக்கும் இந்த அமைப்புக்கு எதிர்காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமுண்டு. ஆனால் அதற்கு ஏற்றமாதிரிச் சுயாதீனமாகவும் வினைத்திறனோடும் தொடர்ச்சி அறாமலும் செயற்பட வேண்டும்.

இன்றைய வாழ்க்கை முறையில் இது மிகச் சவாலானது. அதுவும் மலினமான அரசியல் நோக்கங்கள், ஆதாயங்கள், பதவி அதிகாரம் எதுவுமில்லாமல் சக மனிதரின் மீது அன்பும் அக்கறையும் கொண்டு, அவர்களுடைய நலனில் அக்கறையோடு செயற்படுவதென்பது இலகுவானதல்ல.

போரினால் பாதிக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்குள்ளான சமூகங்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசத்தில் அந்த மக்களுடைய உணர்வோடும் வாழ்வோடும் இணைந்து வாழ்வது மதிப்புக்குரியதே. சிந்தனைக்களத்தின் சுயாதீனத்தன்மையும் வினைத்திறன் செயற்பாடுகளுமே அதனுடைய எதிர்கால அடையாளம்.

ஒரு விதையிலிருந்தே விருட்சம். ஒவ்வொரு விருட்சமும் இணைந்தே காடு. அந்தக் காடே மழையைத் தருகிறது. பசுமையைத் தக்க வைத்திருக்கிறது. சூழலைக் கனிய வைத்து வளமாக்குகிறது.

Share:

Author: theneeweb