போலித் தேசியவாதத்திற்குள் அமிழ்ந்துசெல்லும் மக்களின் அவலங்கள். ( பகுதி 2)

 

வி.சிவலிங்கம்—

 

வாசகர்களே!

வடபகுதிநிலவரங்கள் தொடர்பாக மேலும ;எனது அவதானிப்புகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். போரும் அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளும் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் விபரிக்க முடியாதவை. இவற்றைப் பலபரிமாணங்களில் பார்க்கமுடியும் என்றபோதிலும் அவற்றில் சிலவற்றையாவது தற்போது அவதானிக்கலாம். 30 வருடகாலப் போர் சமூகத்தில் பல ஆழமான வடுக்களைவிட்டுச் சென்றபோதிலும், சில ஆழமான சமூகமாற்றங்கள் ஏற்பட்டு வருவதற்கான அடித்தளங்களும் காணப்படுவதை நாம் ஏற்றாகவேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணசமூகத்தில் புரையோடிக் காணப்பட்டசாதிப் பிரச்சனை அல்லது பொருளாதாரரீதியாக ஒடுக்கப்பட் மக்கள் மத்தியில் மிகவும் காத்திரமான விழிப்புணர்வு எழுந்துள்ளது மகிழ்ச்சிதருகிறது. போர்க் காலத்திலும், அதன் பின்னரும் தமிழ்த் தேசியவாதத்தின் பாதுகாவலர்களாக தம்மை அடையாளப்படுத்திய சமூகப் பிரிவினர்தமது பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து சென்று புதிய வாழ்விடங்களை அமைத்தபோது அம் மண்ணின் மைந்தர்களான ஒடுக்கப்பட்ட மக்களே அந்த நிலங்களிலே வாழ்ந்தார்கள். போரை நடத்துவதற்கான ஆளணியையும் வழங்கினார்கள். இவைஅந்த மக்களுக்குப் பலமான அனுபவத்தினையும், பிணைப்பின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.
இதன் காரணமாக தமது பலத்தை அதிகரிக்கும் வகையில் சகலபிரதேசங்களிலும் குழுக்களை அமைத்துச் செயற்பட்டு வருகின்றனர். இவற்றை வட்டுக்கோட்டை, காரைநகர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அம் மைந்தர்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் மத்தியில் காணப்பட்ட ம்பிக்கைகள் உற்சாகத்தைத் தருவதாகஅமைந்தது. குறிப்பாக இந்தமக்கள் சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் தமது எதிர்காலத்தை நோக்கிச் செல்வது போர் தந்த அனுபவமே என எண்ணுகிறேன்.

காலம் காலமாக பொருளாதார, சமூகஅடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது பலத்தினை தற்போது உணர்கிறார்கள். அவர்கள் பின்வருமாறு தம்மை அறிமுகம் செய்கிறார்கள்.
ஏளியவரை வலிமையுள்ளோர் வாட்டுவதும்
அப்பாவிகளை தந்திரசாலிகள் ஏமாற்றுவதும்
பாமரரைப் படித்தவர் பகடையாடுவதும்
தொழிலாளியை முதலாளி உறிஞ்சுவதும்
ஏழைகளின் வாழ்வைப் பணக்காரன் சீண்டிப் பார்ப்பதும்
ஆறியாமையை அரசியல்வாதி பயன்படுத்துவதும்
நிற்கதியானவர் வாழ்வைசில தரகர் ஏலம்போடுவதும்
மறைந்தும், மறையாதிருந்தும் இல்லாது போலிருக்கும் மனிதபாகுபாடு
எனஅவர்களதுபிரச்சாரம் ஆரம்பிக்கிறது. இவற்றால்
– மனிதனிடையேமனிதன் தோற்றுப் போவது எதுவரைக்கும்?
– எம்மை நாமே அறிந்துகொள்ளாதவரைக்குமா?
– எம் திறனை நாம் புரிந்து கொள்ளாதவரைக்குமா?

– எமது அறியாமைதான் எம்மைக் கீழே தள்ளிவிட்டுமற்றைய மனிதன் ஏறிச் செல்கிறான் எனில் அவர்க்கெல்லாம் நாம் ஏணியாய் இருப்பதுதான் எம் வாழ்வா?

என்ற அடிப்படை மனிதநேயக் கேள்விகளுடன் தமதுமக்களிடம் செல்கிறார்கள். தமிழ் நாட்டில் பெரியார் பகுத்தறிவு இயக்கத்தை ஆரம்பித்தபோது எழுப்பிய கேள்விகளை ஒத்ததாகவே இவை உள்ளன. தமது சக மக்களின் அறியாமையை அறிவின் துணையோடு சாடுகிறார்கள். இம் மக்களின் கணிசமான தொகையினர் கல்விஅறிவில் முன்னேறியுள்ளனர். அரசபதவிகளையும் எட்டியுள்ளனர். பொருளாதாரரீதியிலும் வலிமைபெற்று வருகின்றனர்.

இந்த வளர்ச்சி ஏற்கெனவே காணப்படும் பிற்போக்கு சமூகக் கட்டுமானங்களுக்குச் சவாலாக இருப்பதை அன்றாடஉரையாடல்களின் போது அடையாளம் காணமுடிகிறது. பொதுவான உரையாடல்களின் போது வெளிப்படும் ஏக்கங்கள் இதனை உணர்த்துகின்றன. எனது நண்பர்கள், உறவினர்கள் எவ்வித கிலேசமுமின்ற சாதிப் பிரச்சனைகள் தொடர்பாக வளியிடும் கருத்துக்கள் சமூகமாற்றம் ஒன்றின் தாக்கத்தைஉணர்த்துகின்றன. இங்கு ஆலயங்கள் அதிகரித்து வேளாவேளைக்குப் பூஜைகள் நடைபெறுகின்றனவே தவிர அழுக்குகளால் நிறைந்துள்ள மனிதமனங்களைக் குறைந்தபட்ச அளவிலாயினும் மாற்றுவதற்கான எந்த முயற்சிகளும் இல்லை. சடங்குகளும், சம்பிரதாயங்களும் பணம் பிடுங்கும் நோக்கில் அதிகரித்துள்ளன. அனுமாருக்குக் கோவில் இலங்கையில் இருந்ததில்லை. தற்போது இணுவில் என்ற இடத்தில் பாரியசிலையுடன் கோவில் உள்ளது. வருமானத்தின் அளவுகோவில்கள், வீடுகளின் பிரமாண்டங்களால் உணர்த்தப்படுகிறது. ஆனால் இவர்களின் கவனங்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகளை நோக்கி ஏன் செல்லவில்லை? சமூகத்தில் ஓர் பாரதூரமான நோய் இருப்பதை உணரவில்லையா? அரசியல்வாதி தேசியம் பற்றிச் சதா பேசுவது இவற்றைமறைக்கவா? அல்ல துதெரியாது என்று கொள்வதா?

மேற்குநாடுகளில் நிற,மதபேதங்கள் மிகவும் பின்வாங்கி மறைந்து செயற்படுவதைநாம் காண்கிறோம். ஏனெனில் தம்மை நாகரீகத்தில் வளர்ச்சி அடைந்தவர்கள் என அழைத்தபடி இப் பிற்போக்குச் சிந்தனைகளைப் பகிரங்கமாக வாதிக்க அல்லது செயற்படுத்தமுடியாத நிலைகாணப்படுவது போல சாதிவிடயங்கள் மிகவும் கீழ்க் குரலை நோக்கிச் செல்கின்றன. இதன் அரத்தம் இப் பிரச்சனைகள் அருகிச் செல்கின்றன என்பதைவிட உயர்சாதிச் சிந்தனைகளுக்கான தளங்கள் குறைவடைந்து செல்கிறது எனலாம்.

இப் பிரச்சனை தொடர்பாக நிலம் எனது கவனத்தில் கிடைத்தது. குறிப்பாக நலிவடைந்த சமூகத்தின் ஒருபிரிவினர் தற்போது சற்று மேலெழுந்துள்ள நிலையில் தமக்கெனச் சொந்தநிலங்களை வாங்குகின்றனர். நிலவிற்பனைச் சந்தையில் சாதி அடையாளங்கள் முன்னர் போல் வெளிப்படையாக இல்லை. விற்பனையாளன் கொள்வனவு செய்பவர் பற்றிக் கவலை கொள்வதில்லை. பணமே பிரதானபாகம் வகிக்கிறது. விற்பனையாளன் அதாவது வெளிநாட்டில் வாழ்பவர் அல்லது பெரும் நகரங்களில் வாழ்வை ஆரம்பித்தஒருவர் தனது கிராமிய அடையாளங்களை இழக்கத் தயாராக இருப்பது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆகவே நிலம் கைமாறுகிறது. அயலில் நிலம் வைத்திருப்பவர் காலப் போக்கில் புதியஉரிமையாளர் யார்? என்பதை அறிகிறார். ஆனால் அவரால் முன்னர் போல் உரத்துக் கூற முடியவில்லை. தனது ஆதங்கங்களை மனதில் புதைத்து வாய்ப்புக் கிடைத்த இடங்களில் கொட்டித் தீர்க்கிறார்.
இதற்குப் பிரதான காரணம் பல இடங்களில் காலம் காலமாக ஒடுக்குமுறைக்குள் வாழ்ந்த மக்கள் தற்போது அவர்களது வாழ்விடங்களில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். தமது பலத்தினை நன்கு உணர்ந்துள்ளனர். விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். அவர்களது வாக்குகள் அல்லது ஆதரவு தற்போது உயர்சாதியினருக்குத் தேவையாகிறது. இதனால் காலம் காலமாகசாதி,குலம் என்றகாரணங்களால் கவனிப்பாரற்றுக் கிடந்தசிலவீதிகள் திருத்தப்படுகின்றன. மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. விட்டுக் கொடாத பலமும்,சகவாழ்வும் பலனளிக்கிறது. எனவே அவர்களும் அடக்கி வாசிக்கிறார்கள்.

வடபகுதியில் காலம்காலமாக நிலமற்று உயர்சாதிக்காரரின் தயவில் அவர்களது நிலங்களில் வாழ்ந்த மக்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்க வருகின்றனர். குறிப்பிட்ட நிலத்தில் குறிப்பிட்ட காலத்திற்குத் தொடர்ச்சியாக வாழ்ந்த குடியிருப்பாளர்கள் அந்த நிலங்களுக்கு உரித்துக் கோரசட்டம் வழி செய்துள்ளது. இதனால் நிலச் சொந்தக்காரர்கள் தமது நிலங்களிலிருந்து அவர்களை விரட்டுகின்றனர். அரசஅதிகாரிகளும், பொலிசாரும் நிலஉரிமையாளர்களின் பக்கம் சாய்கின்றனர். பணம்,அடாவடித்தனம்,அதிகாரம் போன்றன அம் மக்களை மிகமோசமான நிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறும் நிலைக்குத் தள்ளுகிறது. வடபகுதியில் பலவீடுகளில் குடியிருப்பாளர்கள் இல்லை. மறு பக்கத்தில் வீடுகளற்ற மக்கள் பலஆயிரம். இங்குசட்டம் தொழிற்படுவதில்லை. அரசியல்வாதிகள் குழப்பமடைகின்றனர். சண்டித்தனமே தீர்மானிக்கிறது.

இதேநிலையே நிலங்களிலும் காணப்படுகிறது. ராணுவத்தினர் சில இடங்களில் நிலங்களை வழங்கியுள்ளனர். குடியிருப்புகளையும் கட்டிக் கொடுத்துள்ளனர். ஆனால் இவற்றை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் பலராணுவமுகாம்களுக்கான பாதுகாப்பு அரண்களாகவே உள்ளன. இக் குடியிருப்புகளுக்கு அருகாமையில் எந்த வேலைவாய்ப்பு வசதிகளும் இல்லை. பலமைல்களுக்கு அப்பால் செல்லவேண்டியுள்ளது. இல்லையேல் அக் குடியிருப்பகள் ராணுவத்தின் விவசாயநிலங்களுக்கு அண்மையாக உள்ளன. ஊதாரணமாக மாவிட்டபுரம் முருகன் ஆலயத்தின் முன்னால் உள்ள வீதி கீரிமலையை நோக்கிச் செல்கிறது. அந்தவீதியின் வலப் பக்கமாக அதாவது முன்னைய சீமெந்துத் தொழிற்சாலையின் சுண்ணாம்;புக் கற்கள் அகழ்ந்தகுழிகள் ஆழமாக உள்னன. அதன் பின்னால் கடற்கரை ஓரமாக ராணுவக் குடியிருப்புகள் உள்ளன. இதற்கான அரண்களே இவைகள்.

அரசியல்வாதிகள் மாகாணசபைக்குக் காணி அதிகாரம், பொலீஸ் அதிகாரம் தேவை என்கின்றனர். இந்த அதிகாரங்கள் கிடைத்தாலும் இந்தமக்களுக்குநீதிகிடைக்குமா? அதிகாரத்தைச் சுவைப்பவர்கள் இம் மக்களின் துன்பங்களை நீக்குவார்களா? என்பதை வாசகனிடம் விடுகிறேன்.

இங்கு செயற்படும் பிரதேசசபைகள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் என நாம் கருதினாலும்,அல்லது சமுர்த்தி; நிறுவனமாயினும் அவற்றின் அதிகாரிகளின் செயற்பாடும்,அங்கத்தவர்களின் தொழிற்பாடும் மக்களின் எஜமானர்களாகக் கருதிச் செயற்படுவதாகவே உள்ளது. ஏனெனில் போர்க் காலத்திலும்,அதன் பின்னரும் இந்த அமைப்புகள் மூலமாகவே மக்களுக்கான கொடுப்பனவுகள் ,உலர் உணவுகள் வழங்கப்பட்டன. இவை மிகவும் குறைந்தஅளவில் வழங்கப்பட்டதால் அதிகாரிகளின் தயவு அதிகம் தேவைப்பட்டது. இந்தநிலை தொடர்ந்து நீடித்தமையால் அவர்களும் ஆதிக்கம் மிக்கவர்களாக தற்போதும் காணப்படுகின்றனர். அதுமட்டுமல்ல ,வங்கிகளில் கடன் பெறுவதானாலும் இவர்களின் அனுசரணை இல்லாமல் பெறமுடியாது.

இங்குள்ள அரசியல் என்பது ஓர் வலைப் பின்னல் போல் உள்ளது. மக்கள் சுயமாக அரசியல் போக்கை உணர்ந்து அதன் அடிப்படையில் சுய தீர்மானங்களை மேற்கொண்டு வாக்கைச் செலுத்துகிறார்கள் எனக் கருதமுடியவில்லை. கடந்தகாலங்களில் குடும்பங்கள் கட்சிகளுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பை வைத்திருந்தன. அதன் அடிப்படையில் வாக்குகளைச் செலுத்தினர். அவ்வப்போது கட்சிமாநாடுகளும் நடந்தன. கூட்டங்களுக்கு மக்களே செலவுகளையும் மேற்கொண்டனர். இதனால் கட்சி என்பது ஜனநாயக அரசியலின் முக்கியபகுதியாக அமைந்தது.

தற்போது அரசியல் என்பது கட்சியானது எந்தப் பிரிவினரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ அப் பிரிவினரே அதிக பணத்தை வழங்குகின்றனர். அவர்களின் நலன்களையே பாதுகாக்கின்றனர். சமான்யமக்கள் தேசியவார்த்தை அலங்காரங்களால் மயக்கநிலைக்குச் செல்கின்றனர். இதனால் சாமான்யமக்கள் வெறுமனே வாக்குப் போடும் யந்திரமாக உள்ளனர். தற்போது காணப்படும் கல்விநிலமைகள் இந்த அவலங்களைக் காலப் போக்கில் நீக்கஉதவுமா? என்பதும் சந்தேகமாகவே உள்ளது. ஊதாரணமாக மனிதன் உயிர் வாழவேண்டுமெனில் உணவு அவசியம். மனித இனம் தோன்றிய ஆதாம், ஏவாள் காலத்தில் அதிகஉணவும், சிலமனிதர்களும் வாழ்ந்தனர். ஆனால் தற்போது மனிதர்களின் தொகை அதிகரிப்புக் காரணமாக உணவுப் பற்றாக்குறை உள்ளது. அவ்வாறெனில் இன்றையமனிதன் உயிர்வாழ்வதெனில் உற்பத்தி அவசியம். உற்பத்தி அவசியம் எனில் முதலீடு அவசியம். முதலீடு இல்லாதநிலையில் உற்பத்தி எப்படி ஏற்படும்?

இங்குஅதிக அளவு பணப்புழக்கம் உள்ளது. கொடுக்கல், வாங்கல்கள் லட்சக் கணக்கில் பேசப்படுகின்றன. உற்பத்தி இல்லாத நாட்டில் அதிக பணநோட்டுகள் புழக்கத்தில் இருந்தும் பயன் என்ன? பணவீக்கம் குறித்து யாரும் பேசுவதாக இல்லை. வங்கியில் பலர் கோடிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். நாணயமாற்றுவிகிதம் மாற்றமடையும் போது ஏற்றுமத pவருமானம் இல்லாத நாட்டின் பணத்தின் பெறுமதிமிகவும் குறைவடைகிறது. முன்னர் 1 கிலோ தேயிலை ஏற்றுமதி மூலம் 500 ருபா வருமானம் கிடைத்திருப்பின் தற்போது 2 கிலோ தேயிலை ஏற்றுமதிசெய்தே அதே500 ருபா வருமானம் பெறவேண்டும். அதேபோலவே 1 கிலோ அரசியை வாங்க 200 ருபா தேவை எனில் பணவீக்கம் காரணமாக 500 ருபா கொடுத்தே அதே 1 கிலோ அரிசியை வாங்கவேண்டும்.

இதுதான் நிலமைஎனில் வங்கியில் வைக்கும் கோடிக் கணக்கான ருபாய்கள் தினமும் பெறுமதி குறைந்து செல்வதைமக்கள் உணர்வதில்லை. மருந்துக் கடையில் மருந்து வாங்கச ;செல்லும் ஒருவர் ஒரேமருந்தின் விலை அடிக்கடி மாறுவதைக் கண்டு சினம் கொள்கிறார். நாணயமாற்று விகிதம் தினமும் மாறுவதால் விலை மாறுவதாக கடைக்காரர் விளக்கம் அளிக்கிறார். ஆனால் நோயாளி மருந்துக் கடைக்காரரை நொந்து கொள்கிறார். இங்கு பலருக்கு நீரிழிவுவியாதி உள்ளது. மாதாமாதம் மருந்து வில்லைகளை தனியார் மருந்துக் கடையில் அவர் வாங்கியே தீரவேண்டும். அவரது மருந்துச் செலவு மாதாமாதம் உயர்கிறது. ஆனால் அவரது வருமானத்தில் மாற்றம் இல்லை. படிப்படியாக மருந்தைக் குறைத்து நோயின் கொடுமையை அதிகரிக்கிறார்.
இது நிரந்தர வருமானத்தைப் பெறுபவரின் கதி எனில் ஓர் கூலிஉழைப்பாளியின் முடிவு என்ன? யார் அதிகளவில் நோயால் பாதிக்கப்படுகிறான்? அவனின் கூலி உயரவில்லை எனில் அவனின் எதிர்காலம் மரணத்தை நோக்கிய பாதையே தவிர்க்கமுடியாத வழியாகிறது. இதுவே இன்று வைத்தியசாலைகளின் தெரிவாகஉள்ளது பொதுவைத்தியசாலைகளில் மருந்து இல்லை. வைத்தியர் குறிப்பிட்ட மருந்துச்சாலையில் வாங்கும்படி நோயாளியைப் பணிக்கிறார். மருந்துச்சாலைக்கும், வைத்தியருக்கும் எண்ணியதுக pடைக்கிறது. நோயாளிக்குக் கிடைத்துள்ளதா?

எனது பல்வேறு தரப்பினரின் உரையாடலின்போது யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பொதுவைத்தியசாலையின் பிரதான இயக்குனரான வைத்தியர் ஒருவர் குறித்துச் சிலநண்பர்கள் சிலாகித்துப் பேசினர். கூட்டமொன்றில் அவ் வைத்தியரின் உரையையும் கேட்கநேர்ந்தது. ஒரு வைத்தியரிடமிருந்து அவ்வாறான உரையை ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது. அவர் அரசநிறுவனங்களில் நிலவும் ஊழல் குறித்து மிகவும் கடுமையாக உரைத்தார். இந்தவைத்தியர் மிகவும் இளைஞர். அவர் தனது வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்கள் தமது வேலை நேரங்களில் தனியார் வைத்தியசாலைகளுக்குச் சென்று வைத்தியம் செய்வதைத் தடுத்திருந்தார் இதனால் அவர் பற்றிப் பலர் நல்லஅபிப்பிராயங்களை வெளியிட்டநிலையில்தான் நான் அவரின் உரையை நேரடியாகக் கேட்டேன். மனம் மிகவும் பெருமையடைந்தது. தனியாகச் சந்தித்து அவரது நேர்மையைப் பாராட்டிக் கூறினேன். இன்றுவரை அவர் அங்குகடமைபுரிவது ஆறுதல் தருகிறது.


இன்றுநாட்டில் நிலவும் நவ தாராளவாத பொருளாதாரம் மக்களின் வாழ்வை இந்தநிலைக்குத் தள்ளியிருப்பதை அரசியல்வாதிகள் புரிந்தும் மௌனமாக இருப்பது பல கள்விகளை எழுப்புகிறது. இன்று சமூகம் என்பதுஉள்ளவர், இல்லாதவர் என்ற இரு முகாம்களாகப் பிளவுபட்டுச் செல்கிறது. உற்பத்தியாளன் தனது உற்பத்தியை நரடியாகச் சந்தையில் விற்கமுடிவதில்லை. இடையில் தரகர் ஒருவர் வருகிறார். இவர் சந்தை அமைந்துள்ள பிரதேசபையினால் நியமிக்கப்பட்டவராக உள்ளார். இதனால் உற்பத்தியாளன் தனதுஉற்பத்தியின் முழுப் பெறுமதியையும் பெறமுடிவதில்லை. இவ்வாறு சகல கொடுக்கல்,வாங்கல்களிலும் தரகர்கள் உள்ளனர். இவர்களே மிகவும் பலம் வாய்ந்த பிரிவினராக உள்ளனர். அரசியல்வாதியும் இந்த இடைத் தரகரிலேயே தங்கிச் செயற்படுகிறார். இங்குவர்த்தகர், தரகர்,ஊடகங்கள், அரசியல்வாதி போன்றோரிடையே நெருக்கமான உறவு உள்ளது. இவை மக்களிடையே தெளிவான பிளவுகளை ஏற்படுத்துகிறது.
ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல முதலீட்டுக்கான வாய்ப்புகள் அல்லது முயற்சிகள் இல்லாதநிலையில் வேலைவாய்ப்பு இல்லை. வேலை இல்லையேல் வருமானம் இல்லை. வருமானம் இல்லையேல் வாழ்வு இல்லை. அவ்வாறானால் இன்றைய வாழ்வை எவ்வாறு வர்ணிப்பது? ‘குமிழ் பொருளாதாரம்’என பொருளியலாளர்கள் வர்ணிக்கின்றனர். அதாவது கிடைக்கும் வருவாயை உற்பத்தியில் முதலீடு செய்யாது நுகர்ச்சியில் செலவிடும்போது குறிப்பாக வெளிநாட்டுப் பணம் நுகர்ச்சியை அதிகரிக்க உதவலாம். இதனால் வாழ்க்கைத் தரம், வாழ்வு முறை என்பவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் வெளிநாட்டுப் பணம் வற்றும்போது யாவும் உடைந்துவிடும். எனவேதான் குமிழ் பொருளாதாரம் என்கின்றனர்.
இம் மாதிரியான நிலையை நோக்கியே யாழ்ப்பாணசமூகம் தூக்கத்தில் நடப்பதுபோலச் செல்கிறது. கூறுபட்டுச் செல்லும் இச் சமூகப் போக்கு இறைமை ,சுயாட்சி,ஒருமித்தநாடு,புதியஅரசியல் அமைப்பு என்ற இனிப்புத் தீனிகளால் மறைக்கப்பட்டுச் செல்வது கவலை தருகிறது.

Share:

Author: theneeweb