2009 – 2019 : துருப்பிடித்துப்போன தமிழ்அரசியல்

      கருணாகரன்—-

இன்னும் இரண்டு மாதங்களில் ( 2019 மே மாதத்துடன்) யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் நிறைவடையப்போகின்றன. அதாவது ஒரு தசாப்த காலம் முடிகிறது. தமிழ் அரசியலில் புலிகள் இல்லாமல் பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. தமிழ் மக்களின் அரசியலைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பத்து ஆண்டுகளாகத் தன்னுடைய பொறுப்பில் ஆண்டிருக்கிறது. இது தவிர, நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நல்லாட்சி அரசாங்கத்தோடு கூட்டமைப்பு சேர்ந்து பயணிக்கத் தொடங்கியும் நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன.

ஆகவே 2009 மேக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளை எதிர்ப்பு அரசியலிலும் (மகிந்த ராஜபக்ஸ காலத்தையது) 2015 ஜனவரிக்குப் பிந்திய காலத்தை (மைத்திரி – ரணில் விக்கிரமசிங்க காலத்தையது) இணக்க அரசியலிலும் கழித்திருக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.

தலைமைத்துவ மாற்றங்களோ கட்டமைப்பு மாற்றங்களோ ஏற்படாமல் ஒரே தலைமையின் கீழ், ஒரே கட்டமைப்பின் மூலமாக மேற்கொள்ளப்படும் அரசியலே தொடர்கிறது.

அப்படியென்றால் தொடரும் நடவடிக்கைகள் பற்றிய பொறுப்பும் இந்த ஒரே தலைமைக்கும் ஒரே கட்டமைப்பாக இருப்போருக்குமே உரியது. இடையில் வேறு தலைமைகளும் வேறு விதமான கட்டமைப்பும் ஏற்பட்டிருந்தால் தொடரும் நடவடிக்கையில் மாறுபாடுகள், இடறுப்பாடுகள் நிகழ வாய்ப்பிருந்திருக்கும் என்றொரு வாதத்தை வைக்கலாம். இங்கே அதற்கான சந்தர்ப்பமே இல்லை.

ஆகவே யுத்தத்துக்குப் பிந்திய பத்தாண்டுகளைப் பற்றிய மதிப்பீட்டை நாம் செய்தே ஆக வேண்டும். அப்படித் தமிழ்ச்சமூகம் ஒரு சுய மதிப்பீட்டைச் செய்ய வேண்டியுள்ள கட்டம் இதுவாகும். ஏனென்றால் தமிழ்ச்சமூகம் தொடர்ந்து சந்தித்து வரும் நெருக்கடிகள் அத்தனையும் அப்படியேதான் உள்ளன. காலம் கடந்து கொண்டிருக்கிறதே தவிர, நிலைமையில் முன்னேற்றமே இல்லை. தமிழர்களுடைய காலில் இருந்து தலைவரை உள்ள அத்தனை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெறுவதற்கும் இந்தச் சுய மதிப்பீடு அவசியம். அப்பொழுதுதான் தொடர்ந்தும் இதே அரசியலை, இந்தத் தலைமைவத்துவத்தின் கீழ் முன்னெடுப்பதா? இதே கட்டமைப்பு இதற்கெல்லாம் உதவுமா? அல்லது வேறொரு தலைமைத்துவம் தேவையாக என்பதைக் கண்டுணரலாம்.

எவர் மீதும் எந்த வகையான காழ்ப்போ எதிர்ப்புணர்வோ இல்லாமல் வரலாற்றுப் பிரக்ஞையோடும் மக்கள் மீதான பற்றோடும் அரசியலை அறிவுபூர்வமாக விளங்கக் கூடிய திறனோடும் இதைச் செய்ய வேணும். அதுவே சமனிலையுடைய ஆய்வாகவும் மதிப்பீடாகவும் இருக்கும். இதில் முக்கியமாகத் தொழிற்பட வேண்டியது, அறிவுபர்வமான அணுகுமுறையே.

அப்படியென்றால் அத்தகைய சுய ஆய்வையும் (பரிசீலனைகளையும்) பத்தாண்டுகால மதிப்பீட்டையும் யார் செய்வது? எப்படி அதை முன்னெடுப்பது? என்ற கேள்விகள் எழுகின்றன.

ஏன் இந்தக் கேள்விகள் என்றால் அவ்வாறு சுயாதீனமாக ஒரு விசயத்தை அணுகும், ஆய்வு செய்யும், மதிப்பிடும் தரப்புகள் தமிழ்ச்சமூகத்திடம் துரதிருஸ்டவசமாக நலிந்தே இருக்கின்றன. ஏன் அப்படியான தரப்புகள் இல்லை என்றே சொல்ல முடியும். படித்த சமூகம் என்று தன்னைச் சொல்லிக் கொண்டாலும் (தன்னைப்பெருமிதமாக உணர்ந்தாலும்) தமிழ்ச்சமூகத்தின் யதார்த்த நிலை இதுதான். அப்படித்தான் எங்காவது ஒரு அமைப்போ அல்லது சிலரோ சுயாதீனமாக மதிப்பீடுகளைச் செய்ய முற்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அறிவும் தமிழர்களிடம் குறைவு. அவற்றைக் குறித்து குறைமதிப்பீடும் சந்தேகமும் தவறான கற்பிதங்களுமே உண்டு.

இதனால்தான் தமிழர்களிடத்தில் அரசியல், பொருளாதாரம், அறிவுத்துறை, சூழியல் உள்ளிட்ட எந்தத் துறையிலும் புலமைத்துவம் சார்ந்த நிறுவனங்கள் எதுவும் வளர்ச்சியடையவில்லை. அது சுயாதீனமாக இருந்தாலும் சரி, மாகாணசபை, உள்ளுராட்சி மன்றுகள், பல்கலைக்கழகங்கள் எதுவாயினும் சரி.

இந்தக் குறைபாடுதான் கடந்த எழுபது ஆண்டுகால அரசியல் பிரச்சினையைக் குறித்த மீள் பார்வைகளைக் கொடுக்க முடியாமல் இருப்பதற்கான காரணமாகும்.

முப்பதாண்டுகால ஆயுதப்போராட்டத்தின் சரி பிழைகளை மதிப்பிடவும் அது உண்டாக்கிய பெறுமானங்களை உணர்ந்து கொள்வதற்கும்கூட எத்தகைய மதிப்பீடுகளும் நம்மிடம் கிடையாது.

இதுவே அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பெரும் தியாகங்களைச் செய்தவர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் குறித்த பெறுமானத்தை உணராமல் செய்திருக்கிறது. இன்று முன்னாள் போராளிகள் என்ற அடையாளப்படுத்தலின்கீழ் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏறக்குறைய அநாதரவான நிலையில் கைவிடப்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டு, அந்த இடத்தில் போராட்டத்துக்கு வெளியே நின்றவர்கள் வந்து உட்காருவதற்கும் கடந்த காலம் பற்றிய மதிப்பீடுகளின்மையும் ஆய்வறிவற்ற தன்மையும் காரணமாகும்.

மட்டுமல்ல, யுத்தத்துக்குப் பிந்திய சூழலில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களுடைய பிரதேசங்களையும் மீளமைப்புச் செய்வதிலும் முறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் எதையும் தமிழ்ச்சமூகம் கொண்டிருக்கவில்லை. அரசாங்கம் உருவாக்கிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம், புனரமைப்பு, மீள் கட்டுமானங்களைத் தவிர, தமிழ்ச்சமூகத்தின் அடையாளங்கள் என்று சொல்லக்கூடிய செயற்பாடுகளோ சிந்தனைகளோ இல்லை. குறைந்த பட்சம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இடையீட்டைச்செய்யக் கூடிய அளவுக்குக் கூட தமிழ்ச்சமூகத்தினால் முடியவில்லை. அதாவது தமிழ் அரசியல் தலைமைகளாலும் தமிழ் அறிவுலகத்தினாலும் இயலவில்லை. அந்தளவுக்குப் பலவீனமாகியுள்ளது தமிழ்த்தரப்பு.

இந்த நிலை என்பது மிகப் பெரிய வீழ்ச்சியும் பின்னடைவுமாகும்.

இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர்ந்திருக்கிற தமிழர்களாலும் இதைச் செய்ய முடியவில்லை.

2009 பிற்பகுதியில் அல்லது 2010 முற்பகுதியில் என நினைக்கிறேன். போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய பொருளாதாரக் கட்டமானங்கள் என்ற சிந்தனையோடு ஒரு அணியினர் வந்திருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் இதைக்குறித்த சந்திப்பையும் ஆய்வரங்கொன்றையும் நடத்தியுமிருந்தனர். அன்றைய அரச தரப்பையும் வடக்குக் கிழக்கில் உள்ள அரசியல் செல்வாக்கினரையும் கூடச் சந்தித்துத் தமது முயற்சிகளைப் பற்றிப் பேசியிருந்தனர்.

ஆனால், அந்த முயற்சி அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. தடைக்கற்களும் இழுபறிகளும் பேரம் பேசல்களும் கப்பம் கோருதல்களும் இடை நுழைந்ததால் எல்லாமே கை விடுபட்டுப் போகும் நிலை உண்டானது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கூட இதைக்குறித்துச் சிந்திக்கவில்லை.

இப்படி எல்லாமே நடக்கவில்லை, சாத்தியப்படவில்லை என்ற நிலையில்தான் உள்ளன.

எனவே இனியும் தாமதிக்காமல் இந்தக் குறைபாடுகளை நிவர்த்திக்க வேண்டும். இந்த இடத்தில் மீளவும் நாம் நினைவிற் கொள்ள வேண்டியது, புலிகள் இல்லாமல் பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கைகளில் பத்தாண்டுகள் கழிந்துள்ளன. யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்திருக்கின்றன என்பதை.

ஆகவே ஒரு நொடிப்பொழுதேனும் வீணடிக்காமல் புதிய திசைகளை நோக்கித் தமிழர்கள் தமது சிறகுகளை விரிக்க வேண்டும்.

அப்படிச் சிறகு விரிப்பதற்கே இப்பொழுது சுயாதீனமான மதிப்பீட்டு அமைப்புகள் அல்லது ஆய்வு மையங்கள் தேவை.

ரு நீண்ட அரசியல் போராட்டத்தை நடத்திய மக்கள் வெறும் கையர்களாகவும் எந்தப் பக்கம் திரும்புவது, எப்படி முன்னோக்கிப் பயணிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பது என்பதும் எவ்வளவு கொடுமையானது!

இது தமிழ்ச்சமூகத்திடத்தில் மட்டுமுள்ள குறைபாடு என்றுமல்ல. முஸ்லிம்களிடத்திலும் சிங்களத்தரப்பிலும் இதே குறைபாடுகள்தான் காணப்படுகின்றன.

யுத்தத்திற்குப் பிந்திய அரசியல் சூழல், பொருளாதார வளர்ச்சி, ஜனநாயக மேம்பாடு, ஊடக சுதந்திரம் என எதிலும் பெரிய வளர்ச்சியோ மாற்றங்களோ ஏற்படவில்லை.

யுத்தத்திற்குப் பிந்திய ஒரு தசாப்தகாலத்தில் நாட்டில் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களோ நம்பிக்கைக்கான அடையாளங்களோ உருவாகவில்லை. மகிழ்ச்சிக்கான சமிக்ஞைகள் எதுவும் புலப்படவில்லை. கேள்விக்குறியின் முன்னே நாடும் மக்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.

விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டு செல்கிறது. யுத்தம் முடிந்து விட்டால் எல்லாமே சரியாகி விடும் என்று நம்பியிருந்த மக்களுக்கு யுத்தத்துக்குப் பிறகும் வாழ்க்கைச் சுமையின் அழுத்தம் நீடிக்கிறது என்றால்….?

அரசியல் தீர்வோ, அரசியலமைப்புத்திருத்தமோ நடைமுறையாக்கப்படவில்லை. அச்சமற்ற சூழல் கூட இன்னும் உருவாகவில்லை. ஊடகங்கள் சுயாதீனமாகச் செய்திகளை வெளியிட முடியாத நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது. எழுதப்படும் கட்டுரைகளை அப்படியே பிரசுரிக்க முடியாத நிலையில்தான் ஊடகப் பொறுப்பாளிகளும் ஊடகங்களும் உள்ளன.

படையினரின் கெடுபிடிகள் வெளிப்படையாகக் குறைந்திருந்தாலும் சனங்களின் இருப்பிடங்களில் இன்னும் படைப்பிரசன்னம் நீடித்துக் கொண்டேயிருக்கிறது. ஊர்களை விட்டுப்போகும் படைகள் காடுகளில் நிரம்புகிறார்கள்.

போதை வஸ்தும் ஊழலும் வன்முறைச் சூழலும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

சீமெந்தின் விலை நூற்றிப்பத்து ரூபாயினாலும் உருளைக் கிழக்கின் விலை, இருபது ரூபாயினாலும் ஒரே நாளில் அதிகரித்திருக்கிறது. கேட்டால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி அது என்கிறார்கள். அப்படியென்றால் இறக்குமதியை நிறுத்தி விட்டு அல்லது குறைத்து விட்டு சுய உற்பத்திக்கான ஊக்குவிப்புத்திட்டங்களை உருவாக்குங்கள் என்றால் அதற்குப் பதில் இல்லை.

அதாவது எதற்குமே தெளிவும் இல்லை. பதிலும் இல்லை.

எப்படியோ ஆட்சி நடக்கிறது. தலைவர்கள் நாடு முழுக்க, உலகம் முழுக்கச் சுற்றுகிறார்கள். சனங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கின்றனர். இதற்குள் இன்னொரு தேர்தல் அல்லது அடுத்தடுத்துத் தேர்தல்கள் வந்து போகவுள்ளன. ஒவ்வொரு தேர்தலுக்கும் செலவழிக்கப்படுகின்ற கோடிக்கணக்கான பணம் வேறு வீணாக – எந்த மாற்றமும் முன்னேற்றமும் இல்லாத அரசியலுக்காக வாரியிறைக்கப்படுகிறது.

இப்படியே இன்னொரு பத்தாண்டுகள் கடக்கப்போகிறதா?

அல்லது மாற்றணியின் வழியில் புதிய பயணம் தொடருமா?

Share:

Author: theneeweb