கண்டபடி வீசி எறியாதீர்கள்

வ.சிவராசா – யேர்மனி  —

நாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்களில் பல ரகங்கள் உண்டல்லவா. நமது வாழ்வியல் தேவைகளின் நாகரீக, கணனி, தொழில்நுட்ப வளர்ச்சியாலும் புதுப் புதுக் கண்டு பிடிப்புக்களாலும் நாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்களின் தொகையும் பன்மடங்காக அதிகரித்திருக்கின்றன. போத்தல், தகரடப்பா, பிளாஸ்ரிக், கடதாசி, பிளாஸ்ரிக்பை, நைலோன் நூல், பிளாஸ்ரிக் பெட்டி என நாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்களை நம்மில் பலர் கண்டபடி வெளியில் வீசி எறிவதால் நமக்குப் பல கேடுகள் வந்து சேர்கின்றன.

அதாவது நாம் பாவித்துவிட்டு இப்பொருட்களை வீதிகளிலும், நீர்நிலைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் போடுவதால் நமக்கு நாமே கெடுதல்களை வரவேற்றுக் கொள்ளுகின்றோம் என்பதை நாம் சிந்திக்கத் தவறுகின்றோம். நம் தாயகத்தில்தான் எதையும் எங்கேயும் எப்படியும் எறியலாம் என்று வாழ்ந்து பழக்கப்பட்ட நாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இப்படிச் செய்வதனால் சுற்றாடலைப் பாழாக்குவதுடன் இந்த நாட்டு மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்ளுகின்றோம்.

குறிப்பாகப் பிளாஸ்ரிப் பொருட்களால் இன்று உலகம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது. இந்தப் பொருட்களை நிலத்திலும் நீர் நிலைகளிலும் வீசி எறிவதனால் சுற்றுச்சூழலுக்கு அதிககெடுதல் ஏற்படுகின்றது. நீர்நிலைகளில் எறிவதால் நீர்நிலைவாழ் உயிரினங்களும் அழிந்து இறுதியில் மனிதரின் உணவுக்கே தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இதனால்தான் அனைத்து நாடுகளும் உலகசுற்றுச்சூழல் அமைப்பும் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவை முற்றுமுழுதாகப் பயன் அளிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்

உதாரணத்திற்கு டீசலால் பெற்றோலால் உலகம் மாசுபடுகின்றது என்று தெரிந்தும் டீசல் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. விமானங்கள் பறந்துகொண்டிருக்கின்றன. அப்படித்தான் இந்தப் பிளாஸ்ரிக் கொருட்களின் பாவனையை ஒழித்தோமா?..இல்லவே இல்லை. முற்றுமுழுதாக ஒழிக்காவிடினும் இன்று உலகில் பல நாடுகளில் இப்பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்.

மனிதவாழ்வின் சூழலுக்கு மனிதனே பங்கம் விளைவிக்கின்றான். அதாவது வீட்டில் சேரும் குப்பை கூழங்கள், பிளாஸ்ரிக் பொருட்கள், போத்தல்கள், தகரடப்பாக்கள் போன்ற பொருட்களை அவைக்குரிய இடங்களில் போட்டுவிடாமல் கண்டபடி வெளியே வீசி எறிகின்றான் மனிதன். இச்செயலானது

மனித வாழ்க்கைக்குக் கேடுவிளைவிக்கின்றது என்பதை உலக சுற்றாடல் தாபனம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றது.

உலகில் வருடாவருடம் 5.25 மில்லியன் தொன் அளவான பிளாஸ்ரிக் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் நைலோன் வகைகளை மனிதன் கடல்கள், குளங்கள், ஆறுகள், வாவிகள், நீர்ஓடைகளில் என வீசி எறிகின்றான் என்ற செய்தியும் கசப்பான விடையமாகும். இதனால் கோடிக்கணக்கான நீர் வாழ் உயிரினங்கள் தினமும் அழிந்து போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உதாரணத்திற்குச் சில பொருட்கள் எவ்வளவு காலம் நீர் நிலைகளில் அழியாமல் கிடக்கும் எனப் பார்த்தால் உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் வாசகர்களே.

-நைலோன் வகைகள் – 600 வருடங்கள் தண்ணீரில் அழியாமல் இருக்கும்

-பிளாஸ்ரிக் போத்தல் வகை- 450 “ “ “ “

-பம்பஸ் மற்றும் றப்பர் – 450 “ “ “ “

-பிளாஸ்ரிக் பெட்டி,குவளை – 50 “ “ “ “

-பிளாஸ்ரிக் பை – 20 “ “ “ “

இப்படியாக இப்பொருட்கள் நீர் நிலைகளில் கிடப்பதால் நீர் வாழ் உயிரினங்கள் விரைவாகவே அழிந்துவிடுகின்றன. இப்பொருட்கள் நாம் வாழும் பூமியில்; வீசப்படுவதால் அவை மண்ணோடு சேர்ந்து புதையுண்டு கிடப்பதாலும் பெரும் கேடுகள் வந்து சேருகின்றன. விவசாய நிலங்கள் அழிகின்றன. காடுகள் அழிந்து மழை குறைவடைகின்றன. உற்பத்தியாகும் பயிரினங்கள் மரக்கறிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி நாம் உண்ணுக் உணவுக்கே பல கெடுதல்கள் வந்து சேருகின்றன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே எக்காரணம கொண்டும் இப்படிப்பட்ட பொருட்களை எங்கும் கண்டபடி வீசாதீர்கள்.

அடுத்து இந்த நூற்றண்டில் மனிதன் பிளாஸ்ரிக் பொருட்களோடு ஒன்றிணைந்துதான் வாழப் பழகிக்கொண்டான். இதிலிருந்து முற்றாக

விடுபடமுடியாமல் தவிக்கின்றான். உதாரணத்திற்கு உலக பிளாஸ்ரிக் உற்பத்தியைப் பார்த்தால் மலைபோல உயர்ந்திருப்பதையும் காணலாம்.

-1950ம் ஆண்டில் உலக பிளாஸ்ரிக் உற்பத்தி – 01.7 மில்லியன் தொன்

-1990ம் “ “ “ “ – 105.0 “ “

-2018ம் “ “ “ “ – 348.0 “ “
ஆம் 1950 – 2018 அதாவது 68 வருடங்களில் உலக சனத்தொகைப் பெருக்கத்துடன் இந்தப் பிளாஸ்ரிக் உற்பத்தியும் எத்தனை மடங்கு அதிகரித்திருக்கின்றது என்பதைப் பாருங்கள். அந்தளவுக்கு மனிதன் இதன் பாவனையை அதிகரித்தபடியால்தான் உலக சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்து நெருங்கிவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

இதிலிருந்து நாம் விடபட வேண்டும். அதாவது எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்வதுடன் பிற உயிரினங்களையும் பாதுகாத்து நீண்ட காலம் வாழ வைக்க வேண்டும். நாம் அன்றாடம் பாவிக்கும் கழிவுப் பொருட்களை அவை…அவை…உரிய இடங்களில் போட வேண்டும். சில பொருட்கள் மீழ் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவதனால் பல நன்மைகள் உண்டு. எனவே அப்பொருட்களைப் பாதுகாப்பான இடங்களில்தான் போட வேண்டும்.

ஆகவே நாம் இந்தப் பிளாஸ்ரிக் பாவனைப் பொருட்களின் பாவனையைப் படிப்படியாகக் குறைத்து இல்லாமல் செய்தல் வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க மனித வளத்தையும் ஏனைய உயிரினங்களையும் வாழ வைக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் கவனமெடுத்தல் கட்டாய பணியாகும். எனவே கண்டபடி இப்பொருட்களை கண்ட..கண்ட இடங்களில் வீசி எறியாதீகள். தொடர்ந்து எறிவோமானால் அதன்கெடுதல்கள் நமக்கே திரும்பி வரும் என்பதையும் மறந்துவிடாதீர்கள். வீசாதீர்கள்…வீசாதீர்கள்..கண்டபடி வெளியே எதையும் வீசாதீர்கள் வாசகர்களே!…

-நன்றி-

வ.சிவராசா – யேர்மனி – 02.02.2019

Share:

Author: theneeweb