மன்னிப்புக் கேட்க சொன்னார் சிறிசேன – சரத் பொன்சேகா !

அமைச்சர் பதவி வேண்டுமென்றால் மன்னிப்புக் கோர வேண்டுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தன்னைக் கேட்டதாக, இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா கூறினார்.

மாவனல்லை பிரதேசத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.ஓர் அமைச்சர் பதவிக்காக ஜனாதிபதியிடம் தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை எனவும் அப்போது அவர் கூறினார்.

இலங்கையில் ஏற்பட்ட அண்மைக்கால அரசியல் நெருக்கடியின்போது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனால், அண்மையில் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு, பிரதமர் ரணில் வி்க்ரமசிங்க ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்த போதிலும், சரத் பொன்சேகாவின் பெயரை, ஜனாதிபதி அகற்றி விட்டதாக கூறப்படுகிறது. ” ராஜபக்சே என்னைச் சிறையில் அடைத்த போதும், அவரிடம் மன்னிப்புக் கேட்டால் என்னை விடுவிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதனை நான் மறுத்து விட்டேன்.ஒரு சாதாரண மன்னிப்புக்காக, நான் பல மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசப்பட்டேன். ஆனால், என்னுடைய நிலையிலிருந்து நான் மாறவில்லை.அவ்வாறான நான், ஓர் அமைச்சுப் பதவிக்காக மன்னிப்புக் கோருவேன் என்று எதிர்பார்க்கிறீர்களா” என்றும் அவர் வினவினார்.

இதேநேரத்தில் தான் மக்களைக் கொல்வதற்கு ஒருபோதும் திட்டமிடவில்லை என்றும் தான் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால் அவர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனே எனவும் அப்போது அவர் கூறினார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கொல்வதற்கு அண்மையில் சதித் திட்டமொன்று தீட்டப்பட்டதாகவும், அதில் சரத் பொன்சேகாவும் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியான நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

Share:

Author: theneeweb