இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 155 வீடுகள் பயனாளர்களிடம் ஒப்படைப்பு

இலங்கையில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 155 வீடுகள், அவற்றின் பயனாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.இதுகுறித்து இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இலங்கையின் மத்திய மாகாணம், ஹட்டன் மாவட்டத்திலுள்ள பொகவந்தலாவை பகுதில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட 155 வீடுகளை, பயனாளர்களிடம் ஒப்படைப்பதற்கான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்த நாட்டுக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சாந்து, மலையக மற்றும் புதிய கிராமத் துறை அமைச்சர் பழனி திகம்பரம் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் முன்னேற்றத் திட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

புதிய வீடுகளின் உரிமையாளர்களுக்கு இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை நாடாளுமன்றம் மற்றும் மத்திய மாகாண கவுன்சிலின் ஏராளமான உறுப்பினர்கள், மேம்பாட்டுத் திட்டத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இலங்கையில் வீடுகள் கட்டித் தருவதற்காக இந்திய அரசு 35 கோடி டாலர் (சுமார் ரூ.2,486 கோடி) நிதி ஒதுக்கியுள்ளது. வெளிநாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவித் தொகைகளிலேயே இது மிகவும் அதிகம் ஆகும்.

63,000 வீடுகள் கட்டித் தருவதற்கான இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 47,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb