வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட கிணறுகள் மற்றும் வீடுகளைத் தொற்றுநீக்கம் செய்து சுத்திகரிப்பது எவ்வாறு என்பது குறித்துச் மத்திய சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னாயத்த மற்றும் எதிர்வினையாற்றும் பிரிவு பொதுமக்களுக்கான விளக்கக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது.  இதனை பின்பற்றிக்கொள்றுமாறு  அறிவித்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கின் பின்னர் வீடுகளைச் சுத்தப்படுத்தும் படிமுறைகள்.

1.   உங்கள் வீடுகளிற்குள் நீங்கள் நுழையும் முன்னர் அவ்வாறு நுழைவது உங்களுக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


பாதுகாப்பற்ற நிலமைகள்

ü  வெள்ளத்தில் ஊறி ஈரமானதால் விழக்கூடிய சாத்தியமுள்ள சுவர்கள், கூரைகள் அல்லது உட்கூரைகள் (Ceilings).

ü  கீழே விழுந்து கிடக்கும் மின்சாரக் கம்பிகள்.

ü  ஈரமான ஆளிச் சுதைகள் (Plug points).

ü  அபாயகரமான விலங்குகள். 

2.    வீடுகளைச் சுத்தப்படுத்தும் போது சாத்தியமான சகல சந்தர்ப்பங்களிலும் தனிநபர் பாதுகாப்பு அங்கிகளான கையுறை, மூடிய காலணி (boots) முகமூடி (Mask) போன்றவற்றைப் பாவியுங்கள். 

3.    வீட்டினுள் உள்ள கழிவுகள் மற்றும் அழுக்குகளை அகற்றுங்கள். 

4.    தளபாடங்களை வீட்டினுள் இருந்து எடுத்து அப்புறப்படுத்துங்கள் அல்லது ஒரு இடத்தில் சேர்த்து வையுங்கள். 

5.    சுவரை நன்கு உரசி வீட்டுச் சுவர்களில் படிந்துள்ள சேற்றினை அகற்றவும். அவ்வாறே வீட்டின் தரையினையும் உரசிக் கழுவவும். 

6.    நீர்க் குழாய்களை நன்கு சுத்தப்படுத்தவும். நீர்க் குழாய்களை முழு அளவில் திறந்து சில நிமிடங்கள் நீரினை ஓட விடவும். 

7.    வீட்டைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தும் தொற்று நீக்கித் திரவக் கொள்கலனில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளின் படி அதனைக் கலந்து வீட்டின் தரையினைச் சுத்தப்படுத்தவும்.  ( ஒரு மேசைக் கரண்டி குளோரினை 5 லீற்றர் நீருடன் கலந்து கிருமி கொல்லித் திரவமாகப் பாவிக்கலாம்). இவ்வாறு கழுவுவதற்குத் தேவைப்படும் குளோரினை உங்கள் பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இருந்தோ அல்லது உங்கள் பிரதேசத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் இருந்தோ பெற்றுக் கொள்ளலாம்.

8.    மலசலகூடங்களும் நன்கு சுத்திரகரிக்கப்பட வேண்டும். மலசலகூடத்தின் குழியானது நிரம்பியிருந்தால் அதனை மலவண்டி (Gully bowser) மூலம் அகற்றவும்.  

9.    மலசலகூடத்தினையும் தொற்றுநீக்கித் திரவத்தினைப் பயன்படுத்திச் சுத்தப்படுத்தவும். 

10.   வீட்டுச் சுற்றாடல் மற்றும் தோட்டத்தில் காணப்படும் குப்பைகளை அகற்றித் துப்புரவாக்கவும். நுளம்புகள் இலகுவில் பெருக வசதியாக நீர் தேங்கும் வாய்ப்புள்ள வெற்றுப் பாத்திரங்கள், குவளைகள், தகரப் பேணிகள் முதலானவற்றினை இனங்கண்டு அகற்றுவதில் விசேட கவனம் செலுத்தவும். 

11.   குப்பை கூழங்களைச் சரியான முறையில் கழிவகற்றல் செய்யவும். 

வெள்ளப்பெருக்கின் பின்னர் கிணறுகளுக்குக் குளோரின் இட்டுச் சுத்திகரிக்கும் படிமுறைகள்.  

1.    கிணறுகளுக்குக் குளோரின் இட்டுச் சுத்திகரிப்பதற்கு முன்னர் உங்கள் பிரதேசப் பொதுச் சுகாதாரப் பரிசோதகரைத் (PHI) தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். 

2.    கிணற்று நீரை தற்போது இறைத்து வெளியேற்றுவது கிணறு இடிந்து விழும் ஆபத்தினை ஏற்படுத்தாது என நீங்கள் கருதினால்  கைகளால் அள்ளியோ அல்லது தண்ணீர்ப் பம்பி மூலமோ கிணற்று நீரை இறைத்து வெளியேற்றுவது குறித்து உங்கள் பிரதேசப் பொதுச் சுகாதாரப் பரிசோதகரது ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள். 

குறிப்பு: உங்கள் கிணற்று நீரை வெளியேற்றுவது கிணறு இடிந்து விழும் ஆபத்தினை ஏற்படுத்தும் எனில் மாற்று வழியான மிகைக்குளோரின்; வழிமுறை (Super chlorination) குறித்து உங்கள் பிரதேசப் பொதுச் சுகாதாரப் பரிசோதகரது ஆலோசனை மற்றும் உதவியினை நாடவும். 

3.    உங்களது கிணறு உட்சுவர்கட்டு உள்ள கிணறு எனில் உட்சுவரை தூரிகை (Brush) கொண்டு நன்கு உரசிக் கழுவவும். 

4.    கிணற்றில் தண்ணீர் மீண்டும் நிரம்பியதும் அந்த நீரை ஒரு சுத்தமான வாளியில் அள்ளி எடுக்கவும். வாளியில் கட்டியுள்ள கயிறும் சுத்தமானதாக இருத்தல் வேண்டும். உங்களது பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடமிருந்து பெற்றுக் கொண்ட இரண்டு மேசைக் கரண்டி குளோரினை (TCL) அந்த வாளி நீரில் இட்டு நன்கு கலக்கவும். 

5.    குளோரின் நிரம்பிய வாளி நீரை திரும்பவும் கிணற்றினுள் இறக்கி அந்த வாளியினை மேலும் கீழுமாக இழுத்து அசைப்பதன் மூலம் வாளியில் உள்ள குளோரின் கலந்த நீரானது கிணற்று நீருடன் நன்கு கலக்கும்படி செய்யவும். 

6.    அவ்வாறு கலந்து 30 நிமிடங்களின் பின்னர் நீங்கள் கிணற்று நீரினைப் பாவனைக்கு எடுக்கலாம். 

7.    தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேற்குறித்த படிமுறை 4இல் இருந்து 6 வரை தினமும் செய்து வரவும். 

 

அனர்த்த முன்னாயத்த மற்றும் எதிர்வினையாற்றும் பிரிவு

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு

தொலைபேசி இலக்கம்: 0117446508, 0117446513

Share:

Author: theneeweb