அரசாங்க வருமானத்தில் பாதி அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது

அரசாங்க வருமானத்தில் அரை வாசித்தொகை அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படுவதாக அரச நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அரச நிர்வாக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரச முகாமைத்துவ ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்தின் பின்னணியில் தோல்விகண்ட அரசியல் வாதிகள் இருப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்..

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை ஊழியர்கள் இன்று முன்னெடுக்கும் வேலை நிறுத்தம் நியாயமற்றது முகாமைத்துவ உதவியாளர்கள் சமர்ப்பித்த 12 கோரிக்கைகளில் 11 கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. பட்டதாரிகளின் சம்பளத்தைப் போன்று தமக்கும் சம்பளம் வழங்குமாறு முகாமைத்துவ உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஆனால், இதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முன்னர் இரண்டாயிரத்து 500 ரூபா சம்பள அதிகரிப்பு மாத்திரமே இடம்பெற்றது.

ஆனால், நல்லாட்சி அரசாங்கம் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அரச ஊழியர்களின் பதவியுயர்வு தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சேவைப் பிரமாணங்களை திருத்தி அமைப்பது பற்றியும் கவனம் செலுத்தப்படவிருக்கிறது. சில அமைச்சர்கள் கொக்கெயின் என்ற போதைப்பொருளை பயன்படுத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி அரசாங்கம் விசாரணை நடத்துகிறது.

சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையினால் பொலிஸாருக்கு சுதந்திரமாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், போதைப்பொருளையும், பாதாள உலக கும்பல்களையும் கட்டுப்படுத்த முடிந்திருப்பதாக அரச நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Share:

Author: theneeweb