பாகிஸ்தான் திட்டத்தை முறியடித்ததா இந்தியா? எல்லையில் நடந்தது என்ன…

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் இன்று காலை முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானப் படையினர் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களில் நேற்று (செவ்வாய்கிழமை) குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில், 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இன்று காலை முதல் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பல்வேறு தரப்பினரிடம் தகவல்களை சேகரித்துள்ளது. அதன்படி, இன்று காலை முதல் நடைபெற்ற நிகழ்வுகளின் விவரம்:

காலை 9.45 மணிக்கு பாகிஸ்தானின் ராவல்பிண்டி, சர்கோதா மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய விமான தளங்கள் ஒரே நேரத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த நகர்வை வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட இந்திய ரேடார் அமைப்புகள் கணித்தன.

9.50 மணிக்கு 10 பாகிஸ்தானிய விமானப் படைகள் ஒன்றிணைந்து இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானின் தெற்கு திசையை நோக்கி பறந்துள்ளன.

உடனடியாக, 2 மிக்-21 மற்றும் 3 ஷூகோய்-30 ரக போர் விமானங்கள் அவந்திபூரா மற்றும் ஸ்ரீநகர் விமான தளங்களில் இருந்து செயல்படத் தொடங்கின. அவை இந்தியாவுக்குள் நுழையும் இடத்துக்கு அருகாமையான நாவ்ஷேரா பகுதிக்கு சென்றன.

இதையடுத்து, பாகிஸ்தானின் 3 எஃப்-16 விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்தன. அவை 2-3 நிமிடங்கள் இந்தியாவின் எல்லையிலேயே பறந்தன. அவற்றை முதலில் இந்தியாவின் இரண்டு மிக்-21 விமானங்கள் எதிர்கொண்டன.

அரசு தரப்பு மூலம் கிடைத்த தகவல்களின்படி இந்திய எல்லைக்குள் நுழைந்த விமானங்கள் இந்திய ராணுவப் படை பகுதியையும், எண்ணெய் கிடங்கையும் தாக்குவதற்காக குறிவைத்து தான் வந்துள்ளன. அவர்கள் 3 குண்டுகளை வீசியுள்ளனர். ஆனால், அந்த குண்டுகள் இலக்கில் அல்லாமல் வேறு இடத்தில் விழுந்தன.

மேற்கு விமானப் படை மூலம் கிடைத்த தகவல்களின் படி, பாகிஸ்தான் விமானப் படையின் எஃப்-16 விமானத்தை தாம் எதிர்கொள்ளப்போவதாக ஒரு மிக் 21 விமானம் தலைமையகத்துக்கு தெரிவித்துள்ளது.

ஆனால், அடுத்த சற்று நேரத்தில், பாகிஸ்தானின் எஃப்-16 விமானம் வெடித்து பாகிஸ்தானின் லாம் பகுதியில் வீழ்ந்ததை இந்திய ராணுவ வீரர்கள் பார்த்தனர். மேலும், அத்துடன் விமானியும் பாராசூட் மூலம் பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியுள்ளார். ஆனால், அந்த விமானியின் நிலை குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

இதையடுத்து, மிக்-21 விமானம் மட்டும் இந்தியாவின் அவந்திபூரா விமான தளத்தில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அந்த விமானத்தை இயக்கிய அபிநந்தன் வர்தமன் நிலை குறித்து அந்த நேரத்தில் தெரியவில்லை.

அதன்பிறகு, இந்திய விமானப் படை வீரர்கள் 2 பேரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. அதில் ஒருவர் எந்த காயமும் இல்லாமல் மீட்கப்பட்டதாகவும், மாற்றவர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.

இதையடுத்து, தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ரா உளவுப் பிரிவு தலைவர், வெளியுறவுத் துறை செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  (https://goo.gl/sPGU4d)

இதைத்தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரவீஷ் குமார் பிற்பகல் 3.15 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில், “இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் இன்னும் திரும்பவில்லை, அவர் காணவில்லை. அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார். இதன்மூலம், இந்திய விமானி அபிநந்தன் மாயமானது உறுதி செய்யப்பட்டது. (https://goo.gl/mHMKbX)

இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “எங்கள் எல்லைக்குள் நீங்கள் நுழைந்தால், நாங்களும் உங்கள் எல்லைக்குள் நுழைவோம் என்பதை காண்பிக்கவே இதை செய்தோம். பயங்கரவாதம் தொடர்பான எந்தவித பேச்சுவார்த்தையாக இருந்தாலும் நாங்கள் அதற்கு தயார்” என்றார். (https://goo.gl/QGfhYm)

இதையடுத்து, ஒரே ஒரு இந்திய விமானி தான் அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். (https://goo.gl/KAmCYx)

அதன்பிறகு, பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானியின் விடியோவை பாகிஸ்தான் வெளியிட்டது. அது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டது. மேலும், அபிநந்தன் தொடர்பான விடியோ காட்சிகளை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்தது. அதேசமயம், அவரை துன்புறுத்தக் கூடாது  என்பதை பாகிஸ்தான் உறுதி செய்யவேண்டும் என்பதையும் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது.  (https://goo.gl/nnY3dm)

இந்திய விமானப் படை உடனடியாக செயல்பட்ட காரணத்தால், ராணுவப் படை பகுதி மற்றும் எண்ணெய் கிடங்கு மூலம் தாக்குதல் நடத்தி மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்த நினைத்த பாகிஸ்தானின் திட்டம் முறியடிக்கப்பட்டது என்று நம்பகத்தக்க வட்டாரங்கள் தெரிவித்தன.

Share:

Author: theneeweb