காடாளும் ராஜாக்கள்

கருணாகரன் —

 

பூபாலுவின் நாலு மாடுகளைக் காணவில்லை. மேய்ச்சலுக்குப் போன நாலும் திரும்பிப் பட்டிக்கு வரவில்லை. சின்னச் செங்காரி, பூச்சியன், பெரிய மயிலை, சாட்டைக் கொம்பி.

பட்டியில் தலையாரி, பெரிய மயிலைதான். பட்டிக்கு ராசியான பசு அது. எட்டு வருசமாகப் பூபாலுவுக்கு அது இன்னொரு பிள்ளை. நாலும் காணாமல் போன ஆறு நாளும் பூபாலு வீட்டில் ஒழுங்கான சமையல், சாப்பாடில்லை. பூபாலு ஒழுங்காகத் தண்ணி குடிச்சதோ நித்திரை கொண்டதோ இல்லை. பூபாலு மட்டுமல்ல, மனைவி, பிள்ளைகளும்தான்.

எப்பிடித்தான் நித்திரை வரும்?

மாடுகள் என்றால் ஏதோ பாலும் எருவும் தரும் பிராணிகள் என்று பூபாலுவோ பூபாலுவின் குடும்பமோ கருதியதில்லை. அது ஒரு அருமையான செல்வம் என்றதே அவர்களுடைய எண்ணமும் நம்பிக்கையும்.

பூபாலுவுக்கு மட்டுமல்ல, வன்னியிலுள்ள பெரும்பாலான ஆட்களுக்கு மாடுகள் என்றால் செல்வம்தான். வன்னி ஆட்களுக்கு மட்டுமல்ல, தமிழாக்களுக்கே அப்படித்தான் என்றுதான் சொல்ல வேணும். தமிழாக்களுக்கு மட்டுமல்ல, மாடுகளை ஆசையோடும் அன்போடும் வளர்க்கிற ஆருக்கும் அப்பிடித்தானிருக்கும்.

நீங்கள் நாயையோ பூனையையோ அன்போடு வளர்த்தாலும் உங்களுக்கு அப்பிடித்தானிருக்கும். அது பிள்ளையைப்போல. உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக, ஒரு சீவனாக.

பூபாலு இந்த ஆறு நாளும் நாலு மாடுகளையும் தேடித் திரியாத இடமில்லை. இல்லை, அப்படிச் சொல்ல முடியாது. அதுதான் பிரச்சினையே. எல்லா இடத்தையும் பார்க்க முடியவில்லை. அதற்கு வாய்ப்பில்லை. வாய்ப்பில்லை என்றால் அனுமதியில்லை என்றே அர்த்தம். பூபாலுவும் அண்டை அயலும் நடந்து உலாவித்திரிந்த இடங்களுக்கு இப்பொழுது போக முடியாது. அதைல்லாம் தடுத்து வேலி அடைத்துக் காவலும் போட்டுத் தடுத்தாச்சு

வழமையாக மாடுகள் மேய்ந்து விட்டு வரும் வழியில் உள்ள இடமெல்லாம் பார்த்தாயிற்று. அங்கேயெல்லாம் இனியும் மாடுகள் நிற்பதற்கான வாய்ப்பில்லை. வழிமாறிச் செல்லும் பழக்கமும் மாடுகளுக்கில்லை. அடை மழை, வெள்ளக் காலத்திலும் ஒரு பிரச்சினையுமில்லாமல் பட்டிக்குச் சொன்ன நேரத்துக்கு வந்து ஆயராகி விடும் பழக்கம் அதுகளுக்குண்டு. வெயில், வரட்சிக் காலத்தில் மேய்ச்சலுக்குச் சற்றுச் சிரமம். நாலு கட்டை தள்ளிப்போய் பிடாரி குளம், பாலையடி மோட்டை அல்லது தோணிவைச்ச வாய்க்கால் பக்கம் மேய்கிற காலத்தில்கூட வழிமாறியோ, தாமதித்தோ வந்ததில்லை.

அப்படியெல்லாம் ஒழுங்காக வந்து போய்க்கொண்டிருந்த மாடுகள் இப்பதான் காணாமல் போனதென்றால்….?

பூபாலுவுக்குத் தொண்டையில் துக்கம் நிரம்பிக் கிடந்தது. யாராவது பெரிய மயிலையைப் பற்றிக் கேட்டால் அப்படியே கண்கள் தழும்பியது. குரல் உடைந்து வார்த்தைகள் நீராகின. கை தானாக எழுந்து கண்களைத் துடைத்தன. வேறு எந்த வேலையைப் பற்றிய எண்ணமும் இல்லாமல் ஆறு நாட்களும் அலை அலையெண்டு அலைந்தாயிற்று.

காட்டம்மனுக்கும் காடேறி வைரவருக்கும் பூ கட்டி வைத்துப் பார்த்தபோது, நல்ல மாதிரிப் பதில் கிடைத்தது. ஆனால் மாடுகள் மட்டும் கிடைக்கவில்லை.

கிளாத்தி ஆறுமுகத்தாரிடம் குறி கேட்டுப் பாருங்கோ என்றாள் மனைவி.

“எட்டு நாளைக்குள் நல்ல சேதி கிடைக்கும்” என்றார் ஆறுமுகத்தார். அப்படியொரு நல்ல சேதி இதுவரையிலும்  வரேல்லை. வரக்கூடிய மாதிரியும் தென்படவில்லை.

சிவலைக்குமாரையும் விசுவரையும் கூட்டிக்கொண்டு வயல், வரம்பு, குளக்கரைகள், ஆற்றுப் பக்கம் எல்லாம் தேடிப் பார்த்தாச்சு. ம்ஹூம். ஒரு சின்னச் சமிக்ஞை கிடையாது.

என்ன நடந்திருக்கும் என்று எந்தப் பக்கத்தாலும் கணிக்க முடியவில்லை.

யாராவது பிறத்தி ஆட்கள் ஊருக்குள் வந்தார்களா? என்றொரு சந்தேகம் முளைத்தது.

மூன்று மாதங்களுக்கு முன்பு, யாரோ பிறத்தி ஆட்கள் வந்து தனம் அக்காவின் இரண்டு மாடுகளை – அதுவும் கன்றுத்தாச்சி மாடுகளைக் கட்டையிலிருந்து அவிழ்த்துக் கொண்டுபோய் காட்டில் வைத்து அறுத்திருந்தார்கள். அறுத்த மாடுகளை இறைச்சியாக்கிக் கூலர் என்ற வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போகும்போது யாரோ தகவல் சொல்லி வழியில் மடக்கிப் பிடித்தார்கள். வழியில் மடக்கிப் பிடித்தது ஒன்றும் பொலிஸோ படையினரோ இல்லை. ஊர்ப்பெடியள்தான்.

வாகனத்துக்குக் குறுக்கே இன்னொரு வாகனத்தை நிற்பாட்டி, கூடவே நான்கைந்து மோட்டார் சைக்கிளில் துரத்தித்தான் மடக்கினார்கள். அதுக்குப் பிறகே மாடறுத்தவர்களைப் பொலிஸில் ஒப்படைத்தது.

அப்படி ஒப்படைத்த வாகனத்தை நான்காவது மாதத்தில் தெருவில் கண்டேன். இறைச்சி ஏற்றிக் கொண்டு போனது. விலத்தும்போது மாட்டு மொச்சை அடித்தது. விசாரணையும் வழக்கும் தீர்ப்பும் என்ன மாதிரிப்போச்சுது என்று யாருக்கும் தெரியவில்லை. செத்த மாட்டுக்கு விலை என்ன என்ற மாதிரி, தனம் அக்காவுக்கு அரை விலை கிடைத்தது. அதுவே பெரிய விசயம் என்றார் சிவகுமார்.

அப்படித்தான் தன்னுடைய மாடுகளுக்கும் ஏதும் ஏறுக்கு மாறாக நடந்திருக்குமோ என்று பயந்தார் பூபாலு. அப்படி யோசிக்கவே முடியாது என்றது மனது. “நீங்கள் கண்டபாட்டுக்கு மனதைப்போட்டு அலைக்காதையுங்கோ” என்றார் விசுவர்.

மாடுகளைத் தேடுவதில் விசுவர் வலு விண்ணன். காலடி பாக்கிறதில. பட்டியளைத் தேடுவதில். ஆற்றங்கரை, குளக்கரையைப் பற்றி அறிந்து வைத்திருப்பதில் எல்லாம் படு சுட்டி.

வேறு யாருடைய பட்டிக்குள் அமத்தி வைத்திருக்கிற மாடுகளைக் கூடக் கண்டு பிடித்துப்போடுவார் வலு சுழுவாய்.

ஆனால், நாளொன்றுக்கு கள்ளென்றால் மூன்றுக்குக் காசு இழக்க வேணும். மற்றது, சாராயம் என்றால் அரை பாய வேணும். பஞ்சி அலுப்பில்லாமல் எத்தனை கட்டை தூரத்துக்கும் நடப்பார். அல்லது சைக்கிள் மிதிப்பார். மாடுகள் தொலைந்து போனால் மோட்டார் சைக்கிளில் போய்த்தேட முடியாது என்பது விசுவரின் நம்பிக்கை. அனுபவமும் அதுதான்.

சைக்கிளில் போனால்தான் ஆறுதலாக நாலு பக்கத்தையும் பார்த்து அவதானிக்கலாம். அல்லது நடக்க வேணும். நடந்தால் மாடுகளே மோப்பம் பிடித்துக் குரல் காட்டும்.

அப்படித்தான் குலேந்திரனின் சிவலைப் பசுவும் இன்னொரு மாடும் காணாமல் போச்சுது என்று தேடிக்கொண்டு போகும்போது பன்றிவெட்டிக்குப் பக்கத்தில் ஒரு வீட்டில் நின்று அவை குரல் எழுப்பின. என்ன என்றால், குலேந்திரனும் விசுவரும் கொஞ்சம் சத்தமாகக் கதைத்துக் கொண்டு போன சத்தத்தைக் கேட்டு விட்டுச் சிவலை குரல் காட்டியது. அப்படியே சத்தம் வந்த வளவைத் திறந்து கொண்டு விறுக்கென்று விசுவர் உள்ளே போனார். போன விசுவர் குலேந்திரனைக் குரல் காட்டிக் கூப்பிட்டார். குலேந்திரன் குரல் எழுப்ப சிவலையும் குரல் காட்டியது. அவ்வளவுதான். வளவில் ஆட்கள் வந்து என்ன ஏது என்று கேட்பதற்கிடையில் வீட்டுக்குப் பின் மறைவில் கட்டியிருந்த சிவலையை நெருங்கி விட்டார் விசுவர்.

அவ்வளவுதான். அடுத்த நிமிசமே அங்கே பெரிய அமர்க்களம் ஒன்று நடந்தது. யாரைக் கேட்டு வளவுக்குள் வந்தனிங்கள் என்றாள் வீட்டுக்காரி.

“ஆரைக் கேட்டு மாட்டைப்பிடிச்சனிங்கள்” என்று கேட்டார் விசுவர். பிறகு ஒரு அரை மணித்தியாலம் பெரிய சண்டை நடந்தது. .

குலேந்திரன் சத்தம் போட வீட்டுக்காரர் அடங்கி விட்டார்கள். யாருடைய மாடு என்று தெரியாமல் வழியில் நின்ற மாடுகளைச் சாய்த்துக் கொண்டு  வந்து பக்குவமாகப் பாதுகாப்பாத்தாங்கள் கட்டி வைத்திருந்தாகச் சொன்னார்கள். அது உண்மையில்லை. அப்பிடியொரு கதை விடுகிறார்கள் என்று விசுவருக்கு விளங்கியது. ஆனாலும் அதை அவர் பெரிதாக்கி, பொலிஸ், கோடு (நீதி மன்றம்) என்று இழுபட விரும்பவில்லை. மாடுகளை அவிழ்த்துக் கொண்டு  இருவரும் நடந்தார்கள்.

தாங்கள் பாதுகாப்பாக மாடுகளை வைத்திருந்ததற்கு ஏதாவது தந்து விட்டுப்போகும்படி வீட்டுக்காரன் கேட்டான். கசிப்பு வாடை அடித்தது பெருமானிடம். ஆளும் தளம்பினான்.

“காசு தாறதில பிரச்சினை இல்லை. ஆனால் வேணுமென்றால் அதைப் பொலிட்டத்தான் கேட்க வேணும்” என்றார் விசுவர்.

ன்னவோ புறுபுறுத்துக் கேட்டது. அதையெல்லாம் காதில் வாங்கவில்லை இருவரும். மாடுகளோடு பொழுதுபடும்போது வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் விசுவரும் குலேந்திரனும்.

அப்படி எங்காவது யாராவது பின்வளவில் கட்டியிருப்பார்களா? அல்லது அறுத்து இறைச்சிக்கு ஏற்றி விட்டார்களா என்று தெரியவே இல்லை. பூபாலுவுக்கு நம்பிக்கை குறைந்து வந்தது. மனக் களைப்பு மட்டுமல்ல, உடற் களைப்பும் சேர்ந்து சோரப்பண்ணியது.

வன்னியில் மாடுகளை வளர்ப்பதே பெரிய பிரச்சினை. ஒழுங்கான மேய்ச்சல் தறையில்லை. மேய்ச்சல் தரவையை அடைச்சு அவனவன் வயல் செய்ய வெளிக்கிட்டு விட்டான்கள். இதைப்பற்றி கால்நடை அபிவிருத்திச் சங்கத்தினர் பெரிசாக அக்கறைப்படுவதில்லை. சொன்னாலும் அந்தக் காதினால் கேட்டு இந்தக் காதினால் விட்டு விடுகிறார்கள். விவசாயத்திணைக்களமும் கமநல சேவைகள் திணைக்களமும் அண்ணன் தம்பியாக இதைப்பற்றி யோசிப்பதே இல்லை. அத்துமீறிய விதைப்பைப் பற்றிக் கச்சேரிக் கூட்டங்களில் யாரும் பேசினாலும் அதுக்கு மதிப்பிருக்காது. மாடுகள் என்றால் மேய விட வேண்டியதில்லை. லைக்கோன் கோழியை வளர்ப்பதைப்போல பேசாமல் கட்டையில் கட்டி வளர்க்க வேண்டியதுதானே. அது மாட்டுக்கும் பாதுகாப்பு. அலைச்சலும் இல்லை என்பது அவர்களுடைய அபிப்பிராயம்.

ஊர் மாடுகள், நாட்டு மாடுகளை எல்லாம் அப்படி வளர்க்க முடியாது என்று அவர்களுக்கு எப்படிச் சொல்வது? அல்லது அவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? எல்லோரும் சாதாரண குடும்பங்களில் இருந்து வந்த அதிகாரிகள்தானே. அதைவிட ஊர் மாடுகளை அதற்குத் தோதான முறையில் அதற்கான சூழலில் விட்டு வளர்ப்பதுதான் நல்லது. அதுக்குத்தானே இந்தப் பாடெல்லாம்..

ஆனால், இதைப்பற்றியெல்லாம் யார் யாரிடம் சொல்வது? யாருடன் யார் பேசுவது?

பூபாலுவுக்கு இனி என்ன செய்வது என்றே தெரியவில்லை. பேசாமல் அப்படியே கைவிடுவோம். கவலை என்றாலும் அதைத் தவிர வேறு வழியில்லை என்றொரு எண்ணம் வந்தது.

ஆனால் விசுவர் அப்பிடி விடுகிற மாதிரி இல்லை. அப்படிக் கைவிட்டால் அது தனக்கொரு அவமானம் என்ற மாதிரி எண்ணினார். தான் கையில் எடுத்த காரியம் முடிவு காணாமல் கை விடப்படக்கூடாது என்று எண்ணுகிற பேர் வழி அவர்.

“எனக்கொரு சந்தேகம் பூபாலு!” என்றார் விசுவர்.

ஆர்வமே இல்லாமல், “என்ன” என்றமாதிரி விசுவரைப் பார்த்தார் பூபாலு.

“விளாத்தியடிப் பக்கமாகத்தான் மாடுகள் இடறுப்பட்டிருக்க வேணும்” என்றார் விசுவர்.

பூபாலுவுக்கு அது சரியாக விளங்கவில்லை. விளாத்தியடியில் ஆமிக்காம்ப் அல்லவா இருக்கு. ஆமிக்காரர் மாடுகளைப் பிடிக்கிறதில்லை என்பது பூபாலுவின் நம்பிக்கை. அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்று ஊரி் சொல்வார்கள். அப்படியென்றால் பிறகேன் அங்கே போய்த் தேட வேணும்?

ஆமிக்காரர் மாடுகளைப் பிடிக்காமல் விட்டாலும் அந்தப் பக்கமாகத்தான் மாடுங்கள் எங்காவது ஒதுங்கியிருக்க வேணும் என்றார் விசுவர்.

ஆனால், அங்கே எப்படிப்போய்ப் பார்க்கிறது? ஏனென்றால் அந்தப் பக்கத்தில இருக்கிற காடு நீளத்துக்கும் ஆமிக்காம்ப்தான். அந்தப் பக்கம் மட்டுமல்ல. வன்னியில் உள்ள பெரும்பாலான காடுகளில் நிரம்பிக்கிடைக்கிறார்கள் படையினர். இதற்குள் போய் எப்படித் தேடுவது?

பூபாலுவுக்கு மாடுகள் தொலைந்ததை விடப் பெரிய கவலை, பெரிய தலையிடியாக இது – இந்தக் காடாளும் ராஜாக்களின் பிரச்சினை தலைக்குள் ஏறியது.

Share:

Author: theneeweb