இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

நல்லெண்ண அடிப்படையில் போர்க் கைதியான இந்திய விமானப் படை கமாண்டர் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுக் கூட்டத்தில் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

அமைதிக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் நாளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று இம்ரான் கான் அறிவித்தார்.

இது தொடர்பாகப் பேச இந்தியப் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள பல முறை முயன்றும் அது நடக்கவில்லை என்றும், வாகா எல்லையில் நாளை இந்திய விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படை விமானி விங் கமாண்டர் அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த அறிவிப்பு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் இம்ரான்கான்!
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் நேற்று இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

போர் நிகழுமானால், இருதரப்புகளுமே இழப்புகளை தாங்கும் சூழலில் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை இந்தியா கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இம்ரான் தெரிவித்திருந்தார்.

தொலைக்காட்சியில் தோன்றி இம்ரான் கான் பாகிஸ்தான் மக்களிடையே புதன்கிழமை நேரலையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

அனைத்துப் போர்களும் ஏதோவொரு சமயத்தில் தவறான கணக்குகளால் தொடங்கியவைதான். அதற்கான விலையை மனித இனம் கொடுத்திருக்கிறது. முதலாம் உலகப் போரின் போதும், இரண்டாம் உலகப் போரின் போதும் அதுதான் நடந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரின்போதும் அதுவே நடக்கிறது. போர் எதுவரை செல்லும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

ஆகவே, இருதரப்பும் மதிநுட்பத்துடன் செயல்பட வேண்டும்.

இந்தியாவை நோக்கி இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன். உங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. ஏதேனும் தப்புக் கணக்கு நிகழ்ந்தால் அதை தாங்கிக் கொள்ளும் சக்தி நமக்கு இருக்கிறதா? இதே பதற்றம் நீடிக்குமானால், அதன் பிறகான நிலையை (போர்) பிரதமர் நரேந்திர மோடியோ, இம்ரான் கானோ கட்டுப்படுத்த முடியாது. ஆகவே, இரு தரப்பும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்.

விசாரணைக்கு உறுதி: புல்வாமா தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் வேதனையில் இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்களும் கூட பல ஆண்டுகளாக போரால் பாதிக்கப்பட்டு வருகிறோம். இந்தத் தாக்குதல் தொடர்பான உறுதியான ஆதாரங்களை கொடுக்குமாறு இந்தியாவை ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம். பாகிஸ்தானை பயங்கரவாதத்துக்கான தளமாக ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

அதே சமயம், இந்தியா ஆவேசம் அடையும் என்று எனக்கு தோன்றியது. அதனால்தான், இந்தியா தாக்குதல் நடத்துமானால் நாங்களும் பதிலடி கொடுப்போம் எனக் கூறியிருந்தேன்.

இன்றைக்கு நாங்கள் எடுத்த நடவடிக்கை கூட, நீங்கள் எங்கள் நாட்டுக்குள் வந்தால், எங்களாலும் அது முடியும் என்பதை உணர்த்துவதற்காகத்தான். இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை நாம் சுட்டு வீழ்த்தியிருக்கிறோம். அந்நாட்டு விமானிகளும் நம்மிடம்தான் உள்ளனர் என்று கூறியிருந்தார்.

Share:

Author: theneeweb