இந்திய விமானப் படை தாக்குதல்; சீனா உட்பட எந்த நாடும் எங்களுக்கு ஆதரவாக இல்லை

பாகிஸ்தான் முன்னாள் தூதர் கருத்து

பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கா முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி கூறும்போது, “இந்திய விமானப் படை தாக்குதலுக்குப் பிறகு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசவில்லை. சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதற்கு பதிலாக, இரு நாடுகளும் (இந்தியாவும் பாகிஸ்தானும்) கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியது. பாகிஸ்தானில் காணப்படும் மிதமிஞ்சிய தேசிய உணர்வு அங்கீகரிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குவது தொடர்பான உலகின் பொறுமை குறைந்து வருகிறது. இது பாகிஸ்தானுக்கு நல்லதல்ல” என்றார்.

ஹக்கானி தற்போது ஹட்சன் சிந்தனையாளர் அமைப்பில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரிவின் இயக்குநராக உள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான கருத்துகளால் அதன் விரோதத்தை சம்பாதித்துக் கொண்ட ஹக்கானி, தனது நாட்டின் பழமைவாத குழுக்களால் அடிக்கடி மிரட்டலுக்கு ஆளானவர் ஆவார்.

ஹட்சன் சிந்தனையாளர் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய மற்றொரு பாகிஸ்தான் அறிஞர் மொயீத் யூசுப் கூறும்போது, “உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இல்லை என்பதை ஏற்கிறேன். இத்தருணத்தில் இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர் தாக்குதலில் ஈடுபடக் கூடாது. எதிர் தாக்குலில் பாகிஸ்தான் ஈடுபட்டாலோ அல்லது இந்தியா தனது தாக்குதலை தொடர்ந்தாலோ, இரு நாடுகள் இடையிலான பிரச்சினை மேலும் தீவிரமடையும்” என்றார்.

Share:

Author: theneeweb