காணாமலாக்கப்பட்டோர் போராட்டம்:: இரண்டு விதமான நிலைப்பாடு

கருணாகரன்—–

எல்லாத்திசைகளிலிருந்தும் அநீதி இழைக்கப்பட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்? அதுவும் மீள முடியாத பாதிப்பில் நீங்களிருக்கும்போது? ஆனால், அப்படியான அநீதியினால் தொடர்ந்தும் பலியிடப்படுகின்றனர் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள். அவர்களுடைய கடந்த காலப்பாதிப்புகள் படைத்தரப்பு, இயக்கங்கள், கட்சிகள் எனப் பல தரப்புகளாலும் நடந்தவை. ஒவ்வொரு தரப்பும் அவர்களுடைய புதல்வர்களை அல்லது கணவர்களை அல்லது தந்தையர்களைக் காணாமலாக்கினார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அரசியல் வஞ்சம். அல்லது அரசியல் அதிகாரப்போட்டியே.

அப்படிக் காணாமலாக்கப்பட்டோரைத் தேடி ஆண்டுக்கணக்காக அலையும் உறவுகளுக்கு இப்பொழுதும் அநீதி இழைக்கப்படுகிறது. இதற்கும் காரணம் வெட்கம் கெட்ட, மிக மோசமான அரசியல் அதிகாரமும் அரசியல் போட்டிகளுமேயாகும். இது எந்தளவுக்கும் கீழிறங்கச் செய்யும். அதுவே நடந்து கொண்டிருக்கிறது.

ஜெனீவாவில் மனித உரிமைகளுக்கான கூட்டத்தொடர் நடக்கின்ற காலப்பகுதி என்பதால், தமது பிரச்சினைகளின் மீதான கவனத்தை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் காணமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டமொன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தனர். தங்களுடைய இந்தப் போராட்டத்துக்கு சகலரும் ஆதரவும் ஒத்துழைப்பும் தர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருந்தனர். அரசியல் கட்சிகள் அனைத்தையும் கூட  பேதமின்றி அவர்கள் அழைத்திருந்தனர். தமக்கான நீதி கிடைப்பதற்கு அனைவருடைய ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்பதே அவர்களுடைய எண்ணம். இதுவே அவர்களுடைய நிலைப்பாடு.

ஏற்பாட்டின்படி வடக்கில் ஹர்த்தால் அறிவிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. தனியார் பேருந்துச் சேவை முடங்கியது. அரச பேருந்துகள் மட்டும் தயங்கித் தயங்கி ஓடிக்கொண்டிருந்தன. அரச திணைக்களங்களும் நிறுவனங்களும் சனங்களற்று இயங்கின. பாடசாலைகளில் மாணவர்கள் இல்லாமல் ஆசிரியர்கள் மட்டும் நாள் முழுதுவதும் சோர்ந்துபோய்த் தனித்திருந்தார்கள். போராட்டத்துக்கு ஆதரவு என்றாலும் உத்தியோகத்தை இழக்க முடியாதல்லவா!

இதையொட்டிக் கிழக்கிலும் ஒரு அடையாளப் போராட்டம் நடந்தது.

ஆனால், கிளிநொச்சியில் நடந்த அடையாள எதிர்ப்புப் போராட்டமே பெரிய அளவில் ஊடகப் பரப்பின் கவனத்தையும் பொதுவெளியையும் ஈர்த்தது. அங்கேதான் அரசியல் தலைவர்களும் அதிகமாகப் பிரசன்னமாகியிருந்தனர். நீண்டதொரு ஊர்வலமும் ஐ.நா. பிரதிநிதியிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் சமர்ப்பிக்கப்பட்டதும் அங்கேதான் நடந்தது. மட்டுமல்ல, கிளிநொச்சியில் நடந்த போராட்டத்தில்தான் ஏகப்பட்ட குழப்பங்களும் நடந்தன. அதாவது போராட்டத்தில் குழப்பங்களை உண்டாக்கி, பாதிக்கப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்பட்டதும் அங்கேதான் நடந்தது. ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடப்பட்டதும் அரசுக்குச் சார்பான முறையில் போராட்டத்தை திசை திருப்ப முற்பட்டதும் அங்கே நடந்தது.

போராட்டம் ஆரம்பமாகிய 25.02.2019 காலை எல்லாத்திசைகளிலிருந்தும் போராட்டத்துக்கு ஆதரவானோர் வரத்தொடங்கியிருந்தனர். ஏறக்குறைய ஆயிரத்துக்கு மேற்பட்டோர். போராட்டம் தொடங்கும் தருணத்துக்குக் கிட்டவாக அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் மெல்ல மெல்ல வந்து போராட்டத்தில் ஈடுபடவிருந்த மக்களோடு கலந்தனர். அப்படிக் கலந்து கொண்டிருக்கும்போதே மெல்லிய கசமுசாக்கள் தொடங்கின. யாருடைய தரப்பில் அதிகளவானவோர் நிற்கின்றனர் என்ற உணர்வோடு அவர்கள் இயங்கினர். ஏனென்றால் இந்தச் சந்தர்ப்பத்தில் தங்களின் கையை ஓங்க வைப்பதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. மற்றும்படி காணாமலாக்கப்பட்ட உறவுகளின் கண்ணீரோ துயரமோ அலைச்சல்களோ அல்ல. அதாவது தமக்கான அரசியல் அதிகாரம். அதிகாரத்துக்கான போட்டி. ஆகவே பாதிக்கப்பட்டோரின் கண்ணீரில் தமக்கான அரசியல் ஆதாயங்களைத் தேட முற்பட்டனர்.

ஆனால், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இதிலெல்லாம் கவனமோ அக்கறையோ இல்லை. அவர்கள் தங்கள் உறவுகளை நினைத்துக் கதறிக் கொண்டிருந்தனர். தங்களுக்கு ஏற்பட்ட பிரிவுத் துயரை ஆற்ற முடியாமல் தவித்தனர். ஆண்டுக்கணக்காக அலைந்து கொண்டிருக்கும் தங்களுக்கு ஏன் இந்த உலகம் நீதி வழங்கத் தயங்குகிறது என்று கேட்டழுதனர். தங்களுக்கு ஏன் இந்தத் தண்டனை என்று ஆவேசத்தோடு கேட்டனர். இந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையில் பலர் மயக்கமடைந்து விழுந்தனர். சிலர் நடக்க முடியாமல் அல்லாடினர். முதிய பெற்றோரும் பெண்களும் மிகச் சிரமப்பட்டனர். ஆனாலும் அவர்கள் தங்களால் முடிந்த அளவுக்குத் தங்களின் குரலை உயர்த்த முற்பட்டனர். உண்மையில் அது எவராலும் இலகுவில் தாங்கிக் கொள்ள முடியாதவொரு துன்பியல் கணம்.

அவர்களுடைய முழுக்கவனமும் தங்களுடைய நீதியைக் கோரும் குரல் உலக அரசியல் பரப்பில் ஒலிக்க வேணும். நீதி வழங்குவதற்கான செவிகளைச் சென்றடைய வேண்டும் என்பதாகவே இருந்தது.

இதனால் அவர்களால் இந்த உள்ளுர் அரசியல் சதுரங்க வீரர்களைப் பற்றிபொருட்படுத்த முடியவில்லை. பதிலாக எல்லாத்தரப்பினரும் வந்து தமக்காக, தமது போராட்டத்துக்கு ஆதரவாக நிற்கின்றனர் என்றே நம்பினார்கள். அந்தவகையிலேயே அவர்கள் வந்த அனைவரையும் எந்தப் பேதங்களுமில்லாமல் வரவேற்றனர்.

போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஊர்வலம்  நகரத் தொடங்கியது. கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியிலிருந்து கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள ஐ.நா பிரதிநிதியின் அலுவலகம் வரையிலும் ஊர்வலமாக நடந்து செல்வதே திட்டம். அதன்படி ஊர்வலம் நகரத் தொடங்கியது. அப்பொழுதுதான் அரசியல் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களும் வந்து இறங்கினார்கள்.

இதைப் பார்த்துவிட்டு, “உடையாரின் திருவிழாவில் சடையர் வாணம் விடப்போகிறார் போல இருக்கு” என்றொருவர் அருகிலே நின்றவரின் காதில் கிசுகிசுத்தார். இதைக்கேட்டவர் திரும்பிப் பார்த்து முகத்தைச் சுழித்துக் கொண்டார்.

ஆனால், அரசியல் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வந்த கையோடு அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு  புதிய தெம்பு பிறந்தது. அவர்கள் உடனே உரத்துச் சத்தமிடத்தொடங்கினர். அதில் ஒரு அணி, “ஓ.எம்.பி வேண்டும், ஓ.எம். பி வேண்டும்” என்றது. ஓ.எம்.பியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். கிளிநொச்சியில் அது திறக்கப்படப்போகிறது. அது உங்களுக்கு நீதியைத் தரும். பாதிப்பிலிருந்து உங்களை மீட்கும்” என்று சத்தமிட்டது.

ஆனால், இதே ஆட்கள் கடந்த 04.02.2019 சுதந்திரத்தன்று, சுதந்திர தினத்தைக் கரிநாளாகக் கடைப்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அப்பொழுது  இதே கிளிநொச்சிக் கந்தசாமி கோயிலுக்கு முன்பாக நின்று கொண்டு, ஓ.எம்.பி வேண்டாம் என்று கோஸமிட்டவர்கள். இடையில் உள்ள இருபத்தியொரு நாட்களுக்குள் அதிரடியாக இவர்கள் இப்படித் திரும்பிக் கத்த வேண்டிய காரணம் என்ன? தொப்பியை மாற்றிப்போடுவது எதற்காக? என்று அங்கே நின்றவர்கள் குழம்பினார்கள்.

ட்டுமல்ல, அங்கே காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இதற்கு மாற்றாகவே தங்கள் குரலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள், “எங்களுக்கு ஓ. எம்.பி வேண்டாம். உண்மையான நீதியே வேண்டும். கண்கட்டு வித்தைகள் வேண்டாம். கண்ணியமான தீர்வே வேணும். உண்மையான நீதி விசாரணை வேண்டும். எங்கள் உறவுகள் எங்களிடம் திரும்பி வர வேண்டும்” என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்  குரல் எழுப்பினர்.

இப்படி இரண்டு மாறுபட்ட குரல்கள் அங்கே ஒலித்தபோது போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அதிர்ச்சியும் குழப்பமும் உண்டாக்கியது. அதிலும் பாதிக்கப்பட்டவர்கள் – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் – ஓ.எம்.பி வேண்டாம் என்று சொல்லும்போது அதை மறுத்து இன்னொரு அணி ஓ.எம்.பி வேண்டும் என்றால்…!

ஒரு போராட்டத்தில் எப்படி இரண்டு விதமான நிலைப்பாடு, ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரண்டு விதமான குரல்கள் எழலாம்? அப்படி எழுமானால் அது அந்தப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துமே தவிர, ஒருபோதும் அதனுடைய இலக்கை எட்டுவதற்கு உதவாது.

போராட்டத்தைத் திட்டமிடும்போது இதைக்குறித்து தெளிவானதொரு நிலைப்பாட்டுக்கு வரமுடியாமல் போனது ஏன்? இந்த அடிப்படையில்தான் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்ற அறிவிப்போடு செய்யப்பட்டிருக்குமானால் மேற்படி குழப்பங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

அல்லது போராட்டத்தைக் குழம்பும் விதமாக எதிர்ச்சக்திகளால் இவ்வாறு திட்டமிடப்பட்டுக் குழப்பங்கள் உண்டாக்கப்பட்டதாக இருக்குமானால், அதற்கெதிராகத் தமது கண்டனத்தைக் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வெளிப்படுத்த வேணும்.

எது எவ்வாறோ, பாதிக்கப்பட்டோரின் குரலே இங்கே முக்கியமானது. அவர்களே வலியைச் சுமந்து கொண்டிருப்பவர்கள். அவர்களே இழப்புகளைத் தாங்க முடியாமல் தாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். அவர்களுக்கே நீதியும் நிவாரணமும் (நியாயமும்) வேண்டும். ஆகவே அவர்களுடைய குரலும் நிலைப்பாடுமே இங்கே முக்கியமானது.

அவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள்? அவர்களுடைய சிந்தனை சரியானதா? அவர்களுடைய கோரிக்கைகள் நியாயமானதா? அது சாத்தியங்களை உண்டாக்கக் கூடியதா? அல்லது அவர்கள் தொடர்ந்தும் தோற்கடிக்கப்படுவார்களா? அப்படியென்றால் அவர்களுடைய சிந்தனையிலும் போராட்டத்திலும்  யாராவது  இடையீடுகளை செய்திருக்கிறார்களா? அப்படியென்றால் அவர்கள் யார்? அவர்கள் என்ன நோக்கத்திற்காக அப்படிச் செய்கிறார்கள்? என்பதையிட்டு நாம் சிந்திக்க வேண்டும். அது இந்தப் போராட்டத்துக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாங்கள் செய்கின்ற பேருதவியாக அமையும்.

ஓ.எம்.பி என்பது சர்வதேச நாடுகளின் வலியுறுத்தலின் அடிப்படையில் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான ஒரு ஏற்பாடு. அது பிராந்திய ரீதியாக அமைக்கப்பட்டு இந்த விவகாரங்களைக் கையாளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எவ்வளவு தூரம் நற்சாத்தியங்களை அளிக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் தேசிய மொழிகள் அமுலாக்கம், தேசிய ஒருமைப்பாடு, இன ஐக்கியம், பகைமறப்பு, மீளிணக்கம், நல்லிணக்கம்  போன்ற கருத்து நிலைகளுக்கான ஏற்பாடுகளும் கட்டமைப்புகளும் இவ்வாறே உருவாக்கப்பட்டன. ஆனால், அவை எதுவும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் செயற்படவில்லை. அதாவது நம்பிக்கைக்குரியனவாக மாறவில்லை.

எனவே அந்த அனுபவங்களில் அடிப்படையில் ஓ.எம்.பியையும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மறுதலிக்க முற்படுவதில் நியாமுண்டு. செயற்படாத, பயன்தராத ஓ.எம்.பியை எதற்காக ஏற்க வேண்டும்? என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். ஆனாலும் இதைக்குறித்து ஒரு திறந்த உரையாடலின் மூலம் பொது முடிவொன்றை எட்டியபிறகு போராட்டத்தை நடத்தியிருக்கலாம்.

ரி, எப்படியோ காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஏந்திய பதாகைகளிலும் அவர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரங்களிலும் சுலோக அட்டைகளிலும் ஓ. எம்.பி வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கையில், வெளியே இருந்து வந்த கறுப்புச் சட்டைக்கார்களும் வெள்ளை வேட்டி அரசியல்வாதிகளும்  திடீரென ஓ.எம்.பி வேணும் என்று இரண்டு பட்டு நிற்க முடியாது. அதுவும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில். அப்படியென்றால் இது திட்டமிட்டுக் குழப்பத்தை உண்டாக்கும் விசயமே தவிர வேறில்லை. அதாவது அரசாங்கத்துக்கு ஆதரவான நடவடிக்கை அல்லாமல் வேறில்லை. இன்னும் சரியாகச் சொன்னால் அரசினுடைய நிகழ்ச்சி நிரலை இவர்கள் கிளிநொச்சியில் நிறைவேற்றுவதற்கு முயற்சித்திருக்கின்றனர்.

இதேவேளை இப்படி எதிரெதிர் நிலைப்பட்ட குரல்களோடு நகர்ந்த போராட்டத்தை எந்தக் கோணத்தில் பதிவது என்று ஊடகவியலாளர்களுக்குக் குழப்பம் உண்டானது. இந்த நிலையில் அவர்கள் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டியிருந்தது. சரியோ தவறோ பாதிக்கப்பட்டோருடைய குரலையே முதன்மைப்படுத்த வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் உணர்ந்தனர். அதன்படி அவர்கள் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை மையப்படுத்தியே தங்களுடைய ஊடகச் செயற்பாடுகளை முன்னெடுக்க முற்பட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஓ.எம்.பி வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தவர்கள் (கறுப்புச்சட்டைக்காரர்) ஊடவியலாளர்களோடு சண்டைக்கும் சச்சரவுக்கும்  முற்பட்டனர். இன்னொரு பக்கத்தில் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் கரைச்சிப் பிரதேச சபையின் உறுப்பினராகவும் இருக்கின்ற சத்தியானந்தன் என்பவர் அங்கே ஒலிபரப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இடையூறை விளைவித்ததோடு ஒலிபெருக்கி வயறையும் அறுத்தெறிந்தார். இதெல்லாம் பெரியதொரு முரண்பாட்டை அங்கே அந்தச் சந்தர்ப்பத்தில் உருவாக்கியது. பாதிக்கப்பட்டவர்கள் நடத்துகின்ற ஒரு போராட்டத்தின்போது இப்படி குறுக்கே வந்து தமக்கான அரசியல் அடையாளத்தையும் ஆதாயத்தையும் பெற முயற்சித்தவர்களைக் குறித்து அங்கே நின்றவர்களுக்கு முகச்சுழிப்பே உண்டானது. குறிப்பாக அங்கே நின்ற ஊடகவியலாளர்களும் மதகுருக்களும் இதை வன்மையாக எதிர்த்தனர். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவலையோடு இதென்ன கொடுமை, இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றனர்.

இப்படிச் செய்தவர்கள் யார் என்று அறிய முற்பட்டபோது, கரைச்சிப் பிரதேச சபையில் தமிரசுக்கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் சிலரும் அவர்களுடைய கூட்டாளிகளுமே இவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வெளிப்படையான ஆதரவாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது.  இதற்கான ஒளிப்பட ஆதாரங்களும் கண்கண்ட சாட்சியங்களும் கூட உண்டு. மட்டுமல்ல, இவர்களுடைய நடவடிக்கைகளை ஊடகப் பயன்பாட்டுக்காக காட்சிப்படுத்த முற்பட்டவர்களையும் இவர்கள் தாக்க முற்பட்டனர். இதையெல்லாம் குறிப்பிட்டு மறுநாள் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

இதெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அவர்களுக்கு உதவ முடியாது விட்டால், தூர விலகி நிற்கலாம். அதொன்றும் குறையில்லை. போராட்டத்தில் வந்து குழப்பம் ஏற்படுத்துவதே தவறானது.

இதேவேளை இந்தப் பத்தியாளரைப்பொறுத்தவரையில் இந்தப்போராட்டத்தையும் காணாமலாக்கப்பட்டோர் பற்றி விசயத்தையும் அவர் வேறு விதமான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார். அவரைப்பொறுத்தவரையில் காணாமலாக்கப்பட்டோரின் விடயத்துக்கு ஒரு நீதியான தீர்வு நியாயமான முறையில் முன்வைக்கப்பட வேணும். அதற்கு முதற்கட்டமாக உண்மைகள் பேசப்படவும் உண்மைகள் உணரப்படவும் வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் எவரையும் கண்டறியக் கூடிய சூழலும் சாத்தியங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இதை வெளிப்படையாகப் பேசுவதற்கு அரசும் தயாரில்லை. தமிழ்த்தலைமைகளும் தயாரில்லை. ஊடகங்களும் தயாரில்லை. சமூகத்திலுள்ள எவரும் தயாரில்லை. இது முதல் குற்றம். முதல் தோல்வி. முதல் அநீதி. உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டும் அதைச் சொல்லத் தயங்குவது அநீதியன்றி வேறென்ன? உண்மையைச் சொன்னால் அதையிட்டுத் தமது அரசியலுக்கான பாதிப்புகள் உண்டாகலாம் என்ற லாப நட்டக் கணக்கே அறிந்த உண்மையை மறைப்பதற்குக் காரணமாகும்.

அடுத்தது, அப்படி உண்மையைச் சொல்லிக் கொண்டு அடுத்த கட்டமாக இரண்டு விடயங்கள் மேற்கொள்ளப்பட வேணும். ஒன்று காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விசாரணைகளை அதற்குரிய அடிப்படைகளோடு ஆரம்பிப்பது. இரண்டாவது, பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பை அரசு வழங்குவது. இதை நோக்கி அரசாங்கத்தை வலியுறுத்துவதும் அழுத்தம் கொடுப்பதுமாகும். இதைப்பற்றி இந்தப் பத்தியாளர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக எழுதி விட்டார் என்பதை இங்கே நினைவூட்டுவதற்கு விரும்புகிறார்.

மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே இந்த விடயம் அணுகப்பட வேணும். அதுவே நற்சாத்தியங்களுக்கான கதவுகளைத் திறக்கும். மற்றப்படி பாதிக்கப்பட்டோர் காலம் முழுவதும் வற்றாத கண்ணீரோடு வாழ நிர்ப்பந்திக்கப்படுவது கொடுமை. அவர்களுடைய கண்ணீரில் தங்களுடைய அரசியலுக்குத் தண்ணீர் வார்க்க முற்படுவது கொடுமையிலும் கொடுமையாகும். அது மாபெரும் அநீதி.

0000

Share:

Author: theneeweb