அபிநந்தன் விடுதலைக்கு எதிரான மனு: பாகிஸ்தான் நீதிமன்றம் தள்ளுபடி

பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய  விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமானை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய போர் விமானத்தின் விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் புதன்கிழமை சிக்கிக் கொண்டார்.

அவரை விடுவிக்குமாறு இந்தியா, பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. மேலும், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் அபிநந்தனை விடுவிக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையிலும், இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க விரும்புவதாகவும், அதன் ஒருகட்டமாக பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய விமானி அபிநந்தனை விடுவிப்பதாகக் கூறி அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக விடுதலை செய்வது தேசத்துக்கு எதிரான குற்றம் ஆகும். பிரதமர் இம்ரான்கானின் உத்தரவை உடனடியாக நிறுத்தி வைத்து, இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதர் மின்ஹல்லா, மனுவைத் தள்ளுபடி செய்தும், அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க எந்த தடையும் இல்லை என்றும் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

Share:

Author: theneeweb