வவுச்சர் ஊடாக பாடசாலை சீருடை வழங்கும் தீர்மானத்தால் 500 மில்லியன் ரூபா நட்டம்

வவுச்சர் ஊடாக பாடசாலை சீருடை வழங்கும் தீர்மானத்தால் 500 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜக்ஸ தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சு 2685 மில்லியன் ரூபாவிற்கு சீருடைக்கான வவுச்சர்களை விநியோகித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், அதனை சீருடையாக வழங்கினால் 2146 மில்லியன் ரூபா செலவாகும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், வவுச்சர் வழங்கப்பட்டதன் காரணமாக கல்வி அமைச்சிற்கு 538.5 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவாகியுள்ளதாக தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே விஜேதாச ராஜக்ஸ இவ்விடயத்தை வௌிப்படுத்தினார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸவின் குற்றச்சாட்டிற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பதிலளித்தார்.

50 நாட்கள் செயற்பட்ட கல்வி அமைச்சர் இவ்வாறு கருத்துக்களை கூறியுள்ளதாகவும் வவுச்சர்களை அனைத்து அச்சகங்களிலும் அச்சிட முடியாது என்பதை அவர் அறிய மாட்டார் எனவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

வவுச்சரில் வெறுமையாக இருந்த பகுதிகளில் ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர், இராஜாங்க அமைச்சரின் புகைப்படங்களை அச்சிட்டதாகவும் அதற்கு ஒரு சதமேனும் செலவாகவில்லை எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

Share:

Author: theneeweb