“இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு”: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்

இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வந்த பதற்றத்தை தனது நடவடிக்கையின் மூலம் தணித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமைத்திக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதிக்கு சென்று இந்திய விமானப் படையினர் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவ தொடங்கியது. இதனிடையே இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கினார். இதனால், இருநாடுகளுக்கிடையிலான சூழல் மேலும் பரபரப்பானது.

ஆனால், அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு இருநாடுகளுக்கிடையிலான பதற்றமான சூழலை சற்று தணித்தது. பிறகு, அபிநந்தன் நேற்று (வெள்ளிக்கிழமை) பல மணிநேர தாமதத்துக்கு பிறகு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சௌத்ரி இன்று ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். அந்த தீர்மானத்தில், “இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை விடுவிப்பதாக இம்ரான் கான் எடுத்த முடிவு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழலை தணித்துள்ளது. இந்த பதற்றமான சூழலில் அவர் பொறுப்புடன் செயல்பட்டார், அதனால் அவர் அமைத்திக்கான நோபல் பரிசுக்கு தகுதியுடையவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை கூட்டத்தொடரில் வரவுள்ளது. இந்த தீர்மானத்துக்கு முக்கியமான எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கவுள்ளதாக அல்லது எதிர்ப்பு தெரிவிக்கப்போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

ஏற்கனவே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டு மக்களால் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

Share:

Author: theneeweb