வெனிசூலா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகள்

அரசியல் பதற்றம் நிலவி வரும் வெனிசூலா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.அந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பிய நிவாரணப் பொருள்களை ஏற்க அதிபர் நிக்கோலஸ் மடூரோ மறுத்து வருவதையொட்டி இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் நுச்சின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நோயாலும், பசியாலும் வாடும் வெனிசூலா மக்களுக்காக அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை ஏற்க மறுத்து வரும் நிக்கோலஸ் மடூரோவின் தலைமையிலான பாதுகாப்புப் படை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன.

அந்த நிவாரணப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக அவற்றை எரித்தமைக்காகவும், வன்முறையில் ஈடுபட்டு உயிரிழப்புகளை ஏற்படுத்தியமைக்காகவும் இந்தத் தடைகள் விதிக்கப்படுகின்றன.

அதன்படி, வெனிசூலா ராணுவ தளபதி ரிச்சர்ட் ஜீஸஸ் லோபஸ் வர்காஸ் உள்ளிட்ட 6 அதிகாரிகளுக்கு அமெரிக்காவில் சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்படும். மேலும், அவர்கள் அமெரிக்க நிதி நிறுவனங்கள் மூலம் நிதிப் பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெனிசூலாவில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிக்கோலஸ் மடூரோ தலைமையிலான ஆட்சியில்  பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதன் காரணமாக, 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.
எனினும், நாடாளுமன்றத்துக்கு ஆட்சி அதிகாரத்தைத் தருவதற்கு பதிலாக,  புதிய அரசியல் சாசனப் பேரவையை 2017-ஆம் ஆண்டு அமைத்த மடூரோ, வெனிசூலாவில் தொடர்ந்து ஆட்சி செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட மடூரோ, நாட்டின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் 10-ஆம் தேதி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்றத் தலைவர் ஜுவான் குவாய்டோ, நாட்டில் நியாயமான அதிபர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று மடூரோவை வலியுறுத்தியதுடன், அதுவரை இடைக்கால அதிபராக தாம் பொறுப்பு வகிக்கப்போவதாக அறிவித்தார். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
எனினும், ரஷியா, சீனா, துருக்கி, கியூபா உள்ளிட்ட நாடுகள் வெனிசூலா அதிபராக மடூரோ தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், 178 மெட்ரிக் டன் உணவுப்  பொருள்களையும், பிற நிவாரணப் பொருள்களையும் கொலம்பியா வழியாக வெனிசூலாவுக்கு அனுப்ப அமெரிக்கா முயன்றது.
எனினும், நிவாரண உதவி என்ற போர்வையில் அமெரிக்கா வெனிசூலா மீது படையெடுக்க முயல்வதாகக் குற்றம் சாட்டிய அதிபர் மடூரோ, அந்தப் பொருள்கள் வருவதை தடுத்து நிறுத்தினார்.
எனினும், அந்தப் பொருள்களைப் பெறுவதற்காக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சூழலில், நிவாரணப் பொருள்களைத் தடுத்து நிறுத்திய ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

Share:

Author: theneeweb