காணாமலாக்கப் பட்டவர்களின் விதி மற்றும் வடபகுதி வேலை நிறுத்தப் போராட்டம்

மகேந்திரன் திருவரங்கன்   —

 

ஒரு அரசு தனது குடிமக்களை கடத்தி மற்றும் கைது செய்து அவர்களின் இருப்பிடத்தை, அவர்களின் அன்புக்குரியவர்கள் மற்றும் பொதுமக்களின் அறிவுக்கு எட்டாத இடத்தில் மறைத்து வைத்தால், இறையாண்மையுள்ள அதிகாரசக்தியின் கொடூரமான முகத்தை ஒருவரால் காணமுடியும். இந்த இடத்தில்தான் அரசாங்கத்தின் வடிவம் மெல்ல மெல்ல ஒரு சர்வாதிகார நிறுவனமாக மாறுகிறது. ஒரு அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு சவால்விடுக்கும் குடிமக்களை பலவந்தமாக காணாமற்போகச் செய்தல், அதன் இரும்புப் பிடியில் சிக்கியுள்;ள மற்றவர்களுக்கு நடுநடுங்க வைக்கும் எச்சரிக்கையை அனுப்பும் செயலாகும்: நீங்கள் அரசாங்கத்துக்கு எதிராக – ஆயுதம் மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ – எதிர்ப்பைக் காண்பித்தால், இதே விதியை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்

உள்நாட்டு யுத்தத்தின்போது வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் வீதியோரங்களில் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இறையாண்மை அதிகாரத்துக்கு சவால் விடுக்கும் அதே வேளை அதன் ஒரு பகுதி மக்கள்மீது அது நடத்தியுள்ள கொடூரத்தையும் அம்பலப்படுத்துகிறது. இந்த போராட்டம் இந்த மாதத்துடன் அதன் இரண்டாவது வருடத்தை அடைகிறது மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் (யுஎன்எச்ஆர்சி) அமர்வுடன் காணாமற் போனவர்களின் உறவினர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கம், சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கியநாடுகள் சபை ஆகியோரிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கிளிநொச்சியில் ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இன்றைய போராட்டம் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியற்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் ஸ்ரீலங்கா கிழக்குப் பல்கலைக் கழகம் என்பனவற்றின் மாணவர் அமைப்புக்கள் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றுள்ளன. இந்த அமைப்புக்களில் சில வட மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளின் கவனத்தையும் மற்றும் போராட்டங்கள் ஊடாக அரச மற்றும் சமூக விளிம்புகளை ஆக்கிரமித்துள்ளவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் போராட்டங்கள் அவசியமானவை என்றாலும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் சரியான ஒரு முறையாக ஹர்த்தால்கள்; பிரதிபலிக்க வேண்டும். மக்கள், விசேடமாக சிறுபான்மையினர்கள், வரையறைக்கு உட்பட்ட சமூகங்கள் மற்றும் தொழிலாளர்கள் தாங்கள் வாழும் அரசாங்கங்களின்; இயல்புகள் மற்றும் இந்த அரசுகள் உருவாக்கும் சர்வதேச ஒழுங்கைப் பற்றி கூட்டாக எழுப்புகின்ற முக்கியமான கேள்விகளுக்கான ஒருமித்த எதிர்ப்பை வெளிக்காட்டவும் மற்றும் தெளிவுபடுத்தவும் இந்த ஹர்த்தால்கள் உதவலாம். என்றாலும் ஹர்த்தால்களுக்கு கூட ஒரு மறுபக்கம் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அவை அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுவதை தடை செய்வதுடன் மற்றவர்களின் மத்தியில் உள்ள நாட் கூலிக்கு உழைப்பவர்கள் மற்றும் சிறிய வியாபாரிகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. எங்கள் எதிர்ப்புகளை சிறப்பான வழியில் வெளிக்காட்டும் வகையில் செயற்படுகிறதா அல்லது அந்த பிரதேசத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களைப் பாதிக்கும் வகையில் செயற்படுகிறதா என்பதை கணக்கில் எடுத்து கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரமடைந்த காலந்தொட்டு சிங்களத்தை மையமாகக் கொண்ட அரசாங்கங்கள் தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகத்தவர்கள் முகங்கொடுக்கும் கட்டமைப்பான வன்முறைகளுக்கு சரியான வகையில் தீர்வு காண்பதில் தோல்வியடைந்ததால், தமிழர்களை தீர்வைப் பெறுவதற்காக அதிகளவில் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச செயற்பாட்டாளர்களை நோக்கித் திரும்பும்படி தள்ளிவிட்டுள்ளது.மோதலின் சர்வதேச மயமாக்கல் நாட்டின் அரசியல் முறையில் தீவிரமான மாற்றம் எதற்கும் வழிவகுக்காத போதிலும்,; தெற்கில் உள்ள அரசியல் தலைமைத்துவம், சிறுபான்மையினருக்கு எதிரான அதன் செயற்பாடுகளைப் பற்றியும் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத் தன்மையைக் கொண்ட ஒரு அரசாங்கத்தைப் பற்றிய கருத்துக்ளையும் மீள்கற்பனை செய்ய வேண்டும். காணமற் போக்கடிக்கப் பட்டவர்களின் நிலையைப் பற்றி அறிவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட காணாமற் போனவர்கள் அலுவலகம் (ஓ.எம்.பி) தனது செயற்பாட்டை ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது. எனினும் அது காணாமற் போனவர்களின் உறவினர்களின் நம்பிக்கையை இன்னமும் வென்றபாடில்லை.

இந்த காணாமற் போனவர்களின் அலுவலகத்துக்கு “குறைந்தபட்சம் காணமற் போனவர்கள் சிலரினது விதி மற்றும் இருப்பிடம் பற்றிய உண்மையை கண்டறியும் சாத்தியம் உள்ளது” என்பதை அங்கீகரிக்கும் அதேவேளை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் றுக்கி பெர்ணாண்டோ 2017ல் குறிப்பிட்டிருப்பது “ஒட்டுமொத்த சூழ்நிலையிலும் தெரியவருவது இது நடக்கலாம் என்பதற்கு மிகச் சிறிய விசுவாசம் மற்றும் நம்பிக்கை என்பனவே உள்ளன” என்று. அவர் அவதானித்திருப்பது இந்த அலுவலகத்தைப் பற்றி, காணாமற் போனவர்களைத் தேடும் உறவினர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சி எடுக்கவேண்டும் வடக்கில் உள்ள இனத் -தேசிய பிரிவினைவாதிகள் அரசாங்கத்தின் பக்கமுள்ள செயலற்ற தன்மையைப் பயன்படுத்தி ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளிடம் அரசியல் தீர்வை இன்னமும் எதிர்பார்க்கு தமிழ் செயற்பாட்டாளர்களை அரக்கர்களாக சித்தரிக்க முயல்வார்கள். கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணல் மற்றும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் அரசாங்கம் தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டிருப்பது பிரிவினைச் சக்திகள் வடக்கில் தங்கள் அரசியல் தளத்தை விரிவாக்க அனுமதித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அங்கங்கள் உள்ளிட்ட சர்வதேச சமூகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோருபவர்களின் கவலைகளுக்காக சிறிதளவு தீர்வு பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த உறுப்புக்களுக்கு, தங்களின் தனித்தன்மை வாய்ந்த செயற்பாடு மூலம் போராட்டங்களையும் மற்றும் எதிர்ப்பையும் கட்டுப்படுத்தும் ஸ்ரீலங்கா மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்கள் செய்வது போன்று கடிவாளம் இட முடியாது,. உலக சமாதானத்துக்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாகக் கூறும் ஐநா ஸ்தாபனம்,சிறுபான்மையினர்,வரம்புக்கு உட்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் சர்வாதிகார அரசாங்கங்களால் தாக்குதல்களை எதிர்கொண்டபோது பலவீனமான சந்தேகத்துக்குரிய வகையில் செயல்பட்டது. அரசியல் எதிhப்பு மற்றும் கிளர்ச்சிகளை ஆளும் வர்க்கம் கொடூரமான படைகளைக் கொண்டு அடக்கியபோது அவர்களுக்கு உதவியதின் மூலம் அது வெளிப்படையாகவும் மற்றும் தந்திரமாகவும் அரசாங்கங்களின் இறையாண்மையுள்ள வன்முறைக்கு சட்டபூர்வ தன்மையை வழங்கியது.

பல வழிகளிலும் சக்திவாய்ந்த அரசாங்கங்கள் மற்றும் வல்லரசு அங்கங்கள் ஒன்று சேர்ந்திருப்பது தந்திரமான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே, மனித உரிமை மீறல்கள் பெரியளவில் இடம்பெறும் உலகின் தென் பகுதியில் உள்ள நாடுகளில் உள்ளவர்கள் மாற்றம் மற்றும் நீதி வேண்டி நடத்தும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இந்த சக்திகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும். ஐநா போன்ற நாடுகடந்த நிறுவனங்களைப் பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் அவை தங்களுக்கு ஆணையுள்ள விடயங்களில் தலையிடுவதை எங்களால் தடுக்க முடியாது. எங்கள் நாட்டிலும் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் நடந்த மோதல்களில் இந்த அமைப்புகள் செயற்பட்டுள்ள வழிகளின் பதிவுகளை வைத்துப் பார்க்கும்போது இந்த நிறுவனங்களிடம் இருந்து நாங்கள் அதிகமானவற்றை எதிர்பார்க்க முடியாது, அதேவேளை உலகின் பல்வேறு பகுதிகளில் துன்புறுத்தல் மற்றும் அரசியல் அடக்குமுறைகளை எதிர்கொள்கிறவர்களிடையே அதிக ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியதுக்காக பல வழிகள் தேவைப்படுகின்றன, அதற்காக இந்த அமைப்புகள் நீதியை நிலைநாட்டுவதற்காக சிறப்பாக வேலை செய்ய வேண்டும் அல்லது புதிய காலனித்துவ சக்திகளிடமிருந்து தங்கள் சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ளக்கூடிய அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

Chelvi-Thiagarajah.jpg

வடக்கில் நடக்கும் இன்றைய போராட்டம் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து காணாமற் போனவர்கள் பற்றிய விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பங்குக்கு ஒரு முக்கியமான இடத்தை வழங்குகிறது. எனினும் இந்தப் பிரதேசத்தில் இருந்து கட்டாயமாக காணாமற் போக்கடிக்கப் பட்டவர்கள் பற்றிய சரித்திரத்துக்கு வேறு பல பக்கங்களும் உள்ளன. ராஜன் ஹ_ல் ஆவணப்படுத்தியுள்ள ஒரு இதயத்தை தொடும் கதையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவியாக இருந்த செல்வி தியாகராஜா என்பவர் 1990 களில் எல்.ரீ.ரீ.ஈ இனால் எப்படி காணாமலாக்கப்பட்டார் என்பதைக் காணலாம். இன்று எல்.ரீ.ரீ.ஈ ஒரு செத்த குதிரையாக இருக்கலாம் ஆனால் எதிர்ப்பாளர்கள் மற்றும் மாற்று அரசியல் கருத்துள்ளவர்களை நடத்திய அதன் அரக்கத்தனமான சித்தாந்தம் இன்னமும் இந்தப் பிரதேசத்தில் உயிரோடுதான் இருக்கிறது. கடந்த காலங்களில் எல்.ரீ.ரீ.ஈ யினால் காணாமலாக்கப் பட்டவர்கள் உட்பட அந்த இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களை எதிர்த்த தேசிய செயற்பாட்டாளர்களைக்கூட இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் சந்திக்கலாம். இன்றைய ஆர்ப்பாட்டம் தமிழ் மக்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எதிரிகளை அகற்றுவதால் விளைந்த உள்ளக வன்முறையைப் பற்றிய ஒரு சுயபரிசோதனையை தூண்டாவிட்டாலும் கூட, அவர்களின் சொந்த நலன்களுக்காக எங்களின் சுயநீதிமான்களால் அவர்கள் சுரண்டப்படுவார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த ஒருவகை விடுதலைப் போராட்டம் காரணமாக கடந்தகாலம் எங்கள்மீது சுமத்தியுள்ள பகிரங்கமான கடினமான கேள்விகளை கையாள்வதில் இருந்து விலகி எங்கள் வெகுஜனத் தலைவர்கள் வெகுதூரம் செல்கிறார்கள்.

இந்தப் பிரதேசத்திலிருந்த தமிழர்கள் மட்டுமல்ல, ஆனால் முஸ்லிம்கள் மற்றும் சில சிங்களவர்களும்கூட அரசாங்கம் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் செயற்பட்ட சர்வாதிகார நடிகர்களினால் பாதிப்புக்கு இரையாகி உள்ளார்கள். யுத்தத்தின்போது கிழக்கு மாகாணத்தில் இருந்த ஒரு சிங்களவர் காணமலாக்கப்பட்தைப் பற்றி மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் பதிவு செய்துள்ள அறிக்கையை கீழ்வரும் கதை விளக்குகிறது:

திரு.சில்வா (செப்ரம்பர் 22): திரு.சில்வா ஒரு சிங்களவர், சொறிக் கல்முனை முழுவதும் நன்கு அறியப்பட்டவர் ஏனென்றால் அவர் ஒருவர்தான் அங்கு மூன்று மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவர். 40 வருடங்களுக்கு முன்பு ஒரு அரசாங்க அதிகாரியாக அவர் அங்கு வந்தார், அந்த குடியிருப்புத் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு பொறுப்பாளராக அவர் இருந்தார். அவர் ஒரு தமிழ் பெண்ணை மணந்து அங்கேயே குடியேறிவிட்டார். அவருக்கு ஆறு மகள்களும் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். அவரது மூத்த மகனுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவர் கடமையிலிருந்து ஓய்வு பெற்றதின் பின்னர் அங்கு ஒரு சிறிய கடையை ஆரம்பித்தார் மற்றும் மகன்மாரும் அவரது வியாபாரத்தில் இணைந்து கொண்டனர்.

அவர் ஒரு சிங்களவராக இருந்தபடியால் இராணுவ முகாமைக் கடந்து உணவுப்பொருட்களை கொண்டுவருவதில் அவருக்கு அதிக சிரமம் இருக்கவில்லை. சில இராணுவத்தினரும் மற்றும் முஸ்லிம்களும் இணைந்து புலிகளுக்கு உணவு வழங்குவதாக அவரது இளைய மகன்மீது பொய்யாகக் குற்றம் சாட்டினார்கள். ஆகஸ்ட் மாதமளவில் இராணுவம் அவரது இளைய மகனைக் கூட்டிச் சென்றார்கள். அவர் இறந்து விட்டார் என பின்னர் அறிய முடிந்தது.

இந்திய இராணுவம் இருந்த காலத்தின்போதோ அல்லது ஸ்ரீலங்கா இராணுவம் இருந்த காலத்தின்போதோ கிராம மக்களிடையே ஒரு பேச்சாளராக செயற்பட்டதின் காரணமாக கிராம மக்கள் மத்தியில் அவர் வெகு பிரபலமாக இருந்தார். இது முஸ்லிம்களுக்கும் மற்றும் சிங்களவர்களுக்கும் அவர்மீது கோபத்தை உண்டாக்கியது. இராணுவ சுற்றிவளைப்பைத் தொடர்ந்து சொறிக் கல்முனை மக்கள் தாங்கள் தங்கியிருந்த பாடசாலைகளையும் மற்றும் தேவாலயங்களையும் விட்டு பல்வேறு அயற் கிராமங்களுக்கும் இடம் பெயர்ந்தார்கள். உட்பாதை வழியாக சிலர் திருக்கோவிலை அடைந்தார்கள் அதேவேளை அநேகமான மற்றவர்கள் ஆழம் குறைந்த சவலக்கடை ஏரியின் வழியாக பாண்டிருப்புக்குச் சென்றார்கள். திரு.சில்வா ஒரு சிங்களவராக இருந்தபடியால் சவலக்கடையையும் மற்றும் கல்முனையையும் இணைக்கும் ஒரே பிரதான சாலை வழியாக தன்னால் போகமுடியம் என்று எண்ணி தனது மூத்த மகனுடன் சென்றார்.அவர்கள் ஒருபோதும் கல்முனையை அடையவில்லை. அவர்கள் இருவரும் இராணுவத்தால் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும் அவர்களது உடல்கள் எரிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமற் போக்கடிக்கப்பட்ட பல தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் சரித்திரத்தைப் போலவே திரு. சில்வா மற்றும் அவரது மூத்த மகன் ஆகியோரது காணாமற்போனஃமரணமடைந்த கதையும் வலிநிறைந்த நிச்சயமற்ற குறிப்புடன் முடிவடைகிறது. தெற்கில்கூட பல தாய்மார்கள் ஜேவிபி க்கு எதிராக நடத்தப்பட்ட கிளர்ச்சி எதிர்ப்பின்போது காணாமலாக்கப்பட்ட தங்கள் மகன்களையும் மற்றும் மகள்களையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதைகள் யாவும் வடக்கு கிழக்கிலும் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காணாமலாக்கப்பட்ட சரித்திரத்தின் வழிகளையும் அதேவேளை இன எல்லைகளைக் கடந்த அவற்றின் தனித்துவமான காரணங்களையும் மற்றும் போக்குகளையும் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த நாட்டில் நடந்த காணாமற்போதலுக்கு பொறுப்புக் கூறவேண்டிய கடமையை அரசாங்கத்திடம் கேட்பதற்கு இனப் பிரிவினையை கடந்து சமூகங்கள் ஒருமித்து வேலை செய்யவேண்டியதின் முக்கியத்துவத்தையும் அது அடிக்கோடிட்டு காட்டுகிறது.

நீண்ட நெடுங்காலமாக காணாமற் போனவர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் அது பற்றிய உண்மை மற்றும் நீதியை தேடும் முயற்சியில் ஈடுபட்டதினால் அவர்களில் பலருக்கு உடல் ரீதியான மற்றும் உணர்ச்சிபூர்வமான காரணங்களினால் அவர்களின் நல்வாழ்வு சீர்குலைந்துள்ளது. உள்ளுர் அரசியல்வாதிகள், அரசாங்கம் மற்றும் சமூகம் ஆகியவை ஆhப்பாட்டக்காரர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கும் வாக்குறுதிகள் மூலம் அவர்களின் சக்தியை வடிகட்டுகிறார்கள், ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களின் உண்மையை கண்டறியும் முயற்சி மற்றும் நீதிக்கான கேள்வி என்பன இந்தப் போராட்டத்தை இன்னமும் உயிருடன் வைத்துள்ளது.சில தாய் தந்தைமார்கள் தங்களது தேடலுக்கு ஒரு முடிவைக் காண்பதற்கு முன்பே உயிர் நீத்துவிட்டார்கள். மற்றவர்கள் இழப்பின் அதிர்ச்சி மற்றும் தங்கள் பிள்ளைகளை அரசாங்கத்திடம் கையளித்த சூழ்நிலைகளின் நினைவுகள் என்பனவற்றால் பாதிப்படைந்துள்ளார்கள். தங்கள் பிள்ளைகள் உயிரோடு உள்ளார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது அவர்களுக்குத் தெரியாது மற்றும் அதன் காரணமாக துக்கம் மற்றும் ஞ}பகார்த்த சடங்குகளில் பங்குகொள்ள அவர்கள் விரும்பவில்லை. அவர்களது தினசரி வாழ்க்கை நம்பிக்கை மற்றும் விரக்தி என்பனவற்றுக்கு இடையேயுள்ள மயக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது, அவர்களில் பலர் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்களைப்பற்றி சொல்லத் தேவையில்லை. தமிழுர்களுக்கு பிரதமர் சமீபத்தில் விடுத்துள்ள விண்ணப்பத்தில் கடந்த காலத்தில் நடந்த வன்முறைகளை மன்னித்து மறந்துவிடுங்கள் என்று கூறியுள்ளது,ஆர்ப்பாட்டத்தை நடத்தும் இந்தப் பெண்களின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள வேதனையையும் மற்றும் துயரத்தையம் கருத்தில் கொள்ளாது தப்பிக்கும் ஒரு தந்திரமாகவே உள்ளது. அரசாங்கத்தாலும் மற்றும் இதர செயற்பாட்டாளர்களாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இருப்பிடத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவராமல் இருப்பதினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைக் கடைசியாக கண்டதுமுதல் அடையும் துயரத்துக்கு தீர்வே கிடையாது. நாங்கள் ஒரு குடிமக்களாகவும் மற்றும் ஒரு சமூகமாகவும் இணைந்து நாட்டில் வேரூன்றியுள்ள இனப்பிளவுகளுக்கு மேலாக எழுச்சி பெற்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share:

Author: theneeweb