நாடும் நாதியற்ற மக்களும்

—  கருணாகரன்-

மூன்று மாதங்களுக்கு முன்பு வடக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கென ஒரு தொகுதி அம்புலன்ஸ் வண்டிகள் அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக கொழும்பில் ஒரு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. அனுப்பிய கையோடு வடக்கிற்கு வந்த அம்புலன்ஸ்கள் அந்தந்த ஆஸ்பத்திரிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

இருந்தாற்போல ஒரு அறிவிப்பு. அந்த அம்புலன்ஸ்களை ஒரு இடத்தில் சேர்த்து வைத்திருங்கள். ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரனும் சார்ள்ஸ் நிர்மலநாதனும் அவற்றை வழங்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு. அதற்கு ஏற்றமாதிரி ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள்” என்று.

அதிகாரிகளுக்குக் குழப்பம். ஆனாலும் அறிவித்தலின் பிரகாரம் அவர்கள் அம்புலன்ஸ்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. அறிவித்தபடியே ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வந்து அவற்றை மறுபடியும் ஒவ்வொரு வைத்தியசாலைகளுக்கும் என வழங்கி வைத்தனர்.

“இதென்ன, பிச்சைக்காரியின் கையில் இருந்த காசை எடுத்து மறுபடியும் அவளுக்கே பிச்சை போடுகிற மாதிரி இருக்கே!” என்று நீங்கள் சிரிக்கக் கூடாது. இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா என்று எட்டிக் கடந்து போய்விட வேண்டியதுதான். ஏனென்றால், இது பரவாயில்லை. இனி வரும் நாட்களில் இதை விட எவ்வளவோ புதினங்கள் நடக்கவுள்ளன.

இதோ அப்படி ஒரு சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு மறுபடியும் நடந்திருக்கிறது.

கிளிநொச்சி நகரில் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஒரு பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டது. இதனை கரைச்சிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வந்து திறந்து வைத்தார். இதற்குரிய நிகழ்ச்சியை கரைச்சிப் பிரதேச சபை ஒழுங்குபடுத்தியிருந்தது.

பூங்கா திறந்து ஒரு மாதம் ஆகவில்லை. மறுபடி ஒரு அறிவிப்பு. அதே பூங்காவினை  மேல்மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வந்து திறந்து வைக்கவுள்ளாளர் என்று. அறிவித்தபடியே அமைச்சரும் வந்தார். மறுபடியும் பூங்காவைத்திறந்து வைத்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்கிற சனங்கள் வாயில் வைத்த கையை எடுக்க மறந்திருக்கிறார்கள்.

இரண்டு நிகழ்வுகளுக்கும் செலவழிக்கப்பட்ட பணம் அரசாங்கத்தினுடையது. அதாவது மக்களுடைய வரிப்பணம். அப்படியென்றால் எதற்காக இந்த மாதிரி ஒவ்வொன்றுக்கும் இரண்டு நிகழ்வுகள்? இரண்டு ஏற்பாடுகள்?

உண்மையில் என்ன நடக்கிறது? யாரிடம் தவறு? யார் இதற்குப் பொறுப்பு? அல்லது இதுதான் சரியானதா? சரியானதென்றால், எப்படிச் சரியானது என்று நாம் அறியலாமா?

இதை அறிந்த ஒரு நண்பர் சொன்னார், “இப்பொழுது கிளிநொச்சியில் எல்லாமே விசித்திரமாகத்தானிருக்கு” என்று. அவர் சொன்ன சங்கதிகள் பல. அதில் ஒன்று “இலங்கையில் இருபதுக்கு மேற்பட்ட பெரிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. அங்கெல்லாம் அரசியல் தலைவர்களோ ஜனாதிபதியோ ஆளுநரோ போய் அவற்றின் கதவுகளைத் திறந்து விடுவதுமில்லை. ஆலோசனை சொல்வதுமில்லை. அதையெல்லாம் அதற்குப் பொறுப்பான துறைசார் அதிகாரிகள் செய்து கொள்கிறார்கள். ஆனால், கிளிநொச்சியில் மட்டும் அப்படியல்ல. அங்கே (கிளிநொச்சியில்) முதலமைச்சர் வந்து அந்தப்பணியைச் செய்வார். அல்லது மாகாண அமைச்சர்கள் அதற்குள் கையை விடுவார்கள். அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து மூக்கை நுழைப்பார்கள். அல்லது ஆளுநரோ ஜனாதிபதியோ வந்து குளக்கட்டில் நிற்பார்கள் என்று.

இதற்கு இரணைமடுக்குளம் ஒன்றே போதுமான சாட்சி.

எதிர்காலத்தில் ஒரு கட்டிடம் இரண்டு தடவையோ மூன்று தடவையோ வர்ணமிடப்பட்டுத் திறந்து வைக்கப்படலாம். திறக்கப்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மீளவும் நீர்த்தேக்கத்தினுள் விடப்பட்டு மறுபடியும் திறக்கப்படலாம். அப்படியே பிறந்த குழந்தைகள் தாயின் கருவறைக்குள் மீண்டும் வாழ வைக்கப்படலாம். இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன உண்டு? சில நாட்களுக்கு முன்பு நாட்டில் இரண்டு பிரதமர்கள் இருக்கவில்லையா? ஏன் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட இருந்தார்களே!

இவ்வளவுக்கும் இந்தப் பெரிய தரப்பினருக்குப் பல பொறுப்பான பணிகள் நிறைய உள்ளன. அவற்றைச்செய்ய வேணும் என்றே மக்களும் நாடும் எதிர்பார்க்கிறது. ஆனால், இவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்துவதும் இல்லை. பொறுப்பெடுப்பதும் இல்லை. செய்வதும் இல்லை.

பதிலாக சாதாரண உத்தியோகத்தர்களும் அதிகாரிகளும் செய்ய வேண்டிய வேலைகளைப் போய்ச் செய்து கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்குப் பெரும் செலவையும் ஏற்படுத்தி விட்டுச் செல்கிறார்கள்.

இப்படியெல்லாம் செய்யும்போது இதையிட்டு இவர்கள் வெட்கப்படுவதில்லையா? என்ற கேள்வி ஒவ்வொரு பொதுமக்களுக்கும் எழுகிறது. ஆனால், அவர்களால் என்ன செய்ய முடியும்?

நாடு கடன் சுமையில் தத்தளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் தலைக்குமேல் கடன் சுமை ஏறியுள்ளது. அரசாங்கம் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறது என்று பொருளாதாரத்துறைப் புள்ளி விவரங்கள் அபாய அறிவிப்பைச் செய்து கொண்டிருக்கின்றன.

இப்படித் திருக்கூத்தாடினால் செலவீனங்கள் தலைக்குமேல் ஆறி ஆடாமல் வேறு என்னதான் செய்யும்?

இலங்கையின் வரலாற்றில் இந்த மாதிரிக் கோமாளித்தனங்கள் முன்பு நடந்ததில்லை. இப்பொழுதுதான் இந்தக் கோணங்கித்தனமெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்று சலித்துக் கொள்கிறார் ஹனீபா.

ஹனீபா ஒன்றும் வரலாற்று அறிஞரோ அரசியல் அறிஞரோ இல்லைத்தான். ஆனால் கண்ணியமான மனிதர். இந்த நாட்டையும் சனங்களையும் விசுவாசமாக நேசிப்பவர். அவருடைய மனம் கலங்குவதும் கண்கள் நீர் சிந்துவதும் எதிர்கால இலங்கையைக் குறித்து.

யுத்தம், பயங்கரவாதம்(?) அல்லது போராட்டம் எல்லாம் ஒழிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் முடிகின்றன. இந்தப் பத்தாண்டு காலத்தில் நாடு பயணித்திருக்க வேண்டிய தூரம் அதிகமாக இருந்திருக்க வேணும். ஆனால், 2009 இலிருந்து ஒரு அடி நகராமலேயே உள்ளது. முன்பு உள்நாட்டு நெருக்கடியில் சிக்கித்தவித்த நாடு, இப்பொழுது சர்வதேச நெருக்கடியில் சிக்குப்பட்டிருக்கிறது. யார் யாரெல்லாமோ நாட்டை நிர்வகிக்க முற்படுகிறார்கள். யாரோவுக்குப் பயந்தெல்லாம் ஆட்சியை நடத்த வேண்டியிருக்கிறது. யாருடையதோ கட்டளைகளை மீற முடியாமல் தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது.

இலங்கையில் முதலீடுகளைச் செய்த, செய்ய முற்படுகின்ற நாடுகளின் பட்டியல் இன்று மிகப் பெரியதாக நீண்டு கொண்டிருக்கிறது. யாராவது வாருங்கள். எங்கள் நாட்டில் இடம் தருகிறோம். தண்ணீர் தருகிறோம். மின்சாரம் தருகிறோம். மூலப்பொருட்களையும் தருகிறோம். வேலை செய்வதற்கு ஆட்களைத் தருகிறோம். அவர்களுக்கு நீங்கள் விரும்புகின்ற கூலியைக் கொடுக்கலாம். நீங்கள் விரும்புகின்ற எதையோ தந்தால் போதும். அதை எதுவும் சொல்லாமல் பெற்றுக் கொள்கிறோம் என்ற அளவில்தான் இலங்கையின் முதலீட்டுத்துறையும் பொருளாதார நிலையும் உள்ளன.

இதை எப்படிச் சீர் செய்யலாம்? நாட்டை எப்படி முன்னேற்றலாம்? மக்களுடைய வாழ்க்கைச் சுமைகளை எப்படிக் குறைக்கலாம்? பொருளாதார விருத்தியை எப்படி உண்டாக்கலாம்? அரசியல் சீரமைப்பை எப்படி ஏற்படுத்தலாம்? அமைதியையும் நிரந்தர ஐக்கியத்தையும் எவ்வாறு உருவாக்கலாம்? சமத்துவத்தை எப்படி ஏற்படுத்தலாம்? என்று சிந்திப்பதற்கு எவரும் இல்லை. அப்படி ஒரு அரசியல்வாதி அல்லது ஒரு அரசியல் தலைவர் அல்லது ஒரு கட்சி இருந்தால்….!

இலங்கையில் நூறு ஆண்டுகால வரலாற்றில் ஒரு மகத்தான தலைவர் வரவில்லை. காந்தியைப்போல, மண்டேலாவைப்போல ஒருவர் வந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். இரத்தம் சிந்தியதற்குப் பதிலாக, லட்சக் கணக்கில் மக்கள் பலியானதற்குப் பதிலாக இலங்கை வளமும் அழகும் பொலிந்த நாடாக மாறியிருக்கும். இந்தத் தீவு பலரும் நம்பியதைப்போலச் சொர்க்கமாகவே இருந்திருக்கும் என்று சொல்கிறார் தமயந்தி.

தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் சரியானவர்களைத் தெரிவு செய்யக்கூடியவர்களை அடையாளம் கூடியமாதிரி இல்லை. நல்லது எது, கெட்டது எது என்று தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். சரியானவர்கள், மக்களுக்குரியவர்கள் யார்? தவறானவர்கள், மக்களுக்கு மாறானவர்கள் யார் என்று இனங்காண முடியாதவர்களாகவே உள்ளனர். இதனால்தான் இந்த மாதிரியான கோமாளித்தனங்கள் எல்லாம் நடக்கின்றன. நாடு உள்நாட்டில் மக்களை அடிமைகளாக்கி வெளிநாட்டு எஜமானர்களிடம் ஒப்படைக்கும் நிலைக்காளாகியுள்ளது.

இதையெல்லாம் இங்கே ஏன் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், இன்னும் சில மாதங்களில் மறுபடியும் தேர்தல்கள் வரவுள்ளன. மாகாணசபைகள் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், அதைத் தொடர்ந்து அல்லது அதற்கு முன்பு ஜனாதிபதித் தேர்தல் என அடுத்தடுத்து மூன்று தேர்தல்கள். அந்தத் தேர்தல்கள் மக்களுக்கு இன்னொரு வாய்ப்பாகும். அதாவது கடந்த காலத்தில் விட்ட தவறுகளைச் சீர் செய்வதற்கான வாய்ப்பு. மக்களுடைய கைகளில் அதிகாரத்தை எடுப்பதற்கான சந்தர்ப்பம். தவறானவர்களையும் தவறான விடயங்களையும் நிராகரிப்பதற்கான வாய்ப்பு. அதையும் எப்படிப் பயன்படுத்தப்போகின்றன இலங்கைச் சமூகங்கள் என்பதே இன்றைய கேள்வி.

அதற்கிடையில் என்னவெல்லாம் நடக்கப்போகின்றனவோ!

நாளை இன்னொரு நிகழ்ச்சி எந்த வடிவில் நடக்குமோ? அதில் யாரெல்லாம் கடவுளாக அவதாரம் எடுப்பரோ!

 

 

 

Share:

Author: theneeweb