வட மாகாண கடை அடைப்பும் ஹர்த்தாலும் – அவதானிப்புகளும் படிக்க வேண்டிய பாடங்களும்:

சாந்தன் K . தம்பையா

பெப்ரவரி 25ம் திகதி வட  மாகாணத்தில் நடைபெற்ற ஹர்த்தால் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது, என்று உள்ளூர் பத்திரிகைகளில் சிலாகிக்கப்படுகின்றது . பொதுவாக ஒரு போராடடம் வெற்றி பெறுவதென்பது போராட்ட இலக்கை அடைதல் அல்லது அதை நோக்கி அர்த்தபூர்வமாக முன்னேறுதல் எனலாம்.  இந்த போராட் டத்தின் இலக்கு காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நீதி கோருதல் என்றும் அத்துடன் பெப்ரவரி 25ம் திகதி ஜெனீவா வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் கூட்டத்தொடர் ஆரம்பமாக இருப்பத்தின் நிமித்தமும் இந்த போராடத்திற்கு ஆதரவு வழங்கும்படி யாழ் பல்கலை கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் இப்போராட்டத்திற்கும் ஆதரவளித்த பெருமளவு பொது மக்களுக்கும் இது ஒரு நியாயமான கோரிக்கையாக தோன்றினாலும் இதன் விளைவாக கிட்டத்தட்ட  இரண்டு வருடமாக தொடர் போராட்டம் நடத்தி வரும் உறவுகளின் கோரிக்கைகளோ இல்லையேல் அவர்களது தேவைகளோ  நிறைவேற்றப்படுதல்  என்ற விடயத்தில்  எந்த வித மாற்றமோ முன்னேற்றமோ ஏற்படவில்லை என்பதே உண்மையாகும். இதே அணுகு முறையோடு  இந்த போராட்டம் இன்னும் எத்தனை வருடங்கள் தொடர்ந்தாலும் அந்த உறவுகளுக்கு நீதியோ நஷ்ட ஈடோ  கிட்டப்போவதும் இல்லை. இந்த காணாமல் போனோர்களின் உறவுகளின் அமைப்பும் எடுப்பார் கைப்பிள்ளையாக வெவேறு அரசியல் சக்திகளினால் பயன்படுத்தப்படுவார்கள் என்பதே உண்மை.

காணாமல் போனோர்க்கான அலுவலகம்  (OMR) வேண்டுமா வேண்டமா?

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊர்வலத்தில் காணாமல் போனோர்க்கான அலுவலகம்  (OMR) வேண்டும் என்று கருப்புச்சட்டை  அணிந்த ஒரு தரப்பினரும் வேண்டாம்  என்று ஒரு தரப்பினரும் பகிரங்கமாகவே சர்ச்சையிலும் வன்முறையிலும் ஈடுபட்டமை இவ்வாறான போராட்டங்கள் எவ்வாறாக தமது அரசியல் இலாபங்களை மாத்திரமே நோக்கமாக கொண்டவர்களினால் பயன் படுத்தப்படுகின்றது என்பதற்கு ஒரு சிறு உதாரணமாகும்.

காணாமல் போனோர் அலுவலகம் (OMR)  என்பது மனித உரிமைச்சபையின் பரிந்துரையின் படி ஸ்ரீ லங்கா  அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. OMR அமைக்கப்பட்டமையும் அதன் செயற்பாடுகளும்  மனித உரிமைச்சபையாலும்  பாராட்டப்பட்டுள்ளது.  தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகளென உரிமை கோரும்  TNA  யினரும் OMR இன் செயற்பாடுகள் பற்றி பாராளுமண்றத்திலோ வேறு எங்குமோ எதுவித விசனங்களும் தெரிவிக்கவில்லை. OMR இன்  பணிகளில் ஒன்று இதுவரை காணாமல் போனோர்களின் விபரங்களை திரட்டுவது. கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பல்வேறு தரப்பினராலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் முழுமையாக எவரிடமும் இல்லை என்பதே உண்மை. இரன்டு வருடங்களாக இந்த அபலை உறவுகளை பகடைக்காய்களாக்கி நடத்தப்படும் இந்த நாடகத்தின் பின்னால்  அரசியல்  செய்யும் போட்டியாளர்கள் யாருமோ அன்றேல் நானூறுக்கும் மேற்பட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களையும் 25 மாகாண சபை உறுப்பினர்களையும் பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட TNA யோ, அல்லது அங்கு செயற்படும் வேறெந்த அரசியல் கட்சியோ   பல்வேறு தரப்பினராலும் காணாமல் ஆக்கப்பட்டோரின்  விபரங்களை தொகுத்ததாக   தகவல்கள் இல்லை.

OMR இதற்கான முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளது என்றே பத்திரிகை வாயிலாக தெரிய வருகின்றது அவ்வாறாயின் OMR இன் நடவடிக்கைகளில் தவறுகள் இருப்பின் அதை சுட்டிக்காட்டுவதும் OMR சரியான பாதையில் செயற்பட ஆக்கபூர்வமான அழுத்தங்களை கொடுப்பதுமே  சரியான அணுகுமுறையாகும்.  பல்வேறு தரப்புக்களாலும் காணாமலாக்கப்பட்டோரின் தகவல்களைசேகரித்துதொகுத்தலும்வெளியிடுதலும்மிக மிகஅத்தியாவசியமானதாகும்.  இந்த விடயத்தில்காணாமல்போனோரின் உறவுகளுக்குநீதி கோருவதில்ஆரம்பப்புள்ளிஇதுவாகவே இருக்க முடியும்.

ஐக்கிய நாடுகள்  மனித உரிமை சபையின் (UNHRC ) கவனத்தை ஈர்த்தல் என்று சொல்வது பொருத்தமற்றதும் பொய்மையானதுமாகும்:

உண்மையிலேயே UNHRC  அமர்வுகளின் முடிவெடுகக்கும் பொறிமுறையில் இவ்வாறான அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மிகவும் அரிதான தாக்கத்தையே ஏற்படுத்தும்.  இச் சபையானது வருடம் இருமுறை மார்ச், செப்டம்பர் மாதங்களில் கூடுவதும் அதில் என்ன விடயங்கள் விவாதிக்கப்பட அல்லது தீர்மானம் நிறைவேற்ற படவிருக்கின்றது என்பது போன்ற விடயதானங்கள் பற்றி முன்கூட்டியே அறிவித்தல் கொடுக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க வேலைகளும் சபை கூடும் நேரத்தில் முடிவடைந்திருக்கும் என்பது இவ் விடயங்களில் பரிச்சயமான, குறிப்பாக இதில் பங்கு பற்றிய தமிழ் அரசியல் வாதிகள் உட்ப்பட அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. உண்மையில் எதிர்வரும் மார்ச் 22ம் திகதி முடிவடைய இருக்கும் 40 வது கூட்டத்தொடரில்  சிறி லங்கா தொடர்பான விடயம் பரிசீலிக்கப்படுமென ஏற்கனவே நிகழ்ச்சி நிரலும் வெளியாகி விட்டது. சென்ற முறை போன்று இம்முறையும் இவ்விடயம் ஐக்கிய இராச்சியம் (UK ) ஜெர்மனி,கனடா, மாசிடோனியா மொண்டினீக்ரோ ஆகிய  ஐந்து நாடுகளும் கூட் டாக சமர்பிக்கவுள்ளது. எனினும் இதில் ஐக்கிய இராச்சியம் தான் முக்கிய பங்காற்றுவதுடன் இது தொடர்பிலான ஆரம்ப வேலைகளையும் செய்து முடித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பிரித்தானியா வெளிவிகார அமைச்சின் தெற்கு ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதானி திரு பெர்கஸ் ஓல்டு ( Fergus Auld ) ஸ்ரீ லங்காவுக்கும் வருகை தந்து தமிழர் அரசியல் பிரதிநிதிகள் பல தரப்பினரையும் சந்தித்திருந்தார். இதனை  தொடர்ந்து லண்டனிலும் தமிழர் தரப்பு உட்பட பல பிரதிநிதிகளையும் சந்தித்து எதிர் வரும் கூட்டத்தொடரில் தாம் எடுக்க இருக்கும் நிலைப்பாடு பற்றி தெரிவித்திருந்ததுடன் சந்தித்தவர்களின் கருத்துகளையும் கரிசனையோடு கேட்டார்.

இவ்விடயம் தொடர்பாக 13ம் திகதி ஸ்ரீ லங்கா டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியான செய்திக்குறிப்பில் மனித உரிமைச்சபையின் பிரேரணை தொடர்பாக  நல்லிணக்கம் ஏற்படுத்துதல், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் ஆகியவற்றை ஏற்படுத்த ஸ்ரீ லங்கா அரசுடன் 2015 ம் ஆண்டு ஏற்பட்ட இணக்கம் தொடருமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே   மனித உரியுரிமைச்சபையின் 40 வது கூட்டத்தொடரின் போக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

மேலும் பெப்ரவரி 13இல் பெல்ஜியம் தலைநகரான பிரஸல்ஸில்  நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் -ஸ்ரீ லங்காவுக்கு  இடையேயான  கூட்டு ஆணைக்குழுவின் 22வது தொடர் கூடத்தில் மேலும் ஒருபடி சென்று  ஸ்ரீ லங்காவில் கடந்த அக்டோபர் மாதம் நடந்தேறிய ஆட்சி மாற்றம் தொடர்பான குழப்பங்களும் அது நீதித்துறையினால் தீர்க்கப்படட விதமும் ஸ்ரீ லங்காவின் நீதித்துறையில் மேலும் நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது என்று குறித்துள்ளது. அத்துடன் 2019ம் ஆண்டில் ஸ்ரீ லங்கா அரசுடன் நெருக்கமாக இணைந்து செயற்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (https://eeas.europa.eu/headquarters/headquarters-homepage/58159/joint-press-release-following-22nd-session-european-union-sri-lanka-joint-commission_en)

குதிரை ஓடியபின் லயத்தை பூட்டி  வைக்கும் வகையறாக்கள்:

மொத்தத்தில் 40வது கூட்டத்தொடர் எவ்வகையான முடிவுகளை நோக்கி செல்லவுள்ளது என்கின்ற விவகாரம் ஏற்கனவே முடிந்த முடிபாயிற்று. இந்த வேளையில் மனித உரிமைச்சபையின் கவனத்தை ஈர்ப்பதற்கான  போராட்டம் என்று சொல்வது பொருத்தமற்றதும் பொய்மையானதுமாகும். இவ்வாறான கைங்கரியங்களில் ஈடு படுவோர் குதிரை ஓடியபின் லயத்தை பூட்டி  வைக்கும் வகையறாக்கள். இது தொடர்பான இந்த ஹர்த்தால் போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அவர்கள்தான் தெளிவு படுத்த வேண்டும்.

காணாமல் போனோர்க்கான நீதி கோரல் :

து இந்த போராட்ட ஏற்பாட்டாளர்களின் மற்றுமொரு கோரிக்கையாகும். வடக்கிலும் கிழக்கிலும் முப்பது.ஆண்டுகளாக தொடர்ந்து முடிவடைந்த கொடிய யுத்தத்தில் பல்வேறு தரப்பினராலும் காணாமலாக்கப்பட்டோர்   ஆயிரக்கணக்கானோர். இவர்களில் பல பெற்றோர்களும் உறவுகளும் இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே  மரணித்து விட்டனர். எஞ்சி இருப்போரின் இன்றைய அவல  நிலையை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. கணவனை இழந்த விதவைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் உற்றம்  சுற்றத்தை இழந்தவர்கள், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

 

 

இவர்களுக்கான நீதி கோரல் என்பதன் அர்த்தம் தான் என்ன?

கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று  வரும் இப்போராட்டங்களின்  ஊடாக வடக்கு கிழக்கில் வாழும் ஆயிரக்கணக்கான காணாமற்போன உறவுகளை ஒருமுகப்படுத்த முடிந்ததா? அவர்களின் உடனடியான தேவைகள் விருப்பங்களை கவனத்திலெடுக்க ஏதாவது முயற்சிகள் எடுக்கப்ப ட்டதா?  அவ்வுறவுகள் கவுரவமாகவும், மன உளைச்சல் இன்றியும்  வாழ்வதற்கான செயற்பாடுகள் ஏதும் நடந்ததா? என்றால் எதுவுமே நடைபெறுவதாக வெளியில் தெரியவில்லை.

நீதி கோரல் எனும் கோரிக்கையை இயக்கி வரும் அரசியல் சித்தாந்தம்:

நீதி கோரல் எனும் கோரிக்கையை தொடர்ச்சியாக உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும்  இயக்கி வரும் அரசியல் சித்தாந்தத்திற்கு பின்னால் உள்ள தர்க்கமும் சிந்தனையும் பின்வருமாறு உள்ளது.  முதலாவதாக ஸ்ரீ லங்காவினால் அவ்வாறானதொரு பொறி முறையை ஏற்படுத்த முடியாது என்பது அம்பலப்படுத்தப்படும்  அவ்வாறாயின் சர்வதேச விசாரணை ஒன்று அத்தியாவசியமாகும் இரண்டாவதாக இவ்வாறான ஒரு விசாரணை நடைபெறும் பட்சத்தில் இனக்கொலை நடந்திருக்கின்றது என்பது தெரிய வந்து விடும், இவ்வாறு தெரியவரும் பட்சத்தில் ஐ .நா தலையீடு தவிர்க்க முடியாததாகும்.  இதனை தொடர்ந்து  ஐ .நா  தமிழ் மக்கள் மத்தியில் சர்வசன வாக்கெடுப்பை நடத்த வேண்டி ஏற்படும். அவ்வாறு நடைபெறும் போது  பெரும்பான்மையான தமிழர்கள் அளிக்கும் வாக்கு, கொசோவாவில் போன்று தெற்கு சூடானில் போன்று  தனி நாட்டுக்கு வழி கோலும் என்பதுவே இந்த சித்தாந்தத்தின் சுருக்கமான கருப்பொருளாகும்.  இவ்வாறு பத்தாம் பசலித்தனமாக சிந்திப்பதற்கு இவர்களுக்கு உள்ள உரிமையை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் இந்த அவிவேக குருக்களினதும் அவர்களது சீடர்களினதும் மூலோபாயத்தை பரீட்சிக்கும் களமாகவும் அதற்கு சாட்சியாகவும் காணாமல் போனோரின் கையறு நிலையையம் அவர்களது அவலங்களையும் ஒப்பாரிகளையும் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக படங்காட்டி வருவதே.  இதனால் பாதிக்கப்படட உறவுகளுக்கு  ஏற்படப்போகும் நன்மைகள் எதுவுமே இல்லை.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக என்ன செய்யப்படல் வேண்டும்:

ல்வேறு தரப்பினராலும் காணாமலாக்கப் பட்டோரின்    உறவுகளுக்கு நீதி  கிடைப்பதற்கு;  முதலாவதாக காணாமலாக்கப்பட்டோரின் தகவல்களை சேகரித்து தொகுத்தலும் வெளியிடுதலும் நடைபெறல் வேண்டும், இரண்டாவதாக பல் வேறு தரப்பினர்களாலும் காணாமலாக்கப்பட் டோர் பற்றிய பூரணமான தகவல்கள் வடக்கு கிழக்கில் மாத்திரமில்லாமல்   ஸ்ரீ லங்காவிலுள்ள அனைத்து ஐனநாயாக சக்திகள் மத்தியிலும் கொண்டு செல்லப்படல் வேண்டும். மூன்றாவதாக காணாமலாக்கப்பட்டோர் களிற்கான இழப்பீடு உடனடியாக வழங்கப்படுவதன் மூலம் அவர்களின் உறவுகளின்  கவுரவமான வாழ்வு மீளமைக்கப்படல் வேண்டும். இறுதியாக இவ்வாறான இன்னல்கள் எமது மக்களுக்கு மீண்டும் நடைபெறாதவகையில் இதற்கான காரணிகளையும் இந்த மானிட அவலங்களுக்கு பொறுப்பானவர்களையும் இனங்கண்டு அவர்களுக்கான தண்டனைகளோ, புனர்வாழ்வுக்கான வழிமுறைகளோ அளிக்கப்படல் வேண்டும். இந்த குறிக்கோள்களை நோக்கியே மனிதாபனமுள்ள ஐனநாயக சக்திகள் தங்கள் கவனங்களையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளல் வேண்டும்.

Share:

Author: theneeweb