உடைக்கப்பட்ட திருக்கேதீஸ்வர ஆலய வளைவு குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதவாதக் குழு ஒன்றினால் நேற்று உடைக்கப்பட்ட மன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கான வளைவை மீண்டும் தற்காலிகமாக 4 தினங்களுக்கு அமைப்பதற்கு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வளைவு நேற்று குழு ஒன்றினால் உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பில் மன்னார் காவற்துறை நீதவானிடம் முறையிட்டமைக்கு அமைய, முறைப்பாட்டை விசாரணை செய்த பதில் நீதவான் இ. ஹயஸ் செல்தானோ, குறித்த வளைவை தற்காலிகமாக 4 தினங்களுக்கு அமைக்க அனுமதி வழங்கியுள்ளார்.

இதேவேளை, மன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்காக சீரமைக்கப்பட்ட வளைவு நேற்றையதினம் மதவாதக் குழு ஒன்றினால் உடைக்கப்பட்டமைக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து குருக்கள் சபையின் தலைவர் சீறிவசிறி கே.வி.கே. வைத்தீஸ்வர குருக்கள் இன்றையதினம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்து இதுதொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் வடக்கில் இந்துக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் மற்றும் மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு குழு ஒன்றை அமைத்து தீர்வு காண முடியும் என்று வடமாகாண ஆளுநர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தவிர்த்து பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார் .

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இன்று திருகேதீஸ்வர கோயில் நிர்வாகத்தினருடனும் மாந்தை பங்கு தந்தையிடமும் அவர் பிரத்தியேக சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.

இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நிகழாதிருக்கவும் முரண்பட்ட இரு மதத்திற்கிடையில் ஒரு சந்திப்பை மேற்கொண்டு இதை சுமுகமாக தீர்க்க அனைவரும் முன்வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த சம்பவம் தமிழினத்துக்கு ஒரு வெட்கக்கேடான நிகழ்வு என்று தேசிய ஒருமைப்பாடு, அரச கருமமொழிகள் மற்றும் இந்துவிவகார அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழர்களின் ஒற்றுமையை கேள்விக்கும், ஏனைய இனத்தவர்கள் மத்தியில் கேலிக்கும் உட்படுத்தி இருக்கிறது.

அமைதிக்கு வழிகாட்டவேண்டிய மதத்தலைவர்கள் வன்முறைகளுக்கு தலைமை தாங்குவது கண்டிக்கப்பட வேண்டும்.

அத்துடன் மதவெறி செயலில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தை இந்து சமயப் பேரவையும் கடுமையாக கண்டித்துள்ளது.

பாடல்பெற்றத் திருத்தளமான மன்னார் கேதீஸ்வரத்துக்கான இந்த வளைவு சட்டவிரோதமாக அமைக்கப்படவில்லை.

எனவே இதனை அகற்றி இருப்பது தீவிர மதவாத செயற்பாடு என்று அதன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb