அமெரிக்கத் திமிங்கிலமா….? சீனாவின் ஒக்டோபசா?

                                                         …..சாந்த நேசன்—

முறிவடைந்து விட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரிய அதிபர் கிம்ஜான்உன்னுக்கும் இடையிலான வியட்நாம் பேச்சுவார்த்தையே இன்றைய உலகின் பேசுபொருள். என்னதான் நடந்தது,,,,? ஏன் முறிவடைந்தது பேச்சுவார்த்தை…? ஏகாதிபத்திய குனாம்சங்களை  அறியாதவர்களுக்கு மட்டுமே இதற்கான பதில் கேள்வியாக இருக்கும்

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இருநாட்டு அதிபர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் 26, 27.02.2019 ஆகிய இரு தினங்கள் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்றன. வடகொரிய அதிபர் தனது நாட்டிலிருந்து விசேட தொடருந்தில் மூன்று நாட்கள் பயணித்து தனது நட்பு நாடான வியட்நாமை வந்தடைய,  அமெரிக்க ஜனாதிபதி பிரத்தியேக விமானத்தின் மூலம் வியட்நாமை வந்தடைந்திருந்தார். 26ஆம் திகதி நடைபெற்ற இராப்போசன விருந்துடனான  சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்ததாக அமெரிக்க அதிபர் கருத்து வெளியிட்டிருந்தார்.

மறுநாள் காலை 8மணிக்கு ஆரம்பித்த உத்தியோக பூர்வ,இருவருக்கும் இடையிலான  தனிபட்ட சந்திப்பு ஆரம்பித்து  அரை மணி நேரம் கூட தாண்டாத நிலையில் பேச்சு முறிவடைந்துவி ட்டதாக அறிவிக்கபட்டது .

தனியாக சந்தித்துக் கொண்ட அறையில் இருந்து சந்திப்பில் வடகொரிய அதிபர் இறுகிய முகத்துடன் தனது காரில் ஏறி விரைவாக தனது ஹோட்டல் அறைக்குத் திரும்பியிருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பிற்காக வந்திருந்த வாகனங்களும் புறப்பட்டுச் அங்கிருந்து சென்றன. வடகொரிய அதிபர் வெளியேறிய பின்னர் அமெரிக்க அதிபரும் பொது மாநாட்டு மண்டபத்திற்கு வராமலேயே  அங்கிருந்து தன்னுடைய தங்குமிடத்திற்கு விரைந்து சென்றார். அங்கே ஏற்பாடு செய்யபட்ட்டிருந்த  மதிய உணவை கூட புறக்கணித்து விட்டு எதுவித ஒப்ந்தமோ பத்திரிகையாளர் சந்திப்போ எதுவும் இன்றி அங்கிருத்து சென்றனர். இருவரும்.

இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தப்போவது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் பிரித்தானியா, தென்கொரியா, ஜப்பான், இந்தியா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளின் கூட்டிணைவா…? அல்லது சீனா, ரஷ்யா, வடகொரியா, கியூபா, வியட்நாம் போன்ற இடதுசாரிக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நாடுகளின் கூட்டிணைவா….?  என்ற கேள்வி இன்று பலமாக எழுந்துள்ளது. இது சந்தைப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துவதை நிர்ணயிக்கின்ற உலகப்போராக மாறிவிடுமோ …? என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகள் மத்தியில்.

செய்தியை செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டுப் போகிறவர்களுக்கு இது வெறும் செய்தி மட்டும்தான். உலகில் அமைதி நிலவ வேண்டும். யுத்தம் அற்ற சூழலில் உலகமக்கள் அனைவரும் சமத்துவமாக வாழ வேண்டும். நாடுகளுக்கிடையிலான எல்லைகள் மனித விழுமியங்களைக் குலைப்பதாக அமைந்துவிடக்கூடாது. வளர்ச்சியடைந்த நாடுகள் வளரும் நாடுகளை தனது அடிமைகளாக நினைத்துவிடக்கூடாது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் அனைத்தும் உலக மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். இதன் மூலம் ஆதி மனிதன் வாழ்ந்த கூட்டுவாழ்க்கையை இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் அத்தகைய வாழ்க்கை முறையை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக உழைப்பவர்களுக்கும் இது ஒரு பாரிய பலத்த சவால் தான்.

இந்தப் பின்னணியிலேயே வடகொரிய அமெரிக்க பசுவர்தைகளை நோக்க வேண்டும். வடகொரிய அதிபர் எதற்காகப் பேச்சுவார்த்தையை இடையில் முறித்துச் சென்றார்…? அமெரிக்கா தன்மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை விலக்கி தமது மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் தன்னிடம் உள்ள அணு உலைகளையும், அணுகுண்டுகளையும் ஒப்படைப்பது குறித்து சிந்திக்க முடியும் என்று வடகொரிய அதிபர் தெரிவித்திந்தார். ஆனால் அமெரிக்க அதிபரோ அப்படி அல்ல.முதலில் வடகொரியா  அணுகுண்டு நிகழ்ச்சித் திட்டத்தைக் கைவிட்டால் அமெரிக்கா விதித்துள்ள தடைகள் தளர்த்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி நாடுகளின்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஆகவே வடகொரியாவின் மீதான தடையும் தொடரும். இருப்பினும், வடகொரியா தனது நிலையை மாற்றிக்கொண்டு அணுஉலைகளை உறைய வைத்தால் அமெரிக்கா தடையை நீக்கும் என்று அமெரிக்க அதிபர் கூறினார். இதனைத் தொடர்ந்தே இரு தரப்பும் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு பிரிந்து சென்றதாக சொல்லப் படுகிறது .

இது தொடர்பில் பின்னர் கருத்து வெளியிட்ட வடகொரிய அதிபர் தமது  நாட்டில் அணுஉலைகள் அமைந்துள்ள கேந்திரமான பகுதிகளில் அதனை அழிக்க முடியாது எனவும் ,ஆனாலும் வடகொரியாவின் வேறு பல இடங்களில் உள்ள அணுஆயுதக் கட்டமைப்புகளை அழித்துவிடுகிறோம் ,அதற்குப் பிரதியுபகாரமாக எம்மீது விதிக்கப்பட்டுள்ள முக்கியமான தடைகளை அமெரிக்கா விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை தாம் முன்வைத்ததாகவும் ஆனால் அமெரிக்க அதிபர் அதற்கு உடன்படவில்லை எனவும் கூறினார்.

கடந்த வருடம் ஜூன்மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு அமைவாக அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துவிட்டன. இனி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதுதான் எஞ்சியுள்ள விடயம். அதாவது வடகொரியாவின் கருவறையில் உள்ள அணுகுண்டுகளையும் அவற்றை செலுத்துவதற்கான ஏவுகணை நிகழ்ச்சித்திட்டத்தையும் அப்படியே நிறுத்துவதாக வடகொரியா உடன்பட்டு அதற்கான கையெழுத்தை இடுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் தயார். நீங்கள் கையெழுத்திட்டால் போதுமானது என்று அமெரிக்கா கூறியது.

எனது மூதாதையர்கள் அரும்பாடுபட்டு தயாரித்த அணு ஆயுதங்களைக் கையளித்துவிட்டு வெளியேறுவதற்காகவா நான் நான்காயிரம் மைல் பயணித்து இங்குவந்தேன் என்று கேட்டுவிட்டு தான் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு வெளியேறியதாக வடகொரிய அதிபர்  தெரிவித்தார்.

இருதலைவர்களும் வியட்நாம் வந்ததிலிருந்தே அவர்கள் இறுக்கமான மனநிலையில் இருப்பதை அவர்களுடைய உடல்மொழி வெளிப்படுத்தியது. கடந்த வருடம் ஜூன்மாதம் சிங்கப்பூரில் சந்தித்ததைப் போன்று மகிழ்ச்சியாக அவர்கள் இருக்கவில்லை. இருவருமே கோபம் கவ்விய முகத்துடனேஎ இருந்தனர். என அங்கு நேரில் இருந்த செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

வடகொரிய அதிபரின் தேவை ஒன்றாக இருக்கையில், அமெரிக்காவின் தேவையோ வேறானதாக இருந்ததை இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இருதரப்பினரும் சந்திக்க முடியாத ஒரு புள்ளியில் இருப்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இருவரும் இணைந்து ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்த வேண்டிய தேவை கூட அங்கு இருக்கவில்லை.

அரைமணி நேரம் கூட  நீடிகாத  இந்த சந்திப்பு நடந்துகொண்டிருந்த வேளையில், அமெரிக்க அதிபருக்கு பேரிடியாக ஒரு செய்தி வந்தது. அமெரிக்க அதிபரின் முன்னாள் சட்டத்தரணி கோர்கன் அமெரிக்க அதிபர் தொடர்பான விசாரணைக் கழிஷனுக்கு தாம் சாட்சியம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அந்த விசாரணைக் கமிஷனுக்கு கருத்து தெரிவித்த கோர்கன் அமெரிக்க அதிபர் ஒரு மோசமான ஒழுக்கம்கெட்ட நபர் என்றும் பொய்யர் என்றும் பித்தலாட்டக்காரர் என்றும் தெரிவித்துள்ளார். அவர் குறித்த பல  மேலதிக இரகசியங்கள் தன்னிடம் உள்ளதாகவும்  அவற்றையும் தான் அம்பலப்படுத்துவேன் என்றும் கூறியிருந்தார்.   இதனால் பேச்சுவார்த்தையைத் தூக்கியெறிந்து விட்டு அமெரிக்காவிற்கு உடன் விரையாவிட்டால் தனது பதவிக்கே ஆபத்து ஏற்படும் நிலை இரண்டாம்நாள் பேச்சுவார்த்தையின்போது டொனால்ட் டிரம்ப்புக்கு ஏற்பட்டிருந்தது.  அதேநேரம் அமெரிக்க அதிபர் தயாரித்திருந்த ஒப்பந்தத்தில் வடகொரிய அதிபர் கையொப்பமிட்டிருந்தால் வடகொரிய அதிபர் தனது நாட்டிற்குத் திரும்ப முடியாத நிலையும்  ஏற்பட்டிருக்கும்.

அமெரிக்க அதிபர் அவசர அவசரமாக நாடு திருமப் முன் தனியான பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தினார். அதில் கலந்துகொண்டிருந்த சுமார் மூவாயிரம் ஊடகவியலாளர்களில் ஒருவர் வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் நிலவுகின்ற பிரச்சினையில் தென்கொரியாவின் நிலை என்ன…? என்று கேள்வி எழுப்பினார். ஏனெனில் தென்கொரியாதான் இந்தச் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் முன்னின்று உழைத்திருந்தது. இதற்காக அந்நாடு ஏராளமான நிதியையும்  செலவிட்டிருந்தது.

இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தென்கொரிய ஜனாதிபதியும் பெரும் சிகக்லை எதிர்நோக்க உள்ளார். எனவே முடிவு எதுவும் எட்ட  முடியாத ஒரு நிலைக்கு இவ்வளவு நிதி செலவிடப் பட்டுள்ளதே  என்று அந்த ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு தென்கொரிய அதிபர் தன்னுடைய சிறந்த நண்பர் என்று மட்டும் கூறினார் டோனல்ட் ட்ரம்ப்.

நீங்கள் தொடர்ந்தும் தென்கொரியாவுடன் இணைந்து படைப்பயிற்சிகளை நடத்துவீர்களா என்று கேட்டதற்கு, அப்படிப்பட்ட பயிற்சிகள் தனக்குத் தேவையில்லை. ஏனெனில் ஒருமுறை பயிற்சி மேற்கொள்வதற்கு 100பில்லியன் டொலர் நிதி செலவாகிறது என்றும் தேவையற்ற படைப்பயிற்சியை நடத்தி பெருமளவு நிதியை விரையமாக்குவது அர்த்தமற்றது என்று அமெரிக்க அதிபர் பதிலளித்தார்.

ஆக தென்கொரிய அமெரிக்க கூட்டுப்படைப்பயிற்சியும் இல்லை, வடகொரியாவுடன் ஒப்பந்தமும் இல்லை இதுதான் இன்றைய நிலை.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டள்ள பதற்றம் பற்றிக் கேட்டபோது இரண்டு நாடுகளிடமும் அணுஆயதங்கள் உள்ளன. எனவே இந்தப் பதற்றம் உடனடியாக தனிக்கப்படவேண்டும் என்று கூறினார்.

வெனிசுலா பற்றிக் கேள்வியெழுந்தபோது, தான் உணவுப்பொருட்களை அனுப்பியபோதிலும் அந்நாட்டு அதிபர் அவற்றை தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் வெனிசுலாவைக் கட்டுப்படுத்த தம்மால் முடியவில்லை என்று கூறினார். மேலும், இது உலகை அச்சுறுத்தும் பிரச்சினை அதில் ஒன்றுதான் வடகொரிய பிரச்சினை என்று கூறினார்.

கேள்வி மத்திய கிழக்குப் பக்கம் திரும்பியபோது, இஸ்ரேல் அதிபர் பென்ஜமின் நெத்தன்யாகு பெரும் ஊழல் செய்திருப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. பென்ஜமின் நெத்தன் யாகுவை தான் மிகவும் மதிப்பதாகவும் இஸ்ரேல் ஆண்டுதோறும் நான்கு பி;ல்லியன் டொலர் மதிப்பில் அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறது அந்தநாடு மதிப்பிற்குரிய நாடு என்றும் அதே சமயம் பாலஸ்தீனியர்களுக்கு ஏராளமான பணத்தைக் கொட்டி இறைத்து அவர்களை அமைதிக்கு வரும்படிக் கேட்டும் பணம்தான் விரையமாகிறதே தவிர அவர்களிடமிருந்து எத்தகைய சாதகமான பதிலையும் எதிர்பார்க்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இப்பொழுது உங்களால் வடகொரியாவுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய முடியவில்லை. இதற்கு முன் இருந்த அதிபர்கள் என்ன செய்தார்கள் என்று மற்றொரு கேள்வி கேட்கப்பட்டது. சிலர் சில முயற்சிகளை மேற்கொண்டனர். குறிப்பாக பராக் ஒபாமா எதுவுமே செய்யாமல் எட்டு ஆண்டுகள் காலத்தை வீணடித்துவிட்டார். அவர் எதனையும் செய்யாததினால் நான் கட்டாந்தரையில் படிக்கட்டைக் கட்டும் சூழலில் இருக்கின்றேன் என்று அமெரிக்க அதிபர் கூறினார்.

சிங்கப்பூரில் ஒரு ஒப்பந்தத்தையாவது எட்டினீர்கள். இங்கு எதுவுமே நடைபெறவில்லையே என்று கேள்வி மீண்டும் வியட்நாம் சந்திப்பின் பக்கம் திரும்பிய போது நாம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம் என்று பதில் வந்தது .

சீனா குறித்து  கேள்வி எழுப்பப்பட்ட போது . வடகொரியாவிற்கு சீனாவிலிருந்தே 93வீதமான பொருட்கள் செல்கின்றன. ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் 28மைல்தூர எல்லைப்பகுதி உள்ளது. எனவே மிகுதிப் பொருட்கள் ரஷ்யாவிலிருந்து போகிறது. எனவே, என்னால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் கிம்ஜான்உன் இன்றைய பேச்சு மேசையில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் ஒரு சிறந்த மனிதர்தான். நல்லவார்த்தைகளைப் பேசுவதனால் மட்டும்  மரத்திலுள்ள பழம் கீழே விழாது. மயிலே மயிலே என்றால் அது இறகு போடாது. அழகிய வார்த்தைகள் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கின்றார்.

சரி அப்ப என்னதான் நடந்துள்ளது…? இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைவிட நான் விரைவாக அமெரிக்கா செல்வதே சிறந்தது என்று முடிவெடுத்து ஊடகவியலாளர்களிடம்  வாஷிங்டன் பயணமாகிறேன் என்று கூறிவிட்டு 17,000 கி.மீ தூரம் பறந்து சென்று வாஷிங்டனை அடைந்தார்.அமெரிக்க அதிபர்

வடகொரிய அதிபரின் முடிவை வரவேற்று அந்நாட்டு ஊடகங்கள்  அனைத்தும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஒப்பந்தங்கள் ஏதுமின்றி முடிவுற்றுள்ள டிரம்ப் கிம் சந்திப்பு அணுஆயுத எதிர்ப்பாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், அமெரிக்க உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளுக்கும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட இடதுசாரி அரசுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போட்டி உக்கிரமடைந்து செல்வதையும் அது இரு முகாம்களுக்கும் இடையிலான உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தி உலகின் எப்பாகத்திலாவது ஏற்படும் சிறுசிறு பிணக்குகள்கூட பாரிய அணுஆயுத போருக்கு வழிவகுத்து உலகை அழித்துவிடுமோ…? என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

வளரும் நாடுகளுக்கு நிதியுதவியை வழங்கி அதன் மூலம் அந்த நாடுகளை தன்னுடைய நேசநாடாக மாற்றி தனது சந்தையை விஸ்தரிப்பதிலும் தனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதிலும் சீனா ஈடுபட்டுள்ளது. அதே நேரம் எண்ணெய் உற்பத்தி நாடுகளை தனது பணபலத்தைக் கொண்டும் ஆயுத பலத்தைக் கொண்டும் அச்சுறுத்தி, அவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அதன் மூலம் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

எனவே, அமெரிக்க திமிங்கிலமா…? அல்லது சீன ஒக்டோபசா…? இன்றைய சந்தைப் பொருளாதாரப் போட்டியில் வெற்றி பெறப்போகிறது என்ற மில்லியன் டொலர் கேள்வியே  சமாதானத்தை விரும்பும் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

Share:

Author: theneeweb