இனத்திற்குள் மத முரண்பாடுகள் இனத்தை மேலும் பலவீனப்படுத்தும் – சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு

தமிழ் மக்கள் தம் இனத்திற்குள் மதங்களால் முரண்பட்டுக்கொள்வது தமிழினத்தை மேலும் பலவீனப்படுத்தும், மக்கள் அனைவரும் சமத்துவமாகவும், சமூக நீதியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மன்னார் கேதீஸ்வரம் சம்பவம் தொடர்பில் அவ்வமைப்பின் அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
தமிழ் மக்கள் இன்றும் தமது மதங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்காகவும் உரிமையை பெற போராடி வருகின்றார்கள். இந்த நிலையில்  தம் இனத்திற்குள் மதங்களாலும், சாதிகளாலும், பிரதேசவாதங்களாலும் பிளவுப்பட்டு முரண்பட்டுக்கொள்வது எம்மினத்தை மேலும் பலவீனப்படுத்தும் எனவே  இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் அனைவரும் பொறுமையுடனும் நிதானத்துடனும் எமது செயற்பாடுகளை கொண்டு செல்ல வேண்டும்.
அறிஞர்கள்  கூறுவது போன்று மதங்கள் ஆறுகளை போன்றது, ஆறுகள் வெவ்வேறு வழிகளில் சென்றாலும் இறுதியில் கடலில் சங்கமிப்பது போன்றே மதங்களும் மக்களை  வெவ்வேறு நல்வழிகளில் அழைத்துச் சென்றாலும் ஈற்றில் ஒரிடத்தையே  அடைகின்றன. எனவே  மக்கள் மதங்களை கடந்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ளவேண்டும். இது காலத்தின் கட்டாயம். பலவீனப்பட்டுள்ள ஓரினம் தனக்குள்ளும் மதங்களால் பிளவுப்பட்டு இருக்க முடியாது. எனத் தெரிவித்துள்ள அவர்
திருக்கேதீஸ்வரம் நிகழ்வு கவலையினையும், வேதனையினையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஒரு சிலரின் நடவடிக்கைகளால் நாம் ஒட்டுமொத்த அந்த மதம்சார்ந்த அனைவரையும் குற்றம் சுமத்துவதோ, கருத்துக்களால் அவர்களின்  மனங்களை காயப்படுத்துவதனையோ விடுத்து. சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்றும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Share:

Author: theneeweb