நுண் நிதி நிறுவனங்களின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச மகளிர் தினத்தன்று பாரிய ஆர்ப்பாட்டம்

நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாட்டால் பெண்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதனை கண்டித்தும் நுண்நிதி நிறுவனங்களின் பிடியில் சிக்கியுள்ள பெண்களை அரசு மீட்க வேண்டும்  என்பதை வலியுறுத்தி உழைக்கும் பெண்கள் முன்னணியினால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த முன்னணியினர் இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

 

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக நாம் பல போராட்டங்களை நடத்தியிருந்தோம். எனினும் இதுவரை ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில பெண்களின் ஒரு லட்சத்திற்குட்பட்ட கடனை மாத்திரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏனைய கடனைப்பற்றிய அறிவுறுத்தல்களும் எங்கள் கிராமங்களில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படவில்லை.

வட மாகாணத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பெண்களை குழுவாக தயார் செய்து அவர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களது வருமானம் பற்றி எந்தவிதமான ஆய்வும் இன்றி கடன்கள் வழங்கப்படுகின்றது.

பெண்கள் ஒரு வங்கியில் எடுத்த கடனை கட்டமுடியாமல் இருக்கும்போது மற்றைய வங்கியில் கடனைப்பெறுகின்ற நிலை காணப்படுகின்றது.

இவ்வாறு கடனைக்கட்டமுடியாத பெண்கள் பலர் சீரழியும் நிலை காணப்படுகின்றது.மேலும் பிள்ளைகளுக்கு சரியான உணவு வழங்கப்படுவதில்லை. பாடசாலைக்கு ஒழுங்கான முறையில் அனுப்புவதில்லை என தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி அனைதுலக பெண்கள் தினத்தில் பாரியளவில் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்த நாம் தீர்மானித்துள்ளோம். வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் மட்டக்களப்பிலும் பொலனறுவையிலும் இப்போராட்டம் சம நேரத்தில் இடம்பெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

Share:

Author: theneeweb