“ஆணுக்குப்பெண் சரிநிகர்”

கருணாகரன் —

“ஆம்பிளைக்கூலி, ஆளுக்கு ஆயிரத்து நானூறுப்படி நாலு பேருக்கும் ஐயாயிரத்தறுநூறு. மூண்டு பொம்பிளைக்கூலியும் ஆளுக்கு ஆயிரம்படி மூவாயிரம். ஆக மொத்தம் எட்டாயிரத்து அறுநூறு” என்று கணக்குச் சொன்னார் பழனி.

பண்ணையில் வழமையாக இரண்டு பேர்தான் வேலை செய்வதுண்டு. ஒரு ஆணும். ஒரு பெண்ணும். ஏதாவது வேலைகள் கூடுதலாக இருந்தால் மட்டும் வெளியிலிருந்து அதுக்குத் தோதான ஆட்கள் கூப்பிடப்படும். தோட்ட வேலை, மாடுகளைப் பராமரிப்பது, பால் எடுப்பது, தென்னைகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, பெரிய தென்னைகளிலிருந்து விழும் தேங்காய்களை உரித்து சந்தைக்குக் கொண்டு போவது, வளவு துப்புரவாக்குவது என்று ஏகப்பட்ட வேலைகள். எல்லாத்துக்கும் பழனிதான் பொறுப்பு. இப்பொழுது இரண்டு நாட்களாக கொஞ்சம் கூடுதலான வேலைகள். அதற்காக நான்கு ஆண்களும் மூன்று பெண்களும் வந்திருந்தனர். அந்தக் கூலியைப் பற்றியே பழனி சொன்னார்.

பழனி சொன்ன கணக்கின்படி காசை எண்ணிக் கொடுத்து விட்டு எழுந்த சிவநேசனிடம் மகள் கேட்டாள், “ஏனப்பா ஆம்பிளையளுக்கு கூடுதலாகக் காசு. பொம்பிளையளுக்கு குறைவாக இருக்கே?” என்று.

“அது அப்பிடித்தான். ஆம்பிளைக்கூலி கூடத்தானிருக்கும். பொம்பிளையளுக்கு கொஞ்சம் குறைவு” என்றார் சிவநேசன்.

“அதுதான் ஏனப்படி என்று கேட்கிறேன்” என்றாள் மகள்.

மகளுடைய இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை சிவநேசன். அவளுடையமுகத்தில் மாறுதல்கள் உண்டாகியிருப்பதைக் கவனித்தார். ஆனாலும் சமாளித்துக் கொண்டு, “அது ஊர் வழக்கம். நாங்கள் மட்டும் அதை மீறலாமா? அது பிறகு வம்பாகி விடும்” என்றார்.

“எது வம்பாகும்? ஊர் தப்பாக ஒண்டைச் செய்தால் நாங்களும் அப்படிச் செய்ய வேணுமா? நாங்கள் அதைச் சரிப்படுத்த வேண்டாமா?”

மகளுடைய கேள்வி நியாயமாகத்தான் பட்டது. ஆனால் அதை எப்படிச் செய்வது? எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை. அப்படி எதையாவது மாறுதலாகச் செய்ய முற்பட்டால் அதைப்பற்றி ஆயிரமாகக் கதைப்பார்கள். அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கவும் முடியாது. அதற்கெல்லாம் விளக்கம் சொல்லிக் கொள்ளவும் முடியாது. அப்படி விளக்கம் சொன்னாலும் அதையெல்லாம் கேட்டுப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ஆனால், மகள் சொல்லும் நியாயத்தைத் தள்ளவும் முடியாது என்று மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

“இந்தா பாருங்கப்பா, எங்களுடைய பணியிடத்தில எல்லாருக்கும் ஒரே மாதிரித்தானே சம்பளம். அவரவர் வேலைக்குத்தான் சம்பளமே தவிர, ஆண்களுக்கு ஒரு மாதிரியும். பெண்களுக்கு இன்னொரு மாதிரியும் எண்டில்லை. அண்ணியும் அண்ணாவும்கூட பள்ளிக்கூடத்தில ஒரே சம்பளம்தானே எடுக்கினம்?”

மகள் சொல்லும் உண்மை சிவனேசனுடைய நெற்றிப் பொட்டில் பளிச்சென அடித்தது. ஆனாலும் அதை ஏற்றுக்கொள்வதக்கு ஏனோ இன்னும் முடியாமலிருந்தது.

“அதெல்லாம் அரச உத்தியோகம். மூளையால வேலை செய்யிறது. இது அப்பிடியில்லை. உடம்பால செய்யிற வேலைகள். உடல் உழைப்பில ஆம்பிளையளைப்போலப் பொம்பிளையள் வேலை செய்யேலாது. எந்தப் பொம்பிளையாவது கடலுக்குப் போய் வலை படுக்கேலுமா, மீன் பிடிக்கேலுமா? இல்லையெண்டால், மரம் ஏறித் தேங்காய் பறிக்க முடியுமா? ஏன், வயற்காவலுக்குத்தான் போகமுடியுமோ! எங்களுக்குக் கிணறு வெட்டேக்கை பாத்தனிதானே, மாயழகு ஆட்கள் கிணத்துக்க நிண்டு பிக்கான் அடிக்க, அவன்ரை மனிசியாக்கள் மேல நிண்டு சேறிழுத்ததுள். அதுகள் கிணத்துக்குள்ள இறங்கிப் பிக்கான் அடிக்கேலுமா? இதுக்காகத்தான் ஆம்பிளையளுக்கு வேறாகவும் பொம்பிளையளுக்கு வேறாகவும் எண்டு கூலியைப் பிரச்சு வைச்சிருக்கு” என்றார் சிவநேசன். மகள் சொல்வதில் உள்ள நியாயத்தைப்போல தன்னிடமும் ஒரு நியாயம் உண்டென்ற திருப்தி உண்டானது.

“அப்பா இது தப்பு எண்டுதான் சொல்கிறன். ஆனால் இப்பிடித்தான் நியாயங்கள் சொல்லப்படுது. தனியார் நிறுவனங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரித்தான் சம்பளம். அங்கும் உடல் உழைப்புத்தான் செய்யப்படுது. இங்க பிரச்சினை என்ன எண்டால், நீங்கள் பதிவு செய்யாமல், நிறுவன மயப்படாமல் சமூக வழமை எண்ட பாதுகாப்பான வட்டத்துக்குள்ள நிண்டு கொண்டு நியாயம் பேசுறீங்கள். ஊருக்குள்ள வேலைக்கு ஆட்களைப் பிடிக்கிற எல்லாரும் இப்பிடித்தான். உண்மையில எந்த வேலைக்கு ஆட்களைக் கூப்பிட்டாலும் அவர்களுடைய வேலைக்கெண்டுதான் சம்பளம் குடுக்க வேணுமே தவிர, ஆண், பெண் எண்டு பார்த்துக் குடுக்கக்கூடாது. அப்பிடிக் குடுத்தால் அது முழுப் பிழை. உழைப்பைச் சுரண்டுவதுக்கும் பாரபட்சம் பாக்கிறதுக்கும் சமூக வழமை எண்ட பாதுகாப்பான வட்டம் எல்லாருக்கும் வலு வசதியாக உதவுது. இது உங்களுடைய அறிவுக்குத் தப்பாகப் படுகுதா இல்லையா அப்பா?”

மகள் வேலை செய்யும் இடம்தான் இப்படியெல்லாம் அவளைக் கதைக்க வைச்சிருக்கு என்று பட்டது சிவநேசனுக்கு. பெண்களுடைய நலன்களைக் கவனிக்கின்ற அமைப்பொன்றில் வேலை செய்கிறாள். அதுதான் அவள் அப்பிடிச் சிந்திக்கிறாள் என்று எண்ணினார். அவளைப் படிப்பிக்கும்போது, அவளுடைய சுட்டித்தனங்களையும் கெட்டித்தனங்களையும் பார்த்துப் பெருமைப்பட்டிருக்கிறார். விவாதக் களங்களில், போட்டிகளில் எல்லாம் அவள் அநேகமாக வெற்றிகளையே பெற்றிருக்கிறாள். அதைப் பார்த்தபோது பெருமையாகவும் சந்தோசமாகவும் இருந்தது. ஆனால், அதெல்லாம் இப்படி வந்து தன்னையே சோதிக்கும் என்று அவர் நினைத்திருக்கவில்லை.

எதுவுமே சொல்லாமல் “ம்…” என்று மெல்லியதாகத் தலையசைத்தார். எதுக்கும் இதைப்பற்றிப் பிறகு கதைப்பம். இப்ப கொஞ்சம் வேலை இருக்கு. நீ புறப்படு” என்று சொல்லிக் கொண்டு அவர் எழுந்தார்.

அவர் அப்படித்தான் செய்வார் என்று அவள் ஏற்கனவே மதிப்பிட்டிருந்தாள். தங்களுக்கு நெருக்கடிகள் வந்து திணறவேண்டி வந்தால், நியாயங்களை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் என்றால் இப்படித்தான் ஏதாவது சாட்டுப்போக்குகளைச் சொல்லித் தப்புவது. அல்லது அதைப்பற்றிப் பேசுவதை ஒத்திப்போடுவது.

இதற்குமேல் வலிந்து பேசி அப்பாவைக் குழப்ப வேண்டாம் என்று அவள் புறப்பட்டாள். ஆனாலும் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. ஊரிலும் உலகத்திலும் நடக்கிற அநீதிகளுக்கும் பாரபட்சங்களுக்கும் எதிராகப் பேசிக் கொண்டு, வீட்டில் அதை நடைமுறைப்படுத்த முடியாமலிருப்பதை நினைக்க வேட்கமாகவும் தோற்றுப்போனதாகவும் பட்டது. அது ஆகப் பெரிய அநீதி என்றும் தோன்றியது. ஆனால் இந்த நிலைமையில அப்பாவோடு இதற்குமேல் விவாதிப்பது இந்தச் சூழலில் நல்லதில்லை. அவருடைய மனதை அது பாதிக்கும். சிலவேளை அளவுக்கதிகமான அளவுக்குப் பேசி மனமுறிவுகளும் உண்டாகலாம். அம்மா இறந்த பிறகு, அந்த இழப்பை உணர்ந்து சோர்ந்து விடக்கூடாதென்று மிகக் கவனமாக வளர்த்தவர். ஒரு நல்ல அப்பாவாக, நல்ல நண்பராக இருப்பவரிடம் இப்படிப் பேசுவது சரியாக இருப்பதாகவும் சரிதானா என்றும் அவளுள் கேள்விகளும் குழப்பங்களும் உண்டாகின.

அவர் எப்பொழுதும் எவருக்கும் திட்டமிட்டு கெடுதிகள் செய்யும் ஆளல்ல. ஆனாலும் சமூக வழமைகளைக் கடந்து வரமாட்டார். அவற்றை மறுதலிக்க மாட்டார். அதுதான் அவருடைய பிரச்சினை. இதைச் சொன்னாலும் இலகுவில் ஏற்றுக் கொள்ளமாட்டார். ஆனால், அவருடைய மகளாக நானிருக்கிறேன். அவர் விடும் தவறுகளைச் சரி செய்ய. அடுத்த தலைமுறை இதை மாற்றும் என்பதற்கான அடையாளமாக. என்று எண்ணிக் கொண்டு தன்னைச் சமாதானப் படுத்தினாள்.

ஆனால், இதுக்கெல்லாம் ஒரே தீர்வு என்பது எல்லாவற்றையும் சட்ட ரீதியாக ஆக்குவதேயாகும். நிறுவன ரீதியாக மாற்றும்போதே சட்டவலுவைப் பெறக்கூடியதாக இருக்கும். தொழிலாளர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு, அவர்களுடைய கூலி அல்லது சம்பளம் மற்றும் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நிறுவனங்களாக மாற்றும்போதே வசதியாக இருக்கும் என்று எண்ணினாள். அப்படி நிறுவன ரீதியாக மாற்றினால் அதற்குரிய சட்டங்களும் விதிகளும் உருவாகும். அது அவர்களைப் பாதுகாக்கும். அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும். இதுதான் ஓரளவுக்குச் சாத்தியமான வழி. ஆனால், இதை எப்படிச் சாத்தியப்படுத்துவது? இதற்கு அரச அங்கீகாரம் வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் சட்டமூலம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு யார் முன்வருவர்? யாருக்கு அப்படியான புதிய சிந்தனைகள் உண்டு?

அரச உத்தியோகங்களில் ஆண், பெண் என்ற அடிப்படையில் வேலைகள், சம்பளம் போன்ற எந்த விடயங்களும் நோக்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், குழந்தைப்பேறுகால விடுமுறை உள்ளிட்ட சில சலுகைகள் பெண்களுக்கு விசேடமாக உண்டு. ஆனால் அங்கே இன்னும் உள்ள பிரச்சினை வண்டி ஓட்டுநர், அலுவலக உதவிப்பணியாளர், காவலர் போன்ற பணிகளுக்கெல்லாம் ஆண்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். இதையும் கடக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் பெண்களுக்கான உரிமைகள் ஓரளவுக்குண்டு. இல்லையென்றால் தொழிற்சங்கங்கள், பெண்கள் நல உரிமை அமைப்புகள் அவர்களுக்காகக் குரல் கொடுக்கும்.

இந்த மாதிரிக் கிராமங்களிலும் நகர்களிலும் தினக்கூலிகளாகவும் வீட்டுப் பணிப் பெண்களாகவும் இருப்போருக்கு எந்தப்பாதுகாப்பும் கிடையாது. கூலியும் ஒழுங்காகக் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் அது குறைவாகவே இருக்கும். நிச்சயமாக ஆண்களை விடக் குறைவாக. இது பெரிய அநீதி. ஆனால், இதைப்பற்றி யாரும் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. சிவநேசன் எண்ணுவதைப்போல இதுவொரு சமூக வழமை என்ற கோணத்திலேயே பார்க்கிறார்கள். சமூக வழமை என்றால் அதை அப்படியே எந்தக் கேள்வியும் இல்லாமல் அனுசரிக்கலாம் என்ற நம்பிக்கை. அதில் அறம் குறித்த கேள்விகளுக்கு இடமில்லை. நியாயத்தைப்பற்றிய விளக்கங்கள் அவசியமற்றவை.

இன்று உலகெங்கும் ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்று பேசப்படுகிறது. “ஆணுக்குப்பெண் சரிநிகர்” என்று பாரதி பாடியே நூறு ஆண்டுகளாகப் போகிறது. முன்பைப்போல வீட்டுக்குள் எந்தப் பெண்ணும் முடங்கியிருப்பதில்லை. அப்படி அவர்களை முடக்கி வைக்கவும் முடியாது. கல்வியும் தொழிலும் வாழ்க்கைச் சூழலும் சட்டமும் வாசல்களைத்திறந்து பெண்களைச் சமூக வெளிக்குக் கொண்டு வந்துள்ளது.

ஆனாலும் ஊர்களிலும் நகர்ப்பகுதிகளிலும் கூலி உழைப்பாளிப் பெண்களுக்கு மட்டும் நியாயமும் ஒளியும் வெகு தொலைவிலேயே உள்ளது. இதைக்குறித்துப் பேசுவதற்கு யார் முன்வருவது? மாற்றங்கள் எல்லாத் தளங்களிலும் நிகழும்போதே விடுதலை அழகாகும். சாத்தியமாகும்.

000

Share:

Author: theneeweb