போர் மறுவாழ்வு நடவடிக்கை: இலங்கை பிரதமர், இடையே கருத்து வேறுபாடு

இலங்கையில் போர் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்த ஐ.நா.வின் பரிந்துரைகளை செயல்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு  ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக, இலங்கை அரசு மேற்கொண்ட உள்நாட்டுப் போரின் போது, போர் குற்றங்கள் நிகழ்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை செயல்படுத்துவது தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சார்பாக பல்வேறு பரிந்துரைகள் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இலங்கை பிரதமர் அலுவலகமும், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகமும் இணைந்து வியாழக்கிழமை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

அதில், நீண்ட காலத்துக்கு, நிலைத்து நிற்கும் வகையிலான மறுவாழ்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2015-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் தெரிவித்த பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தற்போது நடைபெறும் அந்த ஆணையத்தின் 40-ஆவது கூட்டத்தில் முன்வைப்போம் என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐ.நா. பரிந்துரை தொடர்பாக இலங்கை அ ஜனாதிபதி சிறீசேனா கடந்த புதன்கிழமை கருத்து கூறியிருந்தார். அதற்கு மாறாக கூட்டறிக்கை அமைந்துள்ளது.
ஐ.நா.வின் நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக, அதிபர் அலுவலகம் சார்பில் ஐ.நா.வுக்கு இந்த மாத இறுதியில் குழு அனுப்பி வைக்கப்படும் என்று சிறீசேனா கூறியிருந்தார். இலங்கையின் கடந்த கால கசப்பான சம்பவங்களை தோண்டிக் கொண்டிருக்காமல், தற்போதைய பிரச்னைகளுக்கு சுயமாகத் தீர்வு காண்பதற்கு ஐ.நா. அனுமதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை – அமெரிக்கா சார்பில் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலான பரிந்துரைகளில் சிலவற்றை இலங்கை அரசு செயல்படுத்தியுள்ளது. அதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆய்வு செய்யவுள்ளது. இதற்கிடையே பரிந்துரைகளை அமல்படுத்துவதில் இலங்கை அரசு காலம் தாழ்த்தி வருகிறது தமிழ் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Share:

Author: theneeweb