சென்னையில் சிறப்பாக நடைபெற்ற தினமணி மகளிர் மணியின் நட்சத்திர சாதனையாளர் விருது வழங்கும் விழா

சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தினமணி மகளிர் மணி சார்பில் நட்சத்திர சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) சிறப்பாக நடைபெற்றது.

தினமணி சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கப்படுவது போல, தினமணியின் இணைப்பான மகளிர் மணி சார்பில் உலக மகளிர் தினத்தன்று  சாதனை மகளிருக்கு விருது வழங்கி கௌரவிப்பது என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில், தமிழ்த் திரையுலகில் 1950 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் தங்களின் நடிப்பாற்றலால் மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்ற  நடிகைகள் ஒன்பது பேருக்கு சாதனை நட்சத்திரங்கள் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.

உலக மகளிர் தினமான வெள்ளிக்கிழமை (மார்ச் 8) சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் வைஜயந்தி மாலா,  சௌகார் ஜானகி, ஜமுனா, சாரதா, காஞ்சனா, ராஜஸ்ரீ,  கே.ஆர்.விஜயா,  வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் குமாரி சச்சு ஆகியோருக்கு விருது  மற்றும் பொன்முடிப்பு  வழங்கப்பட்டது.

நிகழ்விற்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லக்ஷ்மி மேனன் வரவேற்புரை வழங்கினார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, விருதுகளை வழங்கினார். தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.

இறுதியாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சந்தைப் பிரிவு முதுநிலை துணைத் தலைவர் விக்னேஷ் குமார் நன்றியுரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Share:

Author: theneeweb